

மக்களவைத் தேர்தலில் சிறு நூல்கள் மூலம் பரப்புரை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. பெரியாரின் கொள்கைகள் சார்ந்து நூல்களை வெளியிடுகிற ‘புதிய குரல்’ வெளியீட்டுக் குழு, கடந்த மக்களவைத் தேர்தலில் வெளியிட்டதைப் போலவே, 2024 தேர்தலை ஒட்டியும் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘தேர்தல் 2024: நிலைப்பாடும் கோரிக்கைகளும்’ என்ற தலைப்பிலான இப்புத்தகம், கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சிக்கிறது.
மதம், மொழி, பண்பாட்டு நோக்கில் இந்தியாவுக்கு அமைந்த பன்மைத் தன்மையை அகற்றுவதாகவும் தனியார் பெருநிறுவனங்களுக்கு மட்டும் சாதகமாகப் பொருளாதாரக் கொள்கையை வளர்த்தெடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக அணுகுமுறை உள்ளது என்பது இந்நூல் முன்வைக்கும் அடிப்படைச் செய்தி.
குறைந்தபட்ச சேமிப்புத் தொகை, கூடுதல் பரிவர்த்தனைச் செயல்பாடுகள், குறுந்தகவல் சேவை போன்றவற்றுக்காகப் பொதுத்துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் 2018 இலிருந்து ரூ.35,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.
மக்களின் சேமிப்பைச் சுரண்டும் இந்த நடவடிக்கை, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது என்பது போன்ற புள்ளிவிவரங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ‘உள்நாட்டில் எழும் கலவரங்களையே சரியாக அடக்க இயலாத பாஜக அரசு, வெளிநாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறது. அது பாஜக கட்டமைக்கும் பிம்பம் மட்டுமே’ எனவும் இந்நூல் சாடுகிறது.
குற்றச்சாட்டுகளை அடுக்குவதோடு நில்லாமல், இந்தியாகூட்டணிக் கட்சிகளின் வாக்குறுதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படுதல், மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து அதிகாரங்களைப் பயன்படுத்தும் ஒத்திசைவுப் பட்டியலை (concurrent list) அகற்றுதல், அனைத்து மொழிகளும் ஆட்சி மொழி ஆக்கப்படுதல், மண்டல் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் செயல்படுத்தப்படுதல் போன்ற கோரிக்கைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.