ஆடு ஜீவிதம்: வாழ்க்கை, நாவல், சினிமா
கேரளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ஆடுஜீவிதம்’ படம். இந்தப் படம் அதே பெயரில் எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதன் இன்னொரு சிறப்பு மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பெலஸி இதை இயக்கியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் ஒரு தமிழ்ப் படம்போல் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெல்லாம் ஓடியது. அதைத் தொடர்ந்து வந்த இந்தப் படம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், தமிழ்நாட்டில் ‘ஆடு ஜீவித’த்துக்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
‘ஆடுஜீவிதம்’ மலையாளத்தில் 2008இல் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நாவல். மலையாளத்தில் அதிகம் விற்கப்பட்ட நாவல் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் படைப்பு கொண்டிருந்த வாழ்க்கை அனுபவம்தான் அந்த வெற்றிக்கான காரணம். சவுதி அரேபியாவில் ஒட்டகப் பண்ணைகளில் அடிமைப் பணிசெய்தது, கேரளத்தினர் பலரும் அனுபவித்த/கேட்டறிந்த ஒரு கதை. தமிழ்நாட்டிலும் இம்மாதிரிக் கதைகள் சொல்லப்படுவதுண்டு.
இந்தப் பின்னணியில் நாவல், நஜீப் என்னும் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அந்தத் தனி அனுபவத்தைப் பொது அனுபவமாகச் சித்தரித்த விதத்தில் பெரும் வாசகக் கவனம் பெற்றது. வந்த புதிதில் இலக்கிய விமர்சகர்கள் பலர் இந்த நாவல், இலக்கியத்தன்மையற்ற உணர்ச்சிவசமான நாவல் என மதிப்பிட்டனர். இஸ்லாம் மதப் பண்டிதரான முகமது அஸத் எழுதி 1954இல் வெளிவந்த ‘The Road to Mecca’ என்கிற புத்தகத்தின் வரிகள் அப்படியே இந்த நாவலில் கையாளப்பட்டுள்ளதாகச் சர்ச்சை வெளியானது (‘மெக்கயிலேக்குள்ள பாத’ என்னும்பெயரில் இதன் மலையாள மொழிபெயர்ப்பும் வெளியாகியுள்ளது). அதற்குக் காரணம் பென்யாமினுக்கு வளைகுடா அனுபவமோ பாலைவன அனுபவமோ இல்லை என்பதுதான். ஆனால், இந்த நாவல் அதன் எல்லையைத் தாண்டிபெரும் வாசகப் பரப்புக்குச் சென்றது. இந்தக் காரணத்தால்நாவலைப் படமாக்கும் முயற்சி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்தது. இயக்குநர் சனல்குமார் சசிதரன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அதுபெலஸி இயக்கத்தில் சாத்தியமாகியிருக்கிறது. நாவலின் மைய உணர்ச்சிவசத்தை மாற்றாமல் அப்படியே சினிமாவாக்கமுயன்றுள்ளார். படத்தின் கதாபாத்திரங்கள் பலரும் இயல்பானநடிப்பை அளித்திருக்கிறார்கள். நாயகனான பிருத்விராஜ் சுகுமாரன் ஆற்றில், மணல் அள்ளி முடித்து அந்த நீரில் மூக்கைச் சிந்தும் காட்சி ஒரு நுட்பமான காட்சிப் பதிவு.
கேரளக் காட்சிகளில் தொடங்கி சவுதி அரேபியாவுக்குச் செல்லும் சினிமா பிறகு முன்னும் பின்னுமாக ஒழுகி ஓடுகிறது. இந்தத் திரைக்கதை பாணியில் நஜீபின் நினைவேக்கத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த சினிமா முயன்று, சில இடங்களில் வெற்றியையும் சில இடங்களில் தோல்வியையும் சந்தித்துள்ளது. நஜீபின் மனைவிக்கும் அவனுக்குமான காதலை, அவன் துயரத்தில் வாடும் நேரத்தில் இடையே நான்-லீனியர் திரைக்கதை மூலம் நிகழ்த்துவது நல்ல உத்தி. ஆனால் அது தேய்வழக்காக வெளிப்பட்டுள்ளது. அந்தக் காதலும் முத்தங்களும் அந்தரத்தில் அலைகின்றன. அதில் ஈரத்தை உணர முடியவில்லை. மென்மையான உணர்வுகளைத் திருத்தமாகச் சொல்லிய அனுபவம் உள்ள பெலஸி இதில் பலவீனப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் நஜீப் உனடியாக அந்த வாழ்க்கையை நிராகரிக்கும் இடத்தில் இயல்பு வெளிப்படவில்லை. பிருத்விராஜின் சூப்பர் ஸ்டார் பிம்பத்துடனே அந்தக் காட்சி வெளிப்பட்டுள்ளது. நஜீப் அந்தச் சூழலுக்குப் பழகிப் போகும் காட்சி ஒரே ஒரு கட்டில் கடந்துவிடுகிறது. ஜம்ப் கட் நுட்பம் என்றாலும் அந்த மாற்றம் இயல்பாக நடக்கவில்லை. ‘தன்மாத்ர’வில் மோகன்லாலின் மூளைப் பிசகை பெலஸி வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பார்.
