

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தமிழ்நாடு (39) - புதுச்சேரியில் (1) அனைத்துக் கட்சிகளும் அறிவித்துவிட்டன. இதில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி மூன்று தொகுதிகளில் பெண்களைக் களம் இறக்கியுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருப்பதாகப் பெருமையுடன் அறிவித்திருக்கிறார்.
19 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் பாஜகவும் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவும் தலா மூன்று பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. 32 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளது (இந்தக் கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடும் பிற கட்சி உறுப்பினர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை). புதுச்சேரியைச் சேர்த்து 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், இரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்த மூன்று கூட்டணிகளில் உள்ள பிற கட்சிகள் பெண் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தவில்லை. மொத்தத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஆறு பெண் வேட்பாளர்களும், இண்டியா கூட்டணியின் சார்பில் ஐந்து பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
சட்டம் இயற்றும் அவைகளில் மகளிருக்கு 33% இடங்களை ஒதுக்குவதற்கான மசோதா 17ஆவது மக்களவையில் நிறைவேறியது. இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாது என்பதை வைத்து, எதிர்க்கட்சிகள் பாஜக அரசை விமர்சித்தன. ஆனால், இரண்டு கூட்டணிகளும் குறிப்பாக, அவற்றின் பிரதான கட்சிகளும் மகளிருக்குப் பெயரளவிலான இடங்களையே ஒதுக்கியுள்ளன.