Last Updated : 09 Apr, 2024 09:11 AM

 

Published : 09 Apr 2024 09:11 AM
Last Updated : 09 Apr 2024 09:11 AM

விவசாயிகளின் மனதில் என்ன இருக்கிறது? | தேர்தல் எதிர்பார்ப்புகள்

வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டபூர்வமாக்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்திவரும் சூழலில், மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்னர் வேளாண் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பது இந்தத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக, 2020 நவம்பர் 26 தொடங்கி, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தொடர்ச்சியாக 384 நாள்கள் நடைபெற்ற விவசாயிகளின் டெல்லி போராட்டத்துக்குப் பிறகு, விவசாயப் பிரச்சினைகளின் மீது மக்களின் கவனம் அதிகரித்திருக்கிறது.

முக்கிய வாக்குறுதி: டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என 2014 தேர்தலில்பாஜக வாக்குறுதி அளித்தது. சுவாமிநாதனின் பரிந்துரைகளில் முக்கியமானது, அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையாக உற்பத்திச் செலவுக்கு மேல் 50% லாபம்கிடைக்கும் வகையில் (சி2 50சதம்) விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்பது.

அரசு நிதி நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்வது, இடுபொருள்களைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது, பாசன உத்தரவாதம் உள்ளிட்ட பல நல்ல பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன. எந்தத் தொழில் செய்பவர்களும் குறைந்தபட்ச லாபத்தை எதிர்பார்ப்பது இயல்பானது.

எனவே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டுமென்றால், அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு 50% லாபத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்பது மிகவும் நியாயமான, நடைமுறைச் சாத்தியமான பரிந்துரைதான். அரசு இப்போது 23 வகையான வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலையை அறிவிக்கிறது. ஆனால், அதற்கு எந்தச் சட்ட உத்தரவாதமும் இல்லை.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பெரும்பகுதி மக்களுக்கு விரோதமான சட்டங்களை முறையான விவாதங்களின்றி அவசர அவசரமாக நிறைவேற்றிய ஆட்சியாளர்கள், நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண் துறை சார்ந்த இந்தச் சட்டத்தை இயற்றுவதற்குக் கடுகளவு முயற்சிகூட எடுக்கவில்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் எதிர்பார்ப்பு: அனைத்து விவசாயக் கடன்களையும் ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது கோரிக்கை. கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூடக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. மாணவர்களுக்கும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.14.68 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் இந்தச் செயல்பாடுகளால் 2014-2022 காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போயுள்ளனர். மொத்த விவசாயிகளில் 90% பேர் சிறு-குறு விவசாயிகளாக உள்ள நாட்டில், கடன் தள்ளுபடி கோரிக்கையை அநியாயமானது என்று சொல்ல முடியுமா?

‘நதிகளை இணைப்போம், பாசனப் பரப்பை அதிகப்படுத்துவோம்’ என்பது மற்றொரு முக்கியமான வாக்குறுதி. அப்படிப்பட்ட அதிசயம், நாட்டின் எந்த மூலையிலும் நடைபெறவில்லை. மாறாக, பாசன வசதி பெற்ற நல்ல நஞ்சை நிலங்கள் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால், விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்துவருகிறது.

இப்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக வறட்சி, அபரிமிதமான மழை, வெள்ளம், கடும்பனி காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். அத்துடன், வனவிலங்கு-மனித எதிர்கொள்ளல் இக்காலத்தில் அதிகரித்துள்ளது. வனவிலங்குகளால் வேளாண் பயிர்கள் அழிக்கப்படுவது அன்றாடச் செய்தியாகிவிட்டது. இதனால்,விவசாயிகள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

ஜிஎஸ்டி என்ற பெயரில் அனைத்துப் பொருள்களுக்கும் அபரிமிதமான வரி விதித்து, விலைவாசி உயர்வுக்கு அரசே காரணமாக இருக்கிறது. வேளாண் விளைபொருள்கள், வேளாண் இயந்திரங்கள், வேளாண் இடுபொருள்களுக்கு என எல்லாவற்றுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இதனால் விவசாய உற்பத்திச் செலவு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை ஈடுசெய்யும் வகையில், விவசாயிகளுக்கு வருமானமும் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்துகிற ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

விவசாயிகளைக் காக்க… கிராமப்புறங்களில் வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடு கின்றன. கிராமத்தைவிட்டு நகரத்துக்கும், வெளி மாநிலங்களுக்கும் புலம்பெயர்தல் நடந்தவண்ணம் இருக்கிறது. அது நாட்டின் ஏழ்மை நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இந்த நிலைமைக்கும் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைப் போல, ஆட்சி என்பது அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால், கார்ப்பரேட் ஆதரவு, விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகள் என்றே கடந்த 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன. உரிமைக்காகப் போராடிய விவசாயிகள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்.

எனவே, புதிதாக அமையவிருக்கின்ற ஆட்சி, இதற்கு மாற்றான கொள்கைகளைக் கொண்டதாக அமைய வேண்டும். குறிப்பாக, விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் ஆட்சியாக அமைய வேண்டும். விவசாயத் துறைக் கான அரசின் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில், குறைந்தபட்ச விலை (சி2 50 சதம்) தீர்மானித்து அதை உத்தரவாதப்படுத்தும் வகையில் மத்தியச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

கொள்முதல் உத்தரவாதம் வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் ஒருமுறை தள்ளுபடி செய்து, கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்ட முடியும்.

மற்ற கோரிக்கைகள்: நீர்நிலைகள், பாசன ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கி, அரசு ஈடுசெய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பும் இணைக்கப்பட வேண்டும்.

இயற்கைப் பேரழிவால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு முழுமையாகவும், தாமதமின்றியும் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத்துக்கான மானியம் தொடர வேண்டும். இடுபொருள்கள் குறைந்த விலையில் கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு, சந்தை உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை முற்றாகக் கைவிடப்பட வேண்டும். வரன்முறையற்ற வேளாண் பொருள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், முதலில் இது குறித்துக் கலந்துரையாடும் ஜனநாயகத் தன்மை கொண்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இப்போதுள்ள இந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஏனென்றால், அரசமைப்புச் சட்டம்தான் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தை, அதன் விழுமியங்களை மதித்து நடக்கக்கூடிய ஓர் ஆட்சி அமைய வேண்டும்.

- தொடர்புக்கு: pstribal@gmail.com

To Read in English: What farmers expect from the new government

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x