தேர்தல் கால ‘மாற்றம்’ - அரசியல் கட்சிகளில் ‘அந்நியர்கள்’!

தேர்தல் கால ‘மாற்றம்’ - அரசியல் கட்சிகளில் ‘அந்நியர்கள்’!
Updated on
1 min read

தேர்தல் காலத்தில் அரசியலர்கள் கட்சி மாறுவது அரசியலில் சகஜம். இந்த முறை பல மாநிலங்களைச் சேர்ந்த பிற கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு ஜாகை மாறுகிறார்கள். இதுவரை பாஜக வேர்பிடிக்காத ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ், பிஆர்எஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என சகல கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமாகி வேட்பாளர்களாகியிருப்பது ஓர் உதாரணம்.

தலைவர்களின் சாதிப் பின்னணி, தனிப்பட்ட செல்வாக்கு போன்றவற்றை வைத்து அவர்களுக்கு சீட் வழங்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தவிர நீதிபதிகள், முன்னாள் அரசு உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் பாஜகவை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாஜ்பாய் காலத்திலேயே இப்படிப் பலர் பாஜகவில் இணைந்து மக்கள் பிரதிநிதிகளாகினர். பொதுவாக, அவர்கள் மீது அரசியல் தொடர்பான சர்ச்சைகளோ ஊழல் புகார்களோ இருக்காது என்பதால், அவர்களின் வரவை அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.

பாஜகவின் தற்போதைய எம்.பி-க்களில் 20-30% பேருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படாததற்கு, அவர்தம் தொகுதிகளில் நிலவும் அதிருப்தி ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால், கட்சி மாறி வரும் எல்லோருக்கும் வெற்றி கிட்டிவிடுவதில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகளிலிருந்து பிற கட்சிகளுக்கு மாறிப் போட்டியிட்ட 75 பேரில் 47 பேருக்குத் தோல்விதான் கிடைத்தது. பாஜகவிலிருந்து காங்கிரஸுக்குத் தாவிய பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா முதல் பிஜூ ஜனதா தளத்திலிருந்து பாஜகவுக்குத் தாவிய பைஜயந்த் ஜே பாண்டா வரை பலரும் தோற்றுப்போயினர் என்பது கவனிக்கத்தக்கது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in