Published : 21 Mar 2024 08:48 AM
Last Updated : 21 Mar 2024 08:48 AM

நீர் மாசைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் தேவையா?

உலக அளவில், அனைத்துத் தொழிற்சாலைகள்-நகராட்சி களால் வெளியேற்றப்படும் கழிவுநீரில் 80% எவ்வித சுத்திகரிப்பும் இன்றி, சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படுவதாக, நீர் வீணாவது குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை (World Water Day 2017: Why waste water?) குறிப்பிடுகிறது. இந்தப் போக்கு சுற்றுச்சூழலுக்கும், மனிதர்கள் உள்ளிட்ட ஏராளமான உயிர்களுக்கும் ஆபத்தை விளை வித்துக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் நகரங்களில் இருக்கும் பெரும்பாலான நீர்நிலைகளும் ஆறுகளும் மாசடைந்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாட்டின் 70% மேற்பரப்பு நீர், நுகர்வுக்கே தகுதியற்றது என்று ஆசிய வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Asian Development Research Institute [ADRI]) தெரிவிக்கிறது.

அந்த வகையில், பிப்ரவரி 24 அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ‘நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் - 1974’இல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்தை (The Water (Prevention and Control of Pollution) Amendment Bill - 2024) மீளாய்வு செய்வது அவசியமாகிறது.

சட்டத் திருத்தத்தின் பின்னணி: எந்தவொரு சட்டத் திருத்தத்தின்போதும், அதன் சட்ட முன்வரைவில், திருத்தம் மேற்கொள்வதற்கான நோக்கமும் காரணமும் தெரிவிக்கப்படும். அந்த வகையில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, மேற்சொன்ன சட்டத் திருத்த முன்வரைவு, நீர்மேலாண்மை தொடர்பாக நிலவிவரும் பிரச்சினைகளைக் கவனப்படுத்துகிறது.

‘அரசு தன் குடிமக்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் வைக்கும் நம்பிக்கையே ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படை. அந்த வகையில் காலஞ்சென்ற விதிகளும், கட்டுப்பாடுகளும் அந்நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கிறது. எனவே, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ (Minimum Government, Maximum Governance) என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவது அரசின் நோக்கமாகிறது.

இதன் காரணமாகவே, மேற்சொன்ன சட்டத்தில் உள்ள சில பிரிவுகளில் கூறப்பட்ட ‘சிறிய விதிமீறல்கள்’ மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாத நிலையில், அதற்குச் சிறைத் தண்டனை விதிப்பது, குடிமக்களையும், தொழில் நிறுவனங்களையும் துன்புறுத்துவதாக அமைகிறது.

எனவே, குடிமக்களின் வாழ்க்கையையும், தொழில்கள் செய்வதற்கான சூழலையும் எளிதாக்கவும் (Ease of living and ease of doing business), சிறைத் தண்டனைக்கான அச்ச உணர்வின்றியும் அவர்கள் செயல்படுவதை உறுதிசெய்யவுமே திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன’ என அந்த முன்வரைவில் கூறப்பட்டிருக்கிறது. இது சரியான வாதமா என்பது முக்கியமான கேள்வி.

சிறைத் தண்டனை நீக்கம்: பொதுவாக, சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) நிலைநிறுத்துவதுதான் ஜனநாயகத்தின் முதன்மைக் கூறு. சட்டத்தின் ஆட்சி நடப்பது உறுதிசெய்யப்பட்டால், குடிமக்க ளுக்கும் தொழில்களுக்கும் எந்த வகையிலும் அரசின் மீது நம்பிக்கையின்மை ஏற்படாது.

மாறாக, அரசின் மீதான நம்பிக்கையை, அது வலுப்படுத்தவே செய்யும். மேலும், சுற்றுச்சூழலுக்கு எதிரான மனிதச் செயல்பாடுகளால் உந்தப்பட்டுக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம், அனைத்துஉயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, குடிமக்களின் வாழ்க்கை யையும், தொழில்கள் செய்வதற்கான சூழலையும்எளிதாக்குவது, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்சநிர்வாகம்’ என்கிற மாதிரியான கொள்கைகளைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களில் நடைமுறைப்படுத்துவது சரியல்ல. சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்துச் சட்டங்களும் மனித மையக்கோட்பாட்டின் (Anthropocentric) அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

எனவேதான் நம் வாழ்க்கையையும், நிறுவனங்கள் தொழில் செய்வதற்கான சூழலையும், எளிமைப்படுத்தும் வண்ணம் அச்சட்டப் பிரிவுகளின் கீழுள்ள சிறைத் தண்டனையை நீக்க விழைகிறோம். மாறாக, ஐரோப்பிய - வட அமெரிக்க நாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து அச்சட்டங்களை மேலும் வலுப்படுத்திவருகின்றன.

