Published : 06 Apr 2018 08:52 AM
Last Updated : 06 Apr 2018 08:52 AM

குரல் டெல்லியை உலுக்காமல் தண்ணீர் தமிழகம் வராதா?

கா

விரி பிரச்சினையில் நீதி வேண்டிப் போராடிக்கொண்டிருக்கிறது தமிழகம். கடந்த பிப்ரவரி 16-ல் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியபோதே, தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டது நமக்கு அதிர்ச்சியைத் தந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இது அடுத்த அதிர்ச்சி. ஆறு வாரம் முடிந்த பின்னர் ‘ஸ்கீம்’ என்ற செயல்திட்டம் குறித்த விளக்கத்தை உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்டிருக்கிறது. ‘ஸ்கீம்’ என்றால் மேலாண்மை வாரியம்தான் என்று எடுத்துக்கூறியும், ‘ஸ்கீம்’ என்பது மேலாண்மை வாரியத்தைக் குறிக்கிறது என்ற யதார்த்தம் இருந்தாலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதை மறுக்கிறார். ‘ஸ்கீம்’ என்பதை மாயமான் போன்றதாக்கிக் குழப்பமான விவாதங்களை வைப்பது ஏற்புடையதல்ல.

1956-ல் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ச் சிக்கல் சட்டத்தில் சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 6ஏ(2)-ன்படி ‘ஸ்கீம்’ என்பது ஆணையம் (Authority) என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பில் பக்கம் 337, பத்தி 290-ல் நடுவர் மன்றம் சுட்டிக்காட்டிய காவிரி மேலாண்மை வாரியம் பற்றியும், அதன் விவரங்கள், கூட்டங்கள் நடத்தும் முறை ஆகியவை பற்றியும் உச்ச நீதிமன்றமே விளக்கிக் கூறியிருக்கிறது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக வேறு ஏதாவது செயல் திட்டம் உருவாக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்றும் மத்திய அரசு கேட்டிருக்கிறது.

நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம் 1956-ன்படி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 262-ன்படி அனைத்து நதிநீர்ச் சிக்கல்களைத் தீர்க்க வழியிருந்தும் மத்திய அரசு அசட்டையாக இருந்தது. அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்தின் மூலமாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது இந்தப் பிரிவு.

இதன்படி மாநிலங்களிடையே பாயும் நதிகளைக் கட்டுப்படுத்துதல், நதிநீர்ச் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகியவற்றை மத்திய அரசு செய்ய முடியும். மேலாண்மை வாரியம் எப்படி அமைய வேண்டும், அதன் தலைவர்கள், உறுப்பினர்களின் எண்ணிக்கை என்று பல விஷயங்களை நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இந்தச் சட்டத்தின்படி நதிநீர் தாவா குறித்து மாநிலங்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனும் சூழல் உருவானால் மத்திய அரசு செவிசாய்த்து அதை அமைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களை அழைத்துப் பேசி முறையான அறிவிக்கையை வெளியிட வேண்டும். இப்படித் தெளிவான வழிமுறைகள் இருக்கும்போது இதையே ‘ஸ்கீம்’ என்று மத்திய அரசு எடுத்துக்கொண்டிருக்கலாம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பக்கம் 335-ல் பொறிமுறை(Mechanism) என்பதை காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நடுவர் மன்றத்தில் குறிப்பிட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை எடுத்துக்காட்டி அதையே உத்தரவின் சாரம் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக, பொறிமுறை, செயல் திட்டம் என்று குழப்பியது.

அதுமட்டுமல்ல, நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டத்தில் அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களும் உண்டு. அதிகார வரம்பு, செலவுகள், நிதி ஆதாரங்கள், கால அளவு மட்டுமல்லாமல் நதிகளுடைய நீர் சேமிப்பு, அணைகள் மீதான கட்டுப்பாடு, நீர்ப்பாசன மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு, படகுப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், மண் அரிப்பு, அருகிலுள்ள காடுகளின் பாதுகாப்பு என்று பல்வேறு விஷயங்களுக்கு இந்தச் சட்டத்தில் வழி இருக்கிறது.

