சொற்களுக்குப் பின்னாலுள்ள அமைதி - கவிஞர் கலா ரமேஷ் நேர்காணல் | ஏப்ரல் 17 - சர்வதேச ஹைக்கூ தினம்

சொற்களுக்குப் பின்னாலுள்ள அமைதி - கவிஞர் கலா ரமேஷ் நேர்காணல் | ஏப்ரல் 17 - சர்வதேச ஹைக்கூ தினம்
Updated on
2 min read

வங்க மொழியில் ரவீந்திரநாத் தாகூராலும், தமிழில் பாரதியாராலும் அறிமுகமானது ஹைக்கூ.இன்றைக்கு இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக அளவிலான ஹைக்கூ நூல்கள் வெளிவருகின்றன. புணேயில் வசித்துவரும் கவிஞர் கலாரமேஷ் சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலத்தில் ஹைக்கூ எழுதுவதில் புகழ்பெற்றவர். உலகளவிலான ஹைக்கூ அமைப்புகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

சென்ரியு, தான்கா, ஹைபுன் வகைக் கவிதைகளையும் எழுதிவருகிறார். ‘திரிவேணி ஹைகை இந்தியா’ என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன்மூலமாக உலகெங்கும் எழுதப்படும் சிறந்த ஹைக்கூ கவிதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வரும் காலத்தில் இந்தியமொழிகளில் எழுதப்படும் சிறந்த ஹைக்கூ கவிதைகளை, உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவருடனான நேர்காணல்:

ஹைக்கூ உங்களுக்குப் பிடித்திருப்பதற்கு என்ன காரணம்?

அது தரும் அமைதி. ஓர் இசைக் கோவையில் இசை வாசிப்புக்கும் இன்னொரு வாசிப்புக்கும் இடையில்இருக்கிற அமைதியே இசையின் சிறப்பு என்று எப்போதும் நினைப்பேன். அதேபோல, ஹைக்கூவில் மூன்று வார்த்தைகளுக்குப் பிறகு இருக்கும் அமைதியும், அது நமக்குள் எழுப்பும் சிந்தனையும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தன. இன்னொரு விஷயம், ‘எதையும் தேவையில்லாமல் நீ கற்பனை செய்து கொண்டிருக்காதே; உன் கண்முன் நீ பார்த்ததை, ரசித்ததை, அனுபவித்ததை அப்படியே சொல்’ என்கிற ஹைக்கூவின் அடிப்படையான ஜென் தத்துவத்தை ஆழமாக உள்வாங்கிக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஹைக்கூ தொடர்பான உலக அமைப்புகளோடு உங்களுக்கு எப்படி அறிமுகம் உண்டானது?

இன்றைக்கு இருப்பதுபோல், அன்றைக்கு இவ்வளவு எளிய தகவல் தொழில்நுட்ப வசதியோ, இ-பேப்பர்களோ கிடையாது. இணையத்தில் எந்தவொரு ஹைக்கூ இதழைப் பார்த்தாலும் உடனே அதற்கு எனது கவிதைகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நிறைய இதழ்களில் என்னுடைய ஹைக்கூ வெளியானது. ‘சிம்ப்ளி ஹைக்கூ’ இதழில் வெளியான என் ஹைக்கூவைப் படித்துவிட்டு, ஜப்பானில் உள்ள வேர்ல்டு ஹைக்கூ கிளப்பின் தலைவர், கவிஞர் சுசுமு டகிகுச்சி என்னைத் தொடர்புகொண்டார். “ஹைக்கூவில் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?” என்று என்னிடம் கேட்டார். “ஒவ்வொரு இந்தியனும் ஹைக்கூன்னா என்னன்னு தெரிஞ்சிக்கணும். எழுதவும் தெரியணும்” என்றேன். “ஆஹா, நான் தேடிய ஆள் நீங்கதான்” என்று வேர்ல்டு ஹைக்கூ கிளப் செயல்பாடுகளில் என்னையும் இணைத்துக்கொண்டார்.

ஹைக்கூவை மாணவர்களிடம் கொண்டுசெல்லும் எண்ணம் ஏன் வந்தது?”

நம்மைவிட இயற்கையை ஆராதிக்கும், இயற்கையோடு இணைந்து இயங்கும் மனம் படைத்தவர்கள் குழந்தைகள். ஆகவே, அவர்களிடம் ஹைக்கூவைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.முதலில் ஒரு மணி பயிற்சியாக நடத்தும் முயற்சியில் இருந்தேன். மாணவர்களுக்குக் கற்பிக்கும் 16 மணி நேரத்துக்கான பாடத் திட்டத்தை உருவாக்கினேன்.

தற்போது இந்திய அளவில் ஹைக்கூவுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

தமிழிலும் மராட்டியிலும் ஏராளமான ஹைக்கூ கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். பஞ்சாபியில் வேறொரு பாணியில் ஹைக்கூ எழுதுகிறார்கள். இந்தியில் ஹைக்கூவைத் தத்துவம்போல் எழுதுகிறார்கள். குஜராத்தியிலும், மலையாளத்திலும், தெலுங்கிலும்கூட ஆர்வத்துடன் எழுதுகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிதைகள் சென்ரியுவாகவும், அரசியல் பார்வையுடனும் எழுதப்படுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in