Published : 16 Apr 2024 09:40 AM
Last Updated : 16 Apr 2024 09:40 AM

இருண்ட காலங்களில் பாடுவது எப்படி?

தனிமையின் உடல்நலப் பாதிப்புகள் பற்றி ‘நேச்சர்’ ஆய்விதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை ஒன்று பல்வேறு திறப்புகளை வழங்குகிறது. சமூகத் தொடர்பு இல்லாத ஒரு நிலை இதய நோய், மறதி உள்ளிட்டவற்றுக்கு அதிகரித்துவரும் ஆபத்துக் காரணியாக எப்படி மாறிவருகிறது என்பதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.

தனிமையின் விளைவுகள் மூளையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சி, சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துவருகிறது. சமூகத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் போகும்போது, மனித உடல் வெளிப்படுத்தும் சமிக்ஞைகளுக்குக் காரணமான நரம்பியல் இயக்கமுறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க அளவுக்கு இத்துறை விரிவடைந்துவந்தாலும் இன்னும் சித்திரம் முழுமை அடையவில்லை. ஆனால், மூளையின் பல அம்சங்களை, அதன் அளவு முதல் நியூரான்களுக்கு இடையேயான தொடர்புகள் வரை தனிமை மாற்றக்கூடும் என ஆரம்பகட்ட முடிவுகளிலிருந்து அறிய முடிகிறது.

உலகம் முழுவதும் உள்ள வயது வந்தவர்களில் மூன்றில் ஒருவர், வெகுவாக அல்லது ஓரளவு தனிமையை உணர்வதாக 2023இல் மெட்டா (Meta) மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது; அதே ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ‘அழுத்தும் உடல்நல அச்சுறுத்தல்’ என்கிற பெயரில் தனிமை பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

மொழியில் தனிமை: ஒரு சொல்லாக, தனிமை (loneliness) பொ.ஆ. (கி.பி) 16ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் ஆங்கில மொழியில் பயிலத் தொடங்கியது. இலக்கியத்தில் இச்சொல்லின் தொடக்ககாலப் பயன்பாடு, (‘அஃப் கோர்ஸ்!’) ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’டில் காணப்படுகிறது.

16ஆம் நூற்றாண்டு நெடுகிலும், பாவச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக நரகம், கல்லறை போன்ற தனிமையான இடங்களில் இருப்பதைப் போல் கற்பனை செய்ய மக்கள் தூண்டப்பட்டனர். 17ஆம் நூற்றாண்டில், இச்சொல் உறக்கத்தில் இருந்தது.

ஆங்கில இயற்கையியலாளரான ஜான் ரே, ‘அண்டை நாடுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள’ இடங்களையும் மக்களையும் விவரிக்கும் சொல்லாக வரையறுத்து, அரிதாகப் பயன்படுத்தப்படும் சொற்களின் பட்டியலில் இதைச் சேர்த்தார். அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு மீண்டும் இச்சொல் உறக்கத்தில் இருந்தது. சாமுவேல் ஜான்சனின் ‘A Dictionary of the English Language’ (1755) தான், ‘தனித்து இருக்கும் நிலை’ என்கிற பொருளில் நவீனப் பயன்பாட்டுக்கான தொடக்கமாகத் தனிமையை வரையறுத்தது.

19ஆம் நூற்றாண்டில், ‘தனிமை’ என்பதன் பொருள், மதத்துடனான அதன் பிணைப்பை விடுவித்துக்கொண்டு, நவீனத்துவத்தின் எழுச்சியால் ‘அந்நியமாதல்’ (alienation) என்கிற புதிய பொருளை ஏற்றது. 1800களுக்குப் பிறகு, தொழிற்புரட்சியின் விளைவால் கவனம் பெற்ற கார்ல் மார்க்ஸின் ‘அந்நியமாதல்’ என்கிற கருத்தாக்கம், தீவிரமாக விவாதிக்கப்பட்டது: ‘மார்க்ஸால் மிகத் திட்டவட்டமான பொருளில் கையாளப்பட்ட ‘அந்நியமாதல்’ என்ற கருத்தாக்கம் இன்று மார்க்ஸியத்துக்கு முற்றிலும் புறம்பான பல்வேறு முதலாளியச் சிந்தனையாளர்களின் தத்துவ விளக்கங்களுக்கான அடித்தளமாகிவிட்டது.

