

இந்தியத் தேர்தல் விதிகள் 1961-இன் விதி எண் 49-ஓ ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்பதை வாக்காளர்கள் பதிவுசெய்ய அனுமதித்தது. வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்து, இதற்கான படிவத்தைப் பெற்றுப் பதிவுசெய்யலாம். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று 2013 செப்டம்பர் 27 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதே நேரம், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காகவே பதிவுசெய்வதற்கான வாய்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை’ (None of the Above, NOTA) என்பது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக 2013இல் ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் (பதிவான மொத்த வாக்குகளில் 1.08%) பதிவாகின. தமிழ்நாட்டில் 5 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.
நீலகிரியில் பதிவான மொத்த வாக்குகளில் 4.99% (46,559 வாக்குகள்) நோட்டாவுக்குச் சென்றன. 2019இல் இந்திய அளவில் 65 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். எனினும், நோட்டாவின் வாக்கு விகிதம் 1.04%ஆகக் குறைந்தது. தமிழ்நாட்டில் நோட்டா வாக்குகள் 5 லட்சத்து 53 ஆயிரம் ஆகக் குறைந்தன.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் நோட்டாவுக்கு அடுத்த இடத்தைப் பெறும் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார் (இதுவரை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டதில்லை).
எனவே, நோட்டா என்பது ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் தனது வாக்கை அளிக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பாகவும், வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களின் வாக்குகள் கள்ள வாக்காக மாறிவிடாமல் தடுக்கப்படுவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. அதே நேரம், ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடுவதற்குக் காரணமாக அமைகிறது.
நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிப்பது ஊழல், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்குப் பதிலாக, மக்களின் மதிப்பைப் பெற்ற வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்துவதற்கான தார்மிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிகழவில்லை.