Last Updated : 26 Mar, 2024 07:21 PM

 

Published : 26 Mar 2024 07:21 PM
Last Updated : 26 Mar 2024 07:21 PM

பாஜக கூட்டணி Vs இண்டியா... பிஹார் களம் எப்படி? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றுக்கான வாக்கு வங்கிகள் எவ்வளவு, கடந்த கால தேர்தல்களில் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய அரசியல் சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிஹார் மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் கிழக்கே முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு மாநிலம் பிஹார். பாட்னா, நாலந்தா, போஜ்பூர், கயா, வைஷாலி என 38 மாவட்டங்களையும், 199 நகரங்களையும், 45,103 வருவாய் கிராமங்களையும் கொண்டது இந்த மாநிலம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மாநிலத்தில் 10.41 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில், 88.71% மக்கள் கிராமப்புறங்களிலும், 11.29% மக்கள் நகர்ப்புறங்களிலும் வாழ்கிறார்கள். இந்த மாநிலத்தின் கல்வி அறிவு 61.80%. ஆண்களின் கல்வி அறிவு 71.20%. பெண்களின் கல்வி அறிவு 51.50%.

இந்த மாநிலத்தில், இந்துக்கள் 82.69%, முஸ்லிம்கள் 16.87%, கிறிஸ்தவர்கள் 0.12%, சீக்கியர்கள் 0.02%, பவுத்தர்கள் 0.02%, சமணர்கள் 0.02% இருக்கிறார்கள். பிஹாரில் வால்மிகி நகர், கிஷன்கஞ்ச், மகாராஜ்கஞ்ச், சமஸ்திபூர், நவாடா என 40 மக்களவைத் தொகுதிகளும், ராம்நகர், கோவிந்த் கஞ்ச், கல்யாண்பூர், பனியாபூர், சிகந்தரா என 243 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். எனினும், 1989க்குப் பிறகு அந்த வாய்ப்பு அந்த கட்சிக்குக் கிடைக்கவில்லை. பிஹாரை அதிக காலம் ஆட்சி செய்து வரும் முதல்வராக தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் உள்ளார். இவர், 17 ஆண்டுகளைக் கடந்து முதல்வராக நீடித்து வருகிறார். பிஹாரில் 200க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவையே முக்கிய கட்சிகளாக இருக்கின்றன.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2019-ல் நடைபெற்ற 17வது மக்களவைக்கான தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 7,12,16,290. வாக்களித்தவர்கள் 3,99,89,711. வாக்குச்சதவீதம் 57.33. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 24 சதவீத வாக்குகளுடன் 17 தொகுதிளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் 22.26 சதவீத வாக்குகளுடன் 16 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 8 சதவீத வாக்குகளுடன் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 7.85 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் 15.68 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 6,38,00,160. வாக்களித்தவர்கள் 3,58,92,459. வாக்குச்சதவீதம் 56.26. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக அதிகபட்சமாக 29.86% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 16% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 6.50% வாக்குகளுடன் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 20.46% வாக்குகளுடன் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8.56% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சி 1.22% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும், அங்கீகாரம் பெறாத கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2009 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5,45,05,246. பதிவான வாக்குகள் 2,42,32,597. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 13.93% வாக்குகளுடன் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 24% வாக்குகளுடன் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 10.26% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 19.31% வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சைகள் இருவர் வெற்றி பெற்றனர்.

2004 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5,05,59,672. வாக்களித்தவர்கள் 2,93,32,306. வாக்குச்சதவீதம் 58%. மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 30.67% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 22.36% வாக்குகளுடன் 6 தொகுதிகளிலும், பாஜக 14.57% வாக்குகளுடன் 5 தொகுதிளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி 4.49% வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 8.19% வாக்குகளுடன் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அடுத்ததாக, சில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2020 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 7,36,47,660. வாக்களித்தவர்கள் 4,19,26,443. வாக்குச்சதவீதம் 56.93%. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதபோல், காங்கிரஸ் கட்சியும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், 110 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 19.46% வாக்குகளுடன் 74 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டு 15.39% வாக்குகளுடன் 43 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. நிதிஷ் குமார் முதல்வரானார்.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 9.48% வாக்குகளுடன் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 23.11% வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஐ(எம்எல்)(எல்) கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 3.16% வாக்குகளுடன் 12 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஐ 6 தொகுதிகளில் போட்டியிட்டு 0.83% வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளையும், சிபிஎம் 4 தொகுதிகளில் போட்டியிட்டு 0.65% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. லோக் ஜனசக்தி கட்சி 135 இடங்களில் போட்டியிட்டு 5.66% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 78 தொகுதிகளில் போட்டியிட்டு 1.49% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

2015 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 6,70,56,820. வாக்களித்தவர்கள் 3,79,93,173. வாக்குப்பதிவு 56.66%. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 16.83% வாக்குகளுடன் 71 இடங்களில் வெற்றி பெற்றது. 101 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் 18.35% வாக்குகளுடன் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6.66% வாக்குகளுடன் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