சட்ட முன்வரைவில் குறிப்பிட்டதுபோல் ‘சிறிய விதிமீறல்’களால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லையெனில், சட்டத்தின் பார்வையில் அங்கு குற்றமே நிகழவில்லை எனப் பொருள்படுமே! விதிமீறல், சிறியதாகவே இருப்பினும், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் அது குறைந்தபட்சத் தாக்கத்தையேனும் ஏற்படுத்தும்.

எனவேதான் அப்படிப்பட்ட விதிமீறல் களுக்கும் அச்சட்டத்தில் சிறைத் தண்டனைக்கான வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக, பிரிவு 24, 25, 26 ஆகியவை கழிவுநீர் அல்லது வணிகக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கப்படுவதைத் தடுப்பவை.

மிக முக்கியமாக, அப்பிரிவுகளுக்குச் சிறைத் தண்டனை குறிப்பிடப்பட்டிருந்தாலும், குற்றச்செயலின் தாக்கத்துக்கேற்ப, குற்றவாளிகளுக்கு வெறும் அபராதம் மட்டும் விதிக்கும் வழிவகையும் உண்டு. இப்படியான சூழலில், சிறைத் தண்டனையை முற்றிலும் நீக்கியது எவ்வகையில் சரி என்று கேட்க வேண்டியிருக்கிறது.

அதே நேரம், ‘சிறிய விதிமீறல்’ என வரையறுக்கப்படும் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு, அபராதத் தொகையை உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், இதிலும் சிக்கல்கள் உண்டு. குற்றம்புரிந்த பெருநிறுவனங்களின் பொறுப்பாளர்களும், பணம் படைத்த தனிநபரும், அபராதத் தொகை செலுத்தத் தயங்க மாட்டார்கள்.

அதே வேளையில், சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் விரும்ப மாட்டார்கள். எனவே, சிறைத் தண்டனை, ஒரு வகை அச்ச உணர்வூட்டியாகச் செயல்பட்டு, குற்றம் நிகழாமல் தடுக்கத் துணைபுரிகிறது. அதை நீக்குவது அர்த்தமற்றது.

சுற்றுச்சூழல் சட்டங்கள் அச்சுறுத்துகின்றனவா? - இக்கேள்விக்கான பதிலை அறிய சுற்றுச்சுழல் குற்றங்களைத் தடுக்கும் முக்கியமான சட்டங்கள் நம் நாட்டில் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் - 1974 மற்றும் காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் - 1981 ஆகியவற்றின் கீழ், 2014 முதல் 2022 வரையிலான ஒன்பது ஆண்டுகளில், நம் நாடு முழுமைக்கும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 1,094 தான். சராசரியாக ஆண்டுக்கு, 122 வழக்குகளும், ஒவ்வொரு மாநிலம் - யூனியன் பிரதேசங்களில், வெறும் மூன்று வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் மிகக் குறைவான வழக்குகளே பதிவுசெய்யப்படுகின்றன என்பதை இந்தத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. இங்ஙனம் செயல்படுத்தப்படுகிற நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 எப்படித் தொழில்களுக்கும், நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் சிறைத் தண்டனைக்கான அச்ச உணர்வை ஏற்படுத்தும்? போதாக்குறைக்கு, சிறைத் தண்டனையை நீக்குவது சிக்கலை இன்னும் அதிகப்படுத்தும்.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களில், நியாயப்படுத்த இயலாத காரணங்களைக் கூறித் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து, அனைத்து உயிர்களுக்கும் பொதுவான சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, அச்சட்டங்களை மிக அதிக அளவிலும், வீரியத்துடனும் செயல்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீர் மேலாண்மைக்கும் அது மிக மிக முக்கியம்!

- தொடர்புக்கு: shankar.prakash@cag.org.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x