உலகளவில் பன்னாடுகளுக்கு இடையில் பாயும் நதிகள் தொடர்பான நீர்ப் பகிர்வு மற்றும் தாவாக்களைத் தீர்க்க சர்வதேச சட்ட மையம் வெவ்வேறு கால கட்டங்களில் கூடி மூன்று வழிமுறைகளைச் சட்ட வடிவமாக இயற்றியுள்ளது. அவை ஹெல்சிங்கி கொள்கை, ஹார்மன் கோட்பாடு, பெர்லின் விதி. காவிரி தாவாவில் அனைத்துலக நதிநீர்ப் பயன்பாட்டுக்கான ஹெல்சிங்கி விதிகளையே உச்ச நீதிமன்றமும் நடுவர் மன்றமும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தீர்ப்புகளை வழங்கின. இந்த விதி மற்றும் கோட்பாட்டின்படிதான் நதிநீர் மேலாண்மை வாரியச் சட்டமும் உள்ளது.

பக்ரா-பியாஸ், நர்மதை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக மேலாண்மை வாரியங்கள் அமைக்கப்பட்டன. அப்படியிருக்க, காவிரியில் மட்டும் இந்தப் பாகுபாடு ஏன்? பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கிடையே சட்லஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் பிரச்சினை தீர்க்கப்பட்டது. அதேபோல டெல்லி - ஹரியாணாவுக்கு இடையிலான யமுனை நதிப் பிரச்சினைக்கும் முடிவு காணப்பட்டது.

ஏற்கெனவே நதிநீர் மேலாண்மை வாரியங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி சட்லஜ், பியாஸ், ரவி ஆகிய நதிகள் இந்தியாவின் பயன்பாட்டுக்கு என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. மற்ற நதிகளைப் பாகிஸ்தான் பயன்படுத்தும். இந்தியா பயன்படுத்திவரும் நான்கு நதிகள் குறித்தான பெருந்திட்டம் என்ற வகையில் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஒப்புதலாலும் முயற்சியாலும் இந்த மகா திட்டம் உருவாக்கப்பட்டது.

1966 நவம்பர் 1-ல் பஞ்சாப் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோது பக்ரா மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்படி பக்ரா நங்கல் திட்டத்தின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதிகாரம் பெற்ற சுயாட்சி வாரியம் இது. அதேபோல, பியாஸ் நதியின் பணிகள் முடிக்கப்பட்டு, அவையும் பக்ரா மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 1976-லிருந்து இது பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் என்றே அழைக்கப்படுகிறது.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், டெல்லி மற்றும் சண்டிகரின் பாசனத்துக்கும், குடிநீர்ப் பயன்பாட்டுக்கும் ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளிலிருந்து தண்ணீரை முறைப்படுத்தி வழங்குகிறது பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம். இதன் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகள் தடையில்லாமல் இன்று வரை நடந்துவருகின்றன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் சரிவரப் பணியாற்றுகின்ற மேலாண்மை வாரியம் வட இந்தியாவில் அமைக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் நலன் கருதி அமைக்கப்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.

தமிழக அரசோ இந்த பிரச்சினையை இதயசுத்தி யோடு அணுகுவதாகத் தெரியவில்லை. தாமதமான நடவடிக்கைகள் மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும். தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு மனுவால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை.

பதில் மனு, நீதிமன்ற வாய்தாக்கள் என்ற அதே தொடர்கதை இன்னமும் நீள்வது துயரம். காவிரி விஷயத்தில் தமிழகம் அமைதிகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டிருக்கிறார். தனது உரிமையைக் கேட்டு அறவழியில்தானே தமிழகம் போராடிவருகிறது. காவிரி விஷயத்தில் நமது நியாயமான உணர்வு மதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது எழுந்திருக்கும் உரிமைக் குரல் உச்சம் பெற்று டெல்லியை உலுக்கினால்தான் காவிரி நீர் நம்மை வந்தடையுமா? இதுதான் கூட்டாட்சியா?

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

வழக்கறிஞர்,

திமுக செய்தித்தொடர்பாளர்,

தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x