தமிழ்ஒளி அறுபதாம் நினைவு ஆண்டு: பாரதிதாசனின் சீடர்

தமிழ்ஒளி அறுபதாம் நினைவு ஆண்டு: பாரதிதாசனின் சீடர்
Updated on
2 min read

கவிஞர் தமிழ்ஒளி பாரதிதாசனின் சீடர். படிக்கின்ற காலத்திலேயே பாவேந்தர் மகன் மன்னர்மன்னனோடு இணைந்து 'முரசு' என்னும் பெயரில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினர். அந்தச் சிற்றிதழில் பிரஞ்சு அரசிற்கு எதிராக இவர் எழுதிய கட்டுரைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின் புதுச்சேரியில் இருக்க இயலாத சூழல் ஒரு புறம், தமிழ் மீது கொண்ட காதல் ஒரு புறம். அதற்காக பாரதிதாசனின் பரிந்துரைக் கடிதம் பெற்றுக்கொண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் படிக்கத் தஞ்சை சென்றார்.

தஞ்சையில், சாதியக் கொடுமைகளுக்கும் குறைவேதுமில்லாத காலம் அது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், சாதிய ஒடுக்குதலுக்கு ஆளானார். மனம் நொந்த தமிழ்ஒளி பாரதிதாசனிடம் முறையிட்டார். அப்போது சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தினர் பாவேந்தரை அழைக்க கார் அனுப்பி இருந்தார்கள். அதே காரில் தமிழ்ஒளியை அழைத்துக்கொண்டு பாவேந்தர் கரந்தை கல்லூரிக்கு வந்தார். பாவேந்தருடன் தமிழ்ஒளி வருவதைப் பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ந்துபோய், இனி இப்படி நேராமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர்.

அந்தக் காலகட்டத்தில் ‘சக்தி நாடக சபா’ குழுவினர் தஞ்சையில் நாடகம் நடத்திவந்தனர். நாடகத்தைப் பார்த்த தமிழ்ஒளிக்கு நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போதே ‘சிற்பியின் கனவு’ என்ற நாடகத்தை எழுதி முடித்தார். அதை சக்தி நாடக சபா உரிமையாளர் சக்தி கிருஷ்ணசாமியிடம் வழங்கினார். அதைப் படித்து வியந்த சக்தி கிருஷ்ணசாமி, அதை அரங்கேற்றம் செய்தார். அந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (பின்னாளில் அவர் திரையுலகில் மின்னியபோது இதே கதையை ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்து, அவரே கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் கதாசிரியரின் பெயர் சக்தி கிருஷ்ணசாமி என்றே திரைப்படத்தில் இருக்கும்.) ஓராண்டு படிப்பு முடிந்த நிலையில் தன் படிப்பைத் தொடர விரும்பாமல் மீண்டும் புதுவைக்கே வந்து, பாவேந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றினார் தமிழ்ஓளி. ‘பாண்டியன் பரிசு’ நூலை பாரதிதாசன் எழுதஎழுத படியெடுத்துக் கொடுத்தவர் கவிஞர் தமிழ்ஒளியே.

நாடு விடுதலை பெற்ற சூழலில் சென்னை சென்ற தமிழ்ஒளி தொடக்கத்தில் திராவிட இயக்கச் சிந்தனையாளராக இருந்தாலும், சென்னை ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் தோழர் ஜீவாவைச் சந்தித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். சென்னையில் கவிஞர் குயிலனுடன் இணைந்து ‘முன்னணி’ என்கிற இதழைத் தமிழ்ஒளி நடத்தினார். தமிழில் முதன் முதலாக மே தினத்தைப் பாடிய பெருமை கவிஞர் தமிழ்ஒளியையே சாரும்: ‘காரிருளை வென்று/கலிதீர்க்க மேலெழுந்த/சூரியன் போல் மாமதிபோல்/வையத்தைச் சுற்றிவரும்/மேதினமே நீ வருவாய்/மின்னல் ரதமேறி’.

பாடு பொருள் மட்டுமல்லாமல், சொல் நயத்திலும், புதிய உவமைகளிலும் ஆகச்சிறந்தவர் தமிழ்ஒளி என்று உவமைக் கவிஞர் சுரதா கூறியுள்ளார். அந்தக் காலத்தில் காவியம் படைப்பது மிகப்பெரும் செயல். கவிஞர் தமிழ்ஒளியோ ஒரே ஆண்டில் ‘வீராயி’, ‘நிலைபெற்ற சிலை’, ‘கவிஞனின் காதல்’ என்று மூன்று காவியங்களைப் படைக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றவராக இருந்தார். இதில் ‘வீராயி’ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கதாபாத்திரமாகக் கொண்ட, இன்றைக்கும் பலரால் போற்றப்படும் காவியமாகும்.

அதே போல அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் பல முக்கியமானவை. ‘சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?’ என்னும் அவரது ஆய்வு நூல் தமிழில் வந்த ஆய்வு நூல்களுள் மிகச்சிறந்தது. ‘திருக்குறளும் கடவுளும்’, ‘தமிழர் சமுதாயம்’ உள்ளிட்ட நூல்களும் மிக முக்கியமானவை. 1965இல் தனது 41ஆவது வயதில் இறந்த தமிழ்ஒளி குறைந்த காலத்தில் பாரதியைப் போல் மக்களுக்காகவே எழுதிக் குவித்த தமிழின் சிறந்த எழுத்தாளராக விளங்கியுள்ளார்.

- களப்பிரன், எழுத்தாளர்
தொடர்புக்கு: kalapiran0@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in