உளவியல் கோளாறுகள், பதற்றம், வேதனை, ஆளுமை நசிவு, தனிமை, நிரானுகூலங்கள், மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஆகிய அனைத்தும் ‘அந்நியமாதல்’ என்ற கருத்தாக்கக் கூரையின் கீழ் ஒதுங்கிக்கொள்கின்றன,’ என இக்கருத்தாக்கம் கையாளப்பட்ட விதத்தை ‘அந்நியமாதல்’ (1979) நூலில் எஸ்.வி.ராஜதுரை விளக்குகிறார்.

அரெண்டின் ‘தனிமை’: இருபதாம் நூற்றாண்டில், ஹானா அரெண்ட் (Hannah Arendt) தனிமையைநோக்கிய முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கையிலெடுக்கிறார். ஜெர்மானிய-அமெரிக்கவரலாற்றாசிரியரும் தத்துவவியலாளருமான அரெண்ட், சென்ற நூற்றாண்டின் செல்வாக்குமிக்க அரசியல் கோட்பாட்டாளர்களில் ஒருவர்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் நாஸியிசமும் ஸ்டாலினிசமும் எப்படி முதன்மையான மொத்தத்துவ அரசியல் இயக்கங்களாக மேலெழுந்தன என்பதுபற்றிய ஆய்வான ‘மொத்தத்துவத்தின் தோற்றுவாய்கள்’ (‘The Origins of Totalitarianism’, 1951) என்கிற நூல் இவரது மிக முக்கியமான பங்களிப்பாகும்.

மொத்தத்துவம் என்பது எதிர்க்கட்சிகள் - சித்தாந்தங்களைத் தடைசெய்யும்; மக்களின் பொது- தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தும் ஓர் அரசியல் கோட்பாடும் அரசாங்க வடிவமும் ஆகும்.

1950களில், மெக்கார்த்தியிசம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கார்ல் மார்க்ஸ் பற்றிய நூல் ஒன்றை எழுதும் முயற்சியில் அரெண்ட் ஈடுபட்டிருந்தார். அந்த நிலையில், சித்தாந்தம் மற்றும் தீவிரத்தன்மை (ideology and terror) ஆகியவற்றுடனான தனிமையின் தொடர்பு பற்றிச் சிந்தித்தார்: ‘மொத்தத்துவம் அல்லாத உலகில், மொத்தத்துவ ஆதிக்கத்துக்கு ஆண்களைத் தயார்படுத்துவது தனிமைதான்; ஒரு காலத்தில், முதுமை போன்ற நிலைகளில் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருந்த அனுபவம், நம் நூற்றாண்டில் தொடர்ந்து வளர்ந்துவரும் மக்களின் அன்றாட அனுபவமாகிவிட்டது.’

மொத்தத்துவத்தின் இயங்குமுறை: மொத்தத்துவத்தின் கூறுகள் பலவாறாக இருக்கலாம்; ஆனால், மொத்தத்துவ அரசாங்கத்தின் சாரம் தனிமையில் உறைந்திருப்பதாக அரெண்ட் கண்டறிந்தார். ஏனெனில், மனிதத் தொடர்புகளிலிருந்து ஒருவரைத் தனிமை துண்டித்துவிடுகிறது. தனிமை என்பதற்கு அவரது தாய்மொழியான ஜெர்மனில் அரெண்ட் பயன்படுத்திய சொல்லின் (Verlassenheit) பொருள், ‘கைவிடப்பட்ட ஒரு நிலை’ என்பதாகும்.

தனிமை என்பது ‘மனிதனின் மிகவும் தீவிரமான - அவநம்பிக்கையான அனுபவங்களில் ஒன்று’ என அவர் வாதிட்டார், ஏனென்றால், மனிதர்களாகச் செயல்படுவதற்கான முழுத் திறனையும் தனிமையில் உணர முடியாது. தனிமையை அனுபவிக்கும்போது, வேறு எதையும் அனுபவிக்கும் திறனை நாம் இழக்கிறோம்.