இப்படம் பெரும்பாலும் தப்பிக்கும் காட்சியையே மையமாகக் கொண்டுள்ளது. அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால், உலகத்தின் பல மொழிகளில் வெளிவந்த சர்வைவல் த்ரில்லர் படங்களுடன் ஒப்பிடும்போது இது இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதைத் தாண்டி எந்த வியக்கதக்க விஷயமும் இல்லை. மேலும் அதே பாணியில்தான் இருக்கிறது. பாம்புகள் வருவதும், தண்ணீருக்கு அலைவதும் அப்படித்தான் வெளிப்பட்டுள்ளது. பண்ணையின் உரிமையாளர் இறைவனின் புகழை நொடிக்கொரு தரம் உச்சரித்துக்கொண்டே மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது இஸ்லாமியர் மீதான விமர்சனமாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயமும் படத்தில் உள்ளது. இது இயல்பாக நடந்ததாக இருக்கலாம். அனால், அதைப் படமாக்கும்போது தர வேண்டிய நம்பகத்தன்மையைப் படம் தரவில்லை. ஆறாட்டுப் புழயைச் சேர்ந்த சுக்கூர் என்கிறஇளைஞரின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நாவல் எழுதப்பட்டது.
ஒரு திடமான உண்மை அனுபவம் என்கிற ரீதியில்தான் இந்த நாவல் முன்மொழியப்பட்டது. அதுவே அதன் வெற்றியும்கூட. ஆனால், பிற்காலத்தில் பென்யாமின் இதில் 30 சதவீதம்மட்டுமே உண்மை என்றார். ஆட்டுடன் உடலுறவுகொள்ளும்காட்சி நாவலில் உண்டு. ஆனால், இதை சுக்கூர் மறுத்துள்ளார்.அதனால்தான் இதில் 70 சதவீதம் கற்பனை எனச் சொல்லியிருக்கலாம். ஆனால், நாவல் வெளிவந்த சமயத்தில் இதில் சிறுதுளியும் கற்பனை இல்லை எனச் சொல்லியிருந்தார். சாதாரணமனிதனின் வாழ்க்கை என்பது சினிமாவின் விளம்பரத்துக்கும் தேவையான அம்சம். அதைச் செய்வதற்கு பிருத்விராஜும் பெலஸியும் பென்யாமினும் தயங்கவில்லை. ஆனால், மூவருக்கும் முந்நூறு கருத்துகள். இதை விமர்சகர் ஜித் பணிக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். உதாரணமாக ஆட்டுடன் உடலுறவு கொள்ளும் காட்சி, எடுக்கப்பட்ட பிறகு தணிக்கையில் நீக்கப்பட்டதாக பென்யாமின் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பெளஸி அந்தக் காட்சியே எடுக்கப்படவில்லை எனச் சொல்லியிருக்கிறார்.
மலையாளத்தின் முன்னணி நடிகர் ஹரீஸ் பெரடி,‘சவுதியில் உங்கள் முதலாளி ஒரு அரபியர் என்றால் இன்று உங்கள் முதலாளி ஒரு மலையாள எழுத்தாளர்’ என சுக்கூருக்கு எழுதிய குறிப்பில் பென்யாமினை விமர்சித்துள்ளார். காசுக்காக ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் படக் குழு விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு ‘ஆடுஜீவிதம்’ நாவலும் சினிமாவும் கேரளத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. திரைப்படத்துக்கு பிருந்த்விராஜ் என்கிற நாயகஅந்தஸ்தும் நன்மை செய்துள்ளது. இது ஒரு வெற்றிகரமான ஜனரஞ்சக சினிமா. இந்தப் படத்தை அசலான மலையாள யதார்த்த சினிமா என பெலஸியோ பிருத்விராஜுவோ சொல்லமாட்டார்கள் என்று கருதலாம். அப்படிச் சொல்வது பல கிளாசிக் சினிமாக்களைத் தந்த மலையாள சினிமாவை விமர்சனம் செய்வதற்குச் சமம்.
