

சிறுபத்திரிகை எனும் நெடிய பாதையின் தன்னந்தனி யாத்ரிகனாக அறியப்பட்ட சி.மோகன், இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘வீடு வெளி’ (2023) தவிர, ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’(2013), ‘கமலி’ (2020) ஆகிய நாவல்கள் வந்துள்ளன.
விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் அவரது முதல் நாவல். வாழ்க்கையைத் தொலைத்துச் சாதித்த கலைஞன் ராமானுஜன் இதில் ராமனாக வெளிப்படுகிறான். சிறந்த ஓவியரான டக்ளஸ் ஒரு முக்கிய சாட்சி. கலை மேதைகளின் படைப்புலகத்தில் சதா சஞ்சரிக்கும் மோகன், அவருடைய நண்பர். நவீன இளம் ஓவிய மேதையான ராமன் இறந்த பின்னர், 10 ஆண்டுகளுக்குப் பிறகே மோகன் சென்னை வருகிறார்... அவரது ஓவியங்களைப் பற்றி அறிகிறார். அவர் வாழ்ந்த சோழ மண்டல ஓவியர் கிராமத்துக்குச் செல்கிறார்... அவரது சாதனைகளைக் கண்டு வியக்கிறார். இளம் வயதிலேயே வாழ்வை நீத்த ஓவியரை நினைத்து உள்ளம் பதைக்கிறார்.
சூரியனின் குழந்தையான வான்காவைப் போல இந்திய வான்காவாக, நிலவின் குழந்தையாக அறியப்பட்ட ஓவியன் என்று மோகன் வியக்கிறார். வான்காவைப் போலவே காதலிக்காக அல்ல காதலின் நினைவுகளுக்காகத் தன்னை ஒப்புக்கொடுப்பவனாகத்தான் இருந்தான். ஆனால், கலைஞனின் அருமை தெரியாத உலகம் அவனிடம் விளையாடுகிறது. மென்மையான உணர்வுகளைத் தட்டிவிடுகிறது. எப்படியெனில், இவான் துர்கனேவ் ‘மூமு’வில்படைத்த கெராசிம் என்ற இளைஞன் பெற்ற அற்புதமான காதலை உலகம் தட்டிவிடுகிறதே, அதைவிடக் கேவலமாக. இந்த உலகத்தில் யார் காதலிக்க வேண்டும்... யாருக்குக் காதல் கிடைக்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? கும்பல் மனநிலையின் உளவியலை இந்நாவல் சிற்சில அத்தியாயங்களின் வழியே குறுக்கு விசாரணை செய்கிறது.
மானுட மேன்மை மிக்க இலக்கியங்களின் உருவங்கள் வேறுபட்டிருந்தாலும், உள்ளீடுகள் அன்பையே கோரிக்கைவிடுத்து நிற்கின்றன. ஒருவகையில் மோகனின் மூன்று நாவல்களும் காதல் மீது ஒரு மதிப்பார்ந்த அர்த்தத்தை ஏற்றிவைக்கின்றன.
கமலி நாவலில் பிரெஞ்சு மொழி பயின்றவளாக, தி.ஜா. நாவல்களைப் படிப்பவளாக, குழந்தைக்கு ஓவியம் பயிற்றுவிப்பதில் ஆர்வம் கொண்டவளாக வருகிறாள் கமலி. கணவன் ரகுவுக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை. அவளின் ஆர்வங்களை ஊக்குவிப்பவனாக கண்ணன் வருகிறான். வீட்டுச் செலவினங்களின் சுமையைக் குறைத்திட அவள் வேலைக்குப் போகவும் விரும்புகிறாள். தி.ஜா.வின் நாவல்களை வாசிப்பவளான கமலிக்கு, மீறல்கள் பிடித்திருக்கிறது. ‘செம்பருத்தி’யில் வரும் குஞ்சம்மாள் போலகூடப் புழுங்கிச் சாக அவள் விரும்பவில்லை. மாறாக, அன்னா கரீனினாவாக மாறுகிறாள்.
அன்னா கரீனினாவில் கணவன் கரீனினை ஒப்பிடும்போது, காதலன் விரான்ஸ்கி அவ்வளவு நல்லவனில்லை.விரான்ஸ்கிதான் நாவலின் வசீகர நாயகன். கணவன் கரீனின் கதையின் நாயகன்கூட இல்லை, கமலியில் கணவன் ரகுவின் நிலை. நண்பனாக வரும் கண்ணன் மீது கமலிக்கு ஈர்ப்பு. பிரெஞ்சு நாவலாசிரியர் குஸ்தாவ் பிளாபர் எழுதிய ‘மேடம் பவாரி’யிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகன்கள். இதிலும் கணவன் பழைமைவாதியே தவிர, கெட்டவனில்லை. நல்லவன், கெட்டவன் அல்ல இங்கு பிரச்சினை. காதல் என்பது தனக்கான இணையைத் தேடித் தேர்ந்துகொள்கிறது. அன்னா கரீனினாவைவிட மேடம் பவாரியின் நிம்மதியைக் கெடுத்தவகையில், அந்நாவல் எந்த வகையிலும் சிறந்த நாவலில்லை. ஆனால், அக்காலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய வகையில், குஸ்தாவ் பிளாபர் பேசப்பட்டார். முதன்மை கதாப்பாத்திரங்களான அன்னா, பவாரி இருவரும் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன என்பதுதான் இலக்கிய உலகை ஈர்த்த மாபெரும் சோகம்.
