Published : 21 Feb 2018 08:40 am

Updated : 21 Feb 2018 10:26 am

 

Published : 21 Feb 2018 08:40 AM
Last Updated : 21 Feb 2018 10:26 AM

தாய்மொழி மூலமாகவே நீடித்த வளர்ச்சி சாத்தியம்!

பி

ரெஞ்சு புரட்சியின் தோல்வியைப்பற்றி காரல் மார்க்ஸ் எழுதிய முக்கியமான வரலாற்று ஆய்வு நூல் ‘லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்’. அந்நூலில் இடம்பெற்ற ஓர் உதாரணம் மொழியியலில் முக்கியமானதொரு பாலபாடம். புதிதாக ஒரு மொழியைக் கற்க ஆரம்பித்திருப்பவர் எப்போதும் தன்னுடைய தாய்மொழியில் அதை மொழிபெயர்த்துக்கொள்வார் என்று அந்நூலில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். நினைவில் காடுள்ள மிருகம்போல, உயர் கல்வி பயிலும் மாணவர்கள் முதல், பிழைப்புக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் வரையில் மனிதர்களின் நினைவுகளில் தாய்மொழியே நிறைந்திருக்கிறது.


மெல்ல அழியும் மொழிகள்

இந்த ஆண்டுக்கான தாய்மொழி தினத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை மையப்படுத்தியிருக்கிறது ‘யுனெஸ்கோ’ அமைப்பு. ஒன்று, மொழி பன்மைத்துவம், மற்றொன்று, தாய்மொழியை முதன்மையாகக் கொண்ட பன்மொழிக் கற்றல். நீடித்த வளர்ச்சிக்கு இவை இரண்டும் அவசியமானவை என்று வலியுறுத்தியிருக்கிறது யுனெஸ்கோ. உலகமயம் பொருளாதாரத் துறையில் மட்டுமின்றி கலை, பண்பாட்டு ரீதியிலும் பரவலாகிவருகிறது. இந்நிலையில் மொழி பன்மைத்துவம் தவிர்க்க முடியாதது.

ஐரோப்பியக் கண்டத்தில் சரிபாதிக்கும் மேல், இரண்டு மொழிகளில் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். மொழி வேறானாலும், எழுத்துகளில் பெரிய மாற்றமில்லை என்பது ஒரு காரணம். ஆனால், அரசியல், கலாச்சார ரீதியில் துணைக்கண்டமாக வர்ணிக்கப்படும் இந்தியாவில் மொழி பன்மைத்துவம் ஊக்குவிக்கப்படவில்லை. மாறாக ஒரே மொழியே அரசு செயல்பாட்டின் அத்தனை நிலைகளிலும் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டுவருகிறது. விளைவு, இந்தியாவில் தற்போது பேசப்பட்டுவரும் 780 மொழிகளில், 250 மொழிகள் இன்னும் 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள் மொழியியலாளர்கள்.

யார் சிறுபான்மையினர்?

இன்று யுனெஸ்கோ முன்வைக்கும் மொழிப் பன்மைத்துவம் என்ற முழக்கம், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில்? இன்றைய அரசியல் விவாதங்களில் அடிக்கடி இடம்பெறும் வார்த்தைகளில் சிறுபான்மையினர் என்பதும் ஒன்று. பயன்பாட்டில், அந்த வார்த்தை மதச் சிறுபான்மையினரைக் குறிப்பதாகவே இருக்கிறது. ஆனால் அரசியல் சட்டம் வரையறுத்துள்ளபடி, சிறுபான்மையினர் என்ற வார்த்தை மத அடிப்படையை மட்டுமே கொண்டது அல்ல. மொழியின் அடிப்படையிலான சிறுபான்மையினரையும் அது குறிக்கிறது. சிறுபான்மையினருக்கான உரிமைகள் என்பது மதச்சார்பற்றத் தன்மைக்கான விவாதங்களோடு முடிந்துவிடவில்லை. மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டிருக்கிறது.

மதச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் ஊர்தோறும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மொழிச் சிறுபான்மையினர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை இன்னும் உருவாகவில்லை. கர்நாடகத்தில் மொழிச் சிறுபான்மையினர் தொடங்கிய கல்வி நிறுவனத்துக்கு அம்மாநில அரசு அங்கீகாரம் அளிக்க மறுத்தது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் என்பது மதச் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கானது என்பதுதான் அரசுத் தரப்பின் பதிலாக இருக்கிறது. மொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் குறித்த ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் நிலை என்னவென்று மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை நாளை (பிப்.22) நடக்கவிருக்கிறது.