157 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 24.42% வாக்குகளுடன் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 42 தொகுதிகளில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி 4.83% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பிஎல்எஸ்பி கட்சி 2.56% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஐ(எம்எல்)(எல்) கட்சி 98 தொகுதிகளில் போட்டியிட்டு 1.54% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி 2.56% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா(செக்யூலர்) கட்சி 2.27% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

2010 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5,51,20,656. வாக்களித்தவர்கள் 2,90,34,705. வாக்குச்சதவீதம் 52.67 %. இந்த தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 102 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 16.49% வாக்குகளுடன் 91 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 141 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 22.58% வாக்குகளுடன் 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வரானார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் 168 தொகுதிகளில் போட்டியிட்டு 18.84% வாக்குகளுடன் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8.37% வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளில் போட்டியிட்டு 6.74% வாக்குகளுடன் 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 0.61% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சிபிஐ கட்சி 56 தொகுதிகளில் போட்டியிட்டு 1.69% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றனர்.

2005 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5,26,87,663. வாக்களித்தவர்கள் 2,44,97,375. வாக்குச்சதவீதம் 46.50%. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 103 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 10.97% வாக்குகளுடன் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 138 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 14.55% வாக்குகளுடன் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லோக் ஜனசக்தி கட்சி 178 தொகுதிகளில் போட்டியிட்டு 12.62% வாக்குகளுடன் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த அணியின் சார்பில் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார்.

215 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25% வாக்குகளுடன் 75 இடங்களில் வெற்றி பெற்றது. 84 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5% வாக்குகளுடன் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஐ(எம்எல்)(எல்) கட்சி 109 தொகுதிகளில் போட்டியிட்டு 2.49% வாக்குகளுடன் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 4.41% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிபிஐ 17 தொகுதிகளில் போட்டியிட்டு 1.58% வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும், 12 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 0.64% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. 31 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி 0.98% வாக்குகளுடன் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சைகள் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

முதல்வராக நீடிக்கும் நிதிஷ் குமார்: 2005, 2010 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்து முதல்வரான நிதிஷ் குமார், 2015 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்று முதல்வரானார். 2020 தேர்தலில் மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், தேர்தல் முடிவை அடுத்து மீண்டும் முதல்வரானார். நடுவில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவோடு முதல்வராக தொடர்ந்த நிதிஷ் குமார், மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்து அக்கட்சியின் ஆதரவைப் பெற்று முதல்வராக தொடர்கிறார்.

2024 மக்களவைத் தேர்தல்: மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இம்முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19-ல் நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலில் 4, ஏப்ரல் 26-ல் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 5, மே 7ம் தேதி நடைபெற உள்ள 3ம் கட்டத் தேர்தலில் 5, மே 13ல் நடைபெற உள்ள 4-ம் கட்டத் தேர்தலில் 5, மே 20-ல் நடைபெற உள்ள 5ம் கட்டத் தேர்தலில் 5, மே 25ல் நடைபெற உள்ள 6ம் கட்டத் தேர்தலில் 8, ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள 7-ம் கட்டத் தேர்தலில் 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் பிரதான அணிகளாக உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 5 தொகுதிகளிலும், ஜித்தன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா(செக்யூலர்) கட்சி ஒரு தொகுதியிலும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. இதில், சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்எல்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே இன்னும் தொகுதி எண்ணிக்கை முடிவாகவில்லை.

சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பசுபதி குமார் பரசின் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியையும், முன்னாள் மாநில அமைச்சர் முகேஷ் சாஹ்னி தலைமையிலான விகாஷீல் இன்சான் கட்சியையும் மகாகட்பந்தனில் இணைக்க லாலு திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, மீதமுள்ள 35 தொகுதிகளுக்கான பங்கீடு நடைபெறும் என கூறப்படுகிறது.

பிஹாரைப் பொறுத்தவரை, நிதிஷ் குமார் ‘இண்டியா’ கூட்டணியில் இருந்தவரை அந்த கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சம வலிமையுடன் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அப்போது நடத்தப்பட்ட 6 கருத்துக் கணிப்புகளில் 3-ல் இண்டியா கூட்டணி முன்னணியில் இருப்பதாகவும், இரண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணியில் இருப்பதாகவும், ஒன்றில் சமமான வெற்றி இருக்கும் என்றும் கணிப்பு முடிவுகள் வெளியாகின. நிதிஷ் குமார் பின்னர் பாஜகவில் இணைந்ததை அடுத்து வெளியான 2 கருத்துக் கணிப்புகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் அணி வலிமையாக இருப்பதோடு, அந்த அணியில் மேலும் இரண்டு கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தேர்தல் முடிவுகள் எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையே பிஹாரில் தற்போது இருக்கிறது. வலிமையான இரண்டு கூட்டணிகள் மோதும் இந்தக் களம் எத்தகைய முடிவைத் தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x