Published : 21 Feb 2018 08:47 AM
Last Updated : 21 Feb 2018 08:47 AM

நதிநீர்ப் பங்கீட்டில் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுப்பது சரியா?

கா

விரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில், தனது இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களில் 20 டி.எம்.சி. அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகக் கூறியிருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 2007 பிப்ரவரி 5 வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவந்த 192 டி.எம்.சி. நீரிலிருந்து 14.75 டி.எம்.சி.யைக் குறைத்து தற்போது 177.25 டி.எம்.சி. என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நிலத்தடி நீரின் கூறுகள் நதி நீரிலிருந்து பல்வேறு வகைகளில் வேறுபட்டவை. இந்நிலையில், மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் நிலத்தடி நீரைச் சேர்த்து முடிவுகள் எடுப்பது சரியாக இருக்குமா என தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

ஏன் நிலத்தடி நீரைக் கணக்கில் கொள்ளக் கூடாது?

முதலாவதாக, நிலத்தடி நீரின் இருப்பளவைக் கொண்டு நதி நீர்ப் பங்கீட்டைச் செய்வது துல்லியமாக இருக்காது. எதிர்காலத்தில் இது போன்ற நதிநீர்ப் பிரச்சினைகள் மற்ற மாநிலங்களில் ஏற்படும்போது இதை முன் உதாரணமாகக் கொண்டு முடிவுகள் எடுத்தால் அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மிக முக்கியமாக, நிலத்தடி நீர் என்பது நதிநீரிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அணைக்கு வரும் நதிநீரின் அளவையும், அணையில் உள்ள நீரின் அளவையும் ஏறக்குறைய துல்லியமாக அளவிட முடியும். ஆனால், இதேபோன்று நிலத்தடி நீரின் இருப்பைத் துல்லியமாக மதிப்பிட முடியுமா என்பது சந்தேகம். ஆராய்ச்சியாளர்களே இவ்விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை.

ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு நிலத்தடி நீர் இருப்பு உள்ளது என்பதே ஒரு மாயைதான். பயன்படுத்தக்கூடிய அளவுக்கு நிலத்தடி நீர் அங்கு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம், ஏனெனில் நம் நாட்டில் நிலத்தடி நீர் இருப்பை, புவியியல்ரீதியாக அளவிடுகிறார்கள். புவியியல்ரீதியாக உள்ள அளவுக்கும் பூமிக்கு அடியில் இருக்கும் நீரின் அளவுக்கும் பெரிய வேறுபாடு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, காவிரிப் பாசனம் பெறும் தஞ்சை மாவட்டத்தின் நிலத்தடி நீரை அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கூடப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. நிலத்தடி நீரை, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது.

மேலும், உச்ச நீதிமன்றம் கூறுவதுபோல, தமிழகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளில் 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் இருப்பு உள்ளதா என்பதே சந்தேகத்துக்குரிய விஷயம். அப்படியே இருந்தாலும், நிலத்தடி நீர் பெருமளவு பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் 2017 ஜூனில் வெயிடப்பட்டுள்ள ‘இந்தியாவின் மாறுகின்ற நிலத்தடி நீர் வளங்கள்’ என்ற விரிவான அறிக்கை, காவிரிப் பாசனம் பெறும் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டுவருவதாகக் கூறுகிறது. உதாரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓர் ஆண்டுக்கு மொத்தமாகப் பயன்படுத்தக்கூடிய நிகர நிலத்தடி நீரின் அளவு 74,652 ஹெக்டேர் மீட்டர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 75,971 ஹெக்டேர் மீட்டர் அளவுக்கு இம்மாவட்டத்தில் உறிஞ்சப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது. அதாவது, எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இல்லை என்கிறது இந்த அறிக்கை. காவிரிப் பாசனம் பெறும் மற்ற மாவட்டங்களான நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, கரூர், திருவாரூர் போன்றவற்றில் ஏறக்குறைய இதேபோன்ற நிலைமை உள்ளதாகவும் தெளிவாகக் கூறுகிறது. இந்நிலையில், எப்படி காவிரிப் பாசனம் பெறும் விவசாயிகள் நிலத்தடி நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவது சாத்தியமாகும்?

செலவு அதிகம்

ஒரு பேச்சுக்காக, உச்ச நீதிமன்றம் கூறுவது போல 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் காவிரிப் பாசனப் பகுதிகளில் இருப்பதாக ஏற்றுக்கொண்டாலும், நதி நீரைப் போல விவசாயிகள் நிலத்தடி நீரை அவ்வளவு எளிதாகப் பயன்படுத்திவிட முடியாது. நதி நீர் மூலமாகக் கால்வாய்ப் பாசனம் பெறும் இந்தியாவில் அனைத்து விவசாயிகளுக்கும் நீர்ப்பாசனம் மிகக் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிணற்றுப் பாசனத்தை உருவாக்குவதற்கு ஆகும் செலவு இதை விடப் பன்மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பாரம்பரியமாக நதிநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்திவந்த விவசாயிகளிடம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தச் சொன்னால் அதற்கான செலவுகளை எப்படிச் சமாளிப்பார்கள்.

நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தத் தூண்டுவது தமிழகம் போன்ற மாநிலத்துக்கு உகந்ததல்ல என்று மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரிய அறிக்கையின் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. காவிரியில் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து குறைந்து வருவதன் காரணமாகக் காவிரிப் பாசனம் பெறும் கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர் கடுமையாக உறிஞ்சப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆற்றில் நீர் ஓடாவிடில் நிலத்தடி நீர் எப்படிச் சுரக்கும்? உதாரணமாக, ஒர் ஆண்டுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரில் கரூர் மாவட்டத்தில் 97%-ம், நாகப்பட்டினத்தில் 101%-ம், தஞ்சாவூர் 102%-ம், திருவாரூரில் 79%-ம், திருச்சி மாவட்டத்தில் 81-ம்%, உறிஞ்சப்படுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்திலுள்ள 1,139 வட்டங்களில், வெறும் 429 வட்டங்களில் (30%) தவிர, மற்ற இடங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதாகவும், இதன் காரணமாக 35 வட்டங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் காவிரிப் பாசனம் பெறும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் கடலுக்கு அருகில் உள்ள நிலையில், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டால் அதில் உப்புநீர் கலந்து நீரையும் விளைநிலங்களையும் பாழ்படுத்திவிடாதா?

14.75 டி.எம்.சி. நீரைத் தமிழகம் இழப்பதால், கடைமடையிலுள்ள ஏறக்குறைய 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி இல்லாமல் போய்விடும். கடைமடை விவசாயிகள் காலங்காலமாக போதியளவு நீர் கிடைக்காமல் வறுமையில் சிக்கிப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் வேளையில், இந்த நீர்க் குறைப்பு அவர்களின் வாழ்வாதாரத்தில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி விடாதா?

தமிழகத்துக்கு முதல் ஆதாரமாகவுள்ள வடகிழக்குப் பருவ மழை அடிக்கடிப் பொய்த்துப்போவதால், நீராதாரங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. தமிழகத்தில் தனிநபருக்குக் கிடைக்கூடிய நீரின் அளவு பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர்ப் பஞ்சம் இப்பொழுதே பல மாவட்டங்களில் தலைவிரித்தாடