தனியார் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு | கவனம் பெறும் வாக்குறுதிகள்

தனியார் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு | கவனம் பெறும் வாக்குறுதிகள்
Updated on
1 min read

இந்தத் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீட்டில் 50% என்ற உச்ச வரம்பை அகற்றுவது, பட்டியல் சாதி / பழங்குடியினருக்குத் தனி பட்ஜெட் என்பன போன்ற வாக்குறுதிகளை முன்வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, அடுத்து இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் / பழங்குடியினருக்கு தனியார் பல்கலைக்கழக உயர் கல்விப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதே வாக்குறுதியை 2019 தேர்தலிலும் காங்கிரஸ் முன்வைத்தது.

சமூகரீதியிலும் கல்விரீதியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் / பட்டியல் சாதியினர் / பழங்குடியினருக்கு அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், 2005இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது அரசமைப்புச் சட்டத்தில் 93ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அது ஐஐடி, ஐஐஎம் போன்ற அரசு உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்க வழிவகை செய்தது. எனினும், தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் இதுவரை இடஒதுக்கீடு முறை அமலாகவில்லை. இந்தச் சூழலில், காங்கிரஸின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.

தனியார் துறையில் இடஒதுக்கீடு என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடர்கிறது. தனியார் துறையில் அரசின் பங்களிப்பு இல்லாததால், இடஒதுக்கீடு தொடர்பான அரசின் கொள்கைகளை இதில் நீட்டிக்கக் கூடாது என்று தொழில் துறையினர் வாதிடுகின்றனர்.

குறிப்பாக, லாபத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட - அனைத்துச் சமூகத்தினரும் பங்களிக்கும் - தொழில் துறையில் எதற்கு இடஒதுக்கீடு என்பது அவர்களின் கேள்வி. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பேசுபொருளாக்கிய காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதும் கவனத்துக்குரியது! - சந்துரு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in