மொத்தத்துவத்தின் சாரம் தனிமையில்தான் அடங்கிஇருக்கிறது என்பதை விளக்க, தனிமைப்படுத்தலில் (isolation) இருந்து தனிமையையும், தனித்திருத்தலில் (solitude) இருந்து தனிமையையும் அரெண்ட் வேறுபடுத்தினார். படைப்பூக்கச் செயல்பாட்டில் ஈடுபட தனிமைப்படுத்திக்கொள்ள முடியும்; ஒருநூலை வாசிப்பதற்குக்கூடச் சிறிதளவு தனித்திருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், தனிமை மனிதத் தொடர்புகளில் இருந்தும் தோழமையின் அனைத்துநிலைகளில் இருந்தும் ஒருவரைத் துண்டித்துவிடுகிறது. மொத்தத்துவ இயக்கங்கள் சித்தாந்தங்களைக் கொண்டு மக்களைத் தனிமைப்படுத்துகின்றன. மொத்தத்துவத்தின் ‘இரும்புப் பிடி’ என அரெண்ட் பெயரிடும் நிலை, மனிதனின் இயக்கத்தை, செயல்பாட்டை, சிந்திக்கும் திறனை அழிக்கிறது; அனுபவம், சிந்தனை என எதுவும் சாத்தியமில்லாத ஒரு வனாந்தரமாக உலகம் மாறுகிறது.

உலகத்தைப் பற்றி நாம் சிந்திக்கும் விதம் மற்றவர்களுடனும் நம்முடனும் நாம் கொண்டிருக்கும் தொடர்புகளைப் பாதிக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் அனுபவத்திலும் ஒரு ரகசிய அர்த்தத்தைப் புகுத்துவதன் மூலம், சித்தாந்த இயக்கங்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் தங்கள் கூற்றுகளுக்கு ஏற்ப யதார்த்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அத்தகைய சூழலில், ஒருவர் அவரது சொந்த அனுபவங்களின் யதார்த்தத்தை நம்ப முடியாது என்பதே இதன் பொருள்.

இருண்ட காலங்களில் பாடுவது: ஒழுங்கமைக்கப்பட்ட தனிமை, சித்தாந்தத்திலிருந்து வளர்க்கப்பட்டு, கொடுங்கோன்மைக்கு இட்டுச் செல்கிறது; மேலும் உண்மை – புனைவு இரண்டின் வேறுபாட்டை அறியும் ஒருவரின் திறனை அழித்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் நிறுத்துகிறது. தனிமையில் சிந்திக்கும் திறன் மட்டுப்பட்டுவிடும் என்பதால், ஒருவரால் தன்னுடன் உரையாடலை மேற்கொள்ள முடியாது.

கருத்தியல் சிந்தனை நம்மை வாழ்வனுபவத்தின் உலகத்திலிருந்து விலக்கிவைக்கிறது, கற்பனையை வற்றச் செய்கிறது, பன்மைத்தன்மையை மறுக்கிறது,அர்த்தமுள்ள வழிகளில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள அனுமதிக்கும் இடைவெளியை அழிக்கிறது.

அரெண்ட் பட்டியலிடும் மொத்தத்துவத்தின் நிலைகளை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இருள் சூழும் இக்காலகட்டத்தை நமது பின்னணியில் விளக்குவதற்கு உதாரணங்கள் தேவை இல்லை.

“இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா? / ஆம் இருண்ட காலங்களைப் பற்றி பாடுவதும்கூட இருக்கும்” என்கிற பெர்டோல்ட் ஃப்ரெஹ்ட்டின் வரிகளைப் பின்தொடர்வது ஒருவேளை நம்மை வெளிச்சத்துக்கு இட்டுச்செல்லலாம்!

அரெண்ட் பற்றி Aeon தளத்தில் வெளியான ஒரு கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது.

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x