Last Updated : 25 Mar, 2024 06:16 AM

3  

Published : 25 Mar 2024 06:16 AM
Last Updated : 25 Mar 2024 06:16 AM

மக்களவை மகா யுத்தம் | மாநிலக் கட்சிகளின் அரசியல் முக்கியத்துவம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் மொத்தம் ஆறுதான். அவை பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி; அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கை 57. இது தவிர, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597. ஐரோப்பாவில் சுமார் 150 மாநிலக் கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் இத்தனைக் கட்சிகள்!

பழமையான மாநிலக் கட்சி: இந்தியாவில் மிகப் பழமையான மாநில கட்சி 1949இல் தொடங்கப்பட்ட திமுகதான். தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று (திருச்சியில்) தொண்டர்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தினார் அண்ணா. பெரும்பான்மை உறுப்பினர்கள் தேர்தல் வேண்டும் என்று வாக்களித்ததால்தான் தேர்தல் அரசியலுக்கு வர முடிவுசெய்தார். உள்கட்சி ஜனநாயகத்துக்குச் சிறந்த உதாரணம் இது. 1957இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றிபெற்றது.

அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர் இதை எதிர்பார்க்கவில்லை. திமுக வெற்றி பெற்றிருந்த 15 தொகுதிகளில், 1962 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதற்கான வேலைகளில் கவனம் செலுத்தினார். குறிப்பாக, அண்ணாவைத் தோற்கடிக்கத் தீவிரமாக வேலைசெய்தார்.

அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் பெரும் பணக்காரரும் பேருந்து நிறுவன முதலாளியுமான நடேச முதலியார், காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கப்பட்டார். ஓட்டுக்குப் பணம் என்பதை முதலில் தொடங்கிவைத்தது காங்கிரஸ்தான். காஞ்சிபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்குத் தலா ஐந்து ரூபாய் தந்தது.

வெங்கடாஜலபதி படத்தை வைத்து, காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று வாக்காளர்களிடம் சத்தியமும் வாங்கிக்கொண்டது. அந்தத் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்தார். அப்போது அண்ணா, “என்னைத் தோற்கடித்தது நடேச முதலியார் அல்ல, திருப்பதியில் இருந்து வெங்கடாஜலபதி இறங்கி வந்து எனக்கு எதிராகத் தேர்தல் வேலை செய்து என்னைத் தோற்கடித்துவிட்டார்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

ஆனால், அந்தத் தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக நெடுஞ்செழியனும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக மு.கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1962இல் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, 1967இல் ஆளுங்கட்சியாக ஆட்சிப் பொறுப்பேற்றது. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இன்றுவரை திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம்தான் இருந்துவருகிறது.

பிற மாநிலங்களில்... பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஆந்திரம், தமிழ்நாடு இரண்டிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டுமே மாநிலக் கட்சிகள்தான். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்கள்தான், பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளைத் தொடங்கினர்.

பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மம்தா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆட்சியைக் கைப்பற்றினார்.

அங்கு முன்பு ஆட்சி செலுத்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது செல்வாக்கை இழந்துவிட்டன. பாஜக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்று, மம்தா பானர்ஜிக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.

ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம்தான் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவருகிறது. அந்தக் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தொடர்ந்து முதலமைச்சராக இருந்துவருகிறார். மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது.

இப்போது அங்கும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடம், நான்காவது இடத்துக்குத் தள்ளிவிட்டன. இப்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி செல்வாக்குடன் இருக்கிறது.

தேசியக் கூட்டணிகளில்... எதிர்க்கட்சிகள் அமைத்த இண்டியா கூட்டணியில் பெரும்பான்மையானவை மாநிலக் கட்சிகள்தான். ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேசியக் கட்சியான காங்கிரஸ், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது.

காரணம், தேர்தல் அரசியல்தான். பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசியக் கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சியான பாஜககூட, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட இன்ன பிற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. அது கைகூடவில்லை எனச் செய்தி கள் வெளியாகின்றன. ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், தமிழ்நாட்டில் பாமக-வுடன் கூட்டணி அமைத்துவிட்டது பாஜக.

காலத்தின் கட்டாயம்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது 1960களில் இந்தியா முழுவதும் செல்வாக்குள்ள ஒரு கட்சியாகத்தான் இருந்தது. அதேவேளை, மாநிலங்களில் ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர்களைச் சுயமாக ஆட்சி நடத்த டெல்லி தலைமை அனுமதிக்கவில்லை.

மாநிலம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமும் டெல்லியில்தான் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குப் பலமாக இருந்த இந்த அணுகுமுறை, காலப்போக்கில் பலவீனமாக மாறியது.

தமிழ்நாட்டில் 1960களில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் பெரிய அளவில் நடைபெறாது. அந்தக் கிராமத்தின் கிராம முனிசீப் அல்லது நாட்டாண்மையைச் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் ஆதரவு கேட்பார். மதத் தலைவர்களையும் சந்திப்பார். அண்ணாதான் அதை மாற்றினார். திமுக தொண்டர்களையும் வேட்பாளர்களையும் வீடுவீடாகப் போய்ப் பிரச்சாரம் செய்யவைத்தார். திராவிடக் கட்சிகளின் வெற்றி ரகசியம் இதுதான். மக்களும் அப்போது மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.

காங்கிரஸைப் பொறுத்தவரை, தம் கட்சி நிர்வாகிகளுக்கு உள்கட்சி ஜனநாயகம் பற்றிப் புரிதல் தேவையில்லை என்றே கருதியது. சொல்வதைச் செயல்படுத்தினால் போதும் என்கிற நிலையில்தான் இருந்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தேவராஜ் அர்ஸ் முதலமைச்சராக இருந்தபோது, மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார்.

மொரார்ஜி பெங்களூரு வந்தபோது, முதலமைச்சர் என்கிற முறையில் பிரதமர் மொரார்ஜியை வரவேற்க தேவராஜ் அர்ஸ் செல்லவில்லை. தலைமைச் செயலாளரைத்தான் அனுப்பினார். அந்த அளவுக்கு இந்திரா காந்தி மீது விசுவாசமாக இருந்தவர். மொரார்ஜியும் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் அதே தேவராஜ் அர்ஸ், ஒருகட்டத்தில் இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தனிக் கட்சி தொடங்கினார். இப்போது தேசிய அளவில் செல்வாக்குள்ள தேசியக் கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாரபட்சம் காட்டுவதாக ஒரு விமர்சனம் நிலவுகிறது. அன்று காங்கிரஸுக்கு ஏற்பட்ட அதே நிலைமை தமக்கும் ஏற்படக்கூடும் என்பதைப் பாஜகவினர் உணர வேண்டும்.

மாநிலக் கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் அவர்கள் செயல்பாடு, அவர்கள் சிந்தனை அந்த மாநில வளர்ச்சி சார்ந்ததாக இருக்கிறது. தேசியக் கட்சிகளுக்கு அந்தப் போக்கு அல்லது அந்தச் சிந்தனை இல்லாமல் போனது, அவை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல் போனதற்கு முக்கியக் காரணம்.

இன்றைக்கு இந்தியாவில் மிகப் பெரிய இரண்டு மாநிலக் கட்சிகள் திமுகவும் அதிமுகவும்தான். இந்த இரண்டு கட்சிகளில்தான் கோடிக்கணக்கில் தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலக் கட்சிகள் தவிர்க்க முடியாதவை. அவர்களை நம்பித்தான் தேசியக் கட்சிகள் இருந்தாக வேண்டும் என்பது இப்போது காலத்தின் கட்டாயம்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மத்திய அரசின் தேவையற்ற தலையீடுகளைத் தடுப்பதிலும் மாநிலக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்றுகின்றன. அந்த வகையில், அவற்றின் முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

To Read in English: The political importance of regional parties

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x