

சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘நீர்வழிப்படூஉம்’ நாவல் ஒரு குறிப்பிட்ட நாவிதர் சமூகம், கடையனுக்கும் கடையனாய்வாழும் அவலத்தை வரிக்கு வரி, காட்சிக்குக் காட்சிப் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி. இந்நாவலின் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையே அந்தச் சமூகத்தின் தொகுப்பாகப் பார்க்கிறேன். ஒரு கதாபாத்திரமாவது கொஞ்சம் வளமைக் குறியீட்டோடு படைக்கப்பட்டிருக்கும் என்று பார்த்தால், எங்கும் அது பதிவாகவில்லை. எல்லாவற்றிலும் தனித்துவம்.
பிரதியின் ஆசிரியர் தன் வாழ்வினூடான படிமங்களைப் பல்வேறு கதை மாந்தர்களின் பண்புகளிடையே அந்தந்தச் சூழலின் வட்டார மொழிக்குள் இணைத்து, இந்தப் பிரதியை ஒரு பண்பாட்டுச் சேலையின் நூலாக அளித்துள்ளார். இந்நாவலின் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடையே எவ்வித முன்னேற்றமும் இல்லை.
ஆனால், பண்ணைக்காரர்களுக்கு அடிப்படை வேலைகள் அனைத்தும் இச்சமூக உதவியின்றி நடக்கவாய்ப்பில்லை என்பதைப் பிரதி பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறது. கி.ராஜநாராயணனைப் போல, தேவிபாரதி கொங்கு வட்டார வழக்குச் சொற்களை மிகக் கவனமாகவும் கலைத்துவம் சிதறாமலும் கதையினூடே சொல்லியிருக்கிறார்.
காருமாமா கதாபாத்திரம்தான் இதன் மையம் எனலாம். அந்தக் கதாபாத்திரத்தின் மனைவி ராசம்மா, தன் குழந்தைகளுடன் அவ்வூரில் வாழ்ந்து வந்த ஒருவரோடு சென்றுவிடுகிறார். காருமாமாவின் மனதை இந்தச் சம்பவம் செல்லரிப்பதுபோல அரிக்கத் தொடங்கியது. அவருடைய இறப்பு, அவரைப் பிரிந்து சென்ற ராசம்மா, மகன், மகள் எல்லோரையும் சேர்த்துவிடுகிறது.
பெரியம்மா, காருமாமாவின் அக்கா, கதையின் சரடை இழுத்துச் செல்பவராக இருக்கிறார். “தாலியறுக்க வந்துருக்கறாளாமா? தாலியறுக்க ஆரு கட்டுன தாலிய அறுக்கப்போறாளாமா அவொ? எம் பொறந்தவங் கட்டுன தாலியா, இல்ல அந்தச் செட்டி கட்டுன தாலியா? இருக்கட்டு நல்லாக் கேட்டுடறனா இல்லையானு பாரு” என்கிறார் பெரியம்மா. அவரது “விரிந்த கண்களில் சிலிர்த்து நின்ற மூர்க்கத்தைக் கண்டு திகைத்துப்போனேன்” என ராசா கதாபாத்திரம் சொல்வதிலிருந்து, காருமாமாவைவிட்டுப் பிரிந்துபோன ராசம்மாவின் மீது பெரியம்மாவுக்கு உள்ள கோபத்தை, எரிச்சலை உணர முடியும்.
அதேபோல “தான் இழந்த வாழ்வைத் தாயம் உருட்டுவதன் மூலம் மூர்க்கமாக உருட்டினாள் ராசம்மா அத்தை” என்று சொல்லும் இடம் மிகுந்த கவனத்துக்குரியது. நாவலாசிரியர் ஓரிடத்தில்கூட, கவனம் சிதறாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். வறுமை மிகுந்த காட்சிப் பதிவுகள் இரக்கத்தைத் தானாகப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பு ஊடுருவுகிறது.
வாழ்க்கையை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும். வறுமையும் கனத்த இதயமும் கொண்ட காருமாமா, சில இடங்களில் மட்டுமே பேசியிருக்கிறார். ஆனால், கதை முழுவதும் பேசப்படுகிறார். சிலரின் அமைதி, பல நேரம் அழகான நினைவுகளைத் தந்துவிடும். சிலரின் இருப்பு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கச் சொல்லும். எத்தகைய இடர் வந்தாலும் காருமாமா போலக் கடந்து போகக் கற்றுக்கொடுக்கும். அதைத்தான் தேவிபாரதியும் சொல்கிறார்.
- அரங்கமல்லிகா
பேராசிரியர்
தொடர்புக்கு: munaivarmallika@gmail.com