மொழிச் சிறுபான்மையினர், மாநிலத்தில் முதன்மையாக பேசப்படும் மொழியில் திறனை வளர்த்துக்கொள்வதற்காக உதவித்தொகை வழங்கவேண்டும், அவர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்கப்பட வேண்டும், சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும் என்பது போன்ற ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கையை மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ கண்டுகொள்ளவில்லை என்பதுதான் உண்மைநிலை.

ஓயாத உரிமைக் குரல்கள்

இந்திய அரசியலமைப்பின்படி ஆட்சி மொழிக்கான உரிமைக் குரல்களில், பட்டியல் மொழிகள் மட்டுமே இடம்பிடித்திருக்கின்றன. இதுவரை இடம்பிடித்திருப்பது வெறும் 22 மொழிகள்தான். பட்டியலில் சேர்க்கக்கோரிக் காத்திருக்கும் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 40. அரசியல் ரீதியான இந்த உரிமைப் போராட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படாத முக்கியமான விஷயம், எண்ணிக்கையில் குறைவான மக்களால் பேசப்பட்டுவரும் மொழிகளின் பாதுகாப்பு. மொழிப் பன்மைத்துவம் கலாச்சாரப் பிரச்சினை. தாய்மொழியில் கல்வி கற்றல் கல்வித் துறை சார்ந்த பிரச்சினை. ஆனால் இரண்டுமே இங்கே அரசியலாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ஓசையில்லாமல் பல மொழிகள் மடிந்துகொண்டிருக்கின்றன.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் அந்தந்த மாநில எல்லையில் வாழும் பழங்குடிகள் மீது வலுக்கட்டாயமாகப் பிராந்திய மொழிக் கல்வி திணிக்கப்பட்டது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பக்கத்து பக்கத்து மாநிலங்களில் வெவ்வேறு மொழிகளைக் கற்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். சந்தால் பழங்குடிகளின் நிலை இதில் மிகவும் பரிதாபத்திற்குரியது. ஒடிஷாவில் வசிப்பவர்கள் ஒரிய மொழியையும், பிஹாரில் வசிப்பவர்கள் இந்தியையும், மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழியையும் கற்க வேண்டிய நிர்பந்தம். ஒப்பீட்டளவில், தென்னிந்தியாவில் இந்த நிலை குறைவு. எனினும் தமிழ்நாட்டிலும்கூட இருளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் இந்தப் பிரச்சினையைத்தான் எதிர்கொள்கிறார்கள்.

கல்வியின் அடித்தளம்

ஆரம்பநிலைக் கல்வி தாய்மொழி வழியாகவே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் யுனெஸ்கோ அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. கல்விக்கு வலுவான ஒரு அடித்தளத்தைத் தாய்மொழிவழிக் கற்றலே உருவாக்குகிறது. இரண்டாவதாகப் படிக்கும் எந்தவொரு மொழியும் மற்றொரு பாடமாகவே அமைய வேண்டும். மொழியைப் புரிந்துகொள்ளவும் கையாளவும் தடுமாறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதே முக்கியம். கண்மூடி உருப்போடும் மனனக் கல்வி முறையைக் காட்டிலும் பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதுதான் கல்வியின் தரத்தை உயர்த்தும். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே தாய்மொழியில் உரையாடல் நிகழ்ந்தால்தான் பாடங்களைக் குறித்து மாணவர்களுக்குத் தெளிவு பிறக்கும். முக்கியமாக, பெண் கல்வியை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் அது தாய்மொழிவழிக் கல்வியினாலேயே சாத்தியம்.

அடுத்துவரும் தலைமுறை, கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தங்களது குழந்தைகளின் மீது பிறமொழிவழிக் கல்வியைச் சுமத்தும் பெற்றோர்கள், யுனெஸ்கோவின் அறிவுறுத்தல்களுக்குக் காதுகொடுக்க வேண்டும். அதேநேரத்தில், தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துபவர்கள், பன்மொழிக் கற்றலின் அவசியத்தையும் உணர வேண்டும்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

பிப்ரவரி 21, உலக தாய்மொழி தினம்


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x