நாவல்கள் அமரத்துவம் பெற நாயகிகளை ஏன் சாகடிக்க வேண்டும் என மோகன் நினைத்திருந்ததன் விளைவுதான் கமலியோ? செம்பருத்தியிலும் நாயகி குஞ்சம்மாள்.... தனது காதலனின் அண்ணனுக்கு வாழ்க்கைப்படுகிறார். கணவன் இறப்புக்குப் பிறகு, ஒரே வீட்டில் புழுங்கி (சாகாமல்) வாழாமல், மைத்துனனை மறந்து அவன் மனைவி புவனாவுக்கு வழிவிட்டு வேறெங்கோ ஒதுங்கி வாழ விரும்புகிறார். அவரின் பிரிவு அன்றைய இந்தியப் பெண்களின் பிரதிபலிப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட இன்றும் அதுதான் நிலை. இவ்வளவு வலியும் வேதனையும் ஏன் என்ற கேள்வியே மோகனுக்கு எழுந்திருக்கலாம்... அதனாலேயே ‘கமலி’ உருவாகியதோ எனத் தோன்றுகிறது.
‘‘மனித இருப்போட விலக்க முடியாத பரிமாணமா மடத்தனம் இருந்துக்கிட்டிருக்கும்னு மிலன் குந்தேரா சொல்றாரு’’ என்று ‘வீடு வெளி’ நாவலில், அனிதாவுடனான உரையாடலில் கிருஷ்ணன் பேசுவதாக வருகிறது.
ஓர் இடத்தில் ‘மேடம் பவாரி’, ‘லேடி சார்ட்டர்லி லவ்வர்’, ‘அன்னா கரீனினா’ என உலகச் செவ்வியல் இலக்கியங்களில் ஆண் - பெண் உறவுகளில் மீறல் எந்த அளவுக்குத் தவிர்க்க இயலாமல் இடம்பெற்றுள்ளது என்பதை எடுத்துச்சொல்லும்போது, காதலுக்கு மடத்தனம் மிகவும் தேவையான ஒன்று என்பதை மோகன் அழகாகப் புரிந்துகொள்ளவைக்கிறார்.
‘வீடு வெளி’ சுயசரிதைத் தன்மையில் எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் சுந்தர ராமசாமி கற்பனையும் நிஜமும் கலந்த சுயசரிதை நாவலாக 'ஜே.ஜே. சில குறிப்புகள்’, அசோகமித்திரனின் தனது அமெரிக்கப் பயணத்தை உள்ளடக்கிச் சில மாத காலத்தை மட்டுமே கொண்ட 'ஒற்றன்'போன்றவை, ஏற்கெனவே நமக்கு அறிமுகமான படைப்புகள்.
மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழும் கிருஷ்ணன் திடீரென பாலி நீரோபதி என்கிற நோயால் அவதியுறுகிறான். கால், உடல்நிலை இயல்புநிலைக்குத் திரும்பும் வரை நண்பர்கள், கணவனைப் பிரிந்து வாழும் தோழி ஆகியோர் உதவுகிறார்கள். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது என அடுத்தடுத்த சம்பவங்கள், இடையிடையே பழைய நினைவுகள் எனக் கதை மாறிமாறிப்பயணிக்கிறது. கலை ஈடுபாடு, இலக்கிய ஆர்வம், ஓவிய நண்பர்கள், இசை விருப்பம், ஒரு இசைவான தோழி, சிற்சில அன்பு மனிதர்கள் எனத் தனது வாழ்க்கையின்தடங்களிலிருந்தே பல்வேறு தரிசனங்களை நமக்குத் தருகிறார் இந்த நாவலாசிரியர்.
பிஸ்மில்லா கானின் ஷெனாய், விலயத் கானின் சிதார், ஷிவ்குமார் சர்மாவின் சந்தூர், பீம் சென்ஜோஷியின் மகத்தான மந்திரக் குரல் எனத் தமிழ் ரசனைப் பரப்பில் ஒரு இடையீட்டை மோகன் நிகழ்த்துகிறார். சோழ மண்டல ஓவியக் கிராமம், மும்பை ஜஹாங்கிர் ஆர்ட் கேலரி என அழகிய பின்னணிகளைநாம் காண்கிறோம். மும்பை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கு ஒரு நள்ளிரவில் திறந்தவெளியில் இந்துஸ்தானி இசை கேட்க வாய்ப்பு அமைகிறது. உஸ்தாத் அல்லா ரக்காவின் தபேலாவில் லயிக்கும்போது அருகிலிருக்கும் யாரோ சிலர், கிருஷ்ணனுக்குப் புகைக்கத் தருமிடம் அற்புதம். புரியாத நவீன ஓவியங்கள் சார்ந்து தோழி அனிதாவிடம் விளக்கும் இடம், புதிய திறப்புகளை ஏற்படுத்த முயலும் இடமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
‘கமலி’ நாவலில் எதிராளியைக் குத்திக் கிழிக்கத்தக்கதான தகதகவென மின்னும் வாளின் கூரிய தன்மையுடன் காதல்இருக்கிறது என்றால், மூன்றாவது நாவலான ‘வீடு வெளி’நாவலில் பூவின் வாசத்தை, அந்தப் பூவுக்கே வலிக்காமல் நுகர்ந்து பார்க்கும் நேசத்தின் அழகிய புரிதலை எடுத்துச்சொல்கிறது. சி.மோகன், தனது தனிமை நெருக்கடிகள், வாழ்க்கையின் போதாமை, ரசனைகளை இணைத்து, உரைநடை இன்பத்துடன் பொருத்தி நாவல்களைத் தந்திருக்கிறார். அது தமிழுக்குப் புதிய வருகையாக அமைந்திருக்கிறது.
வீடு வெளி, சி.மோகன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 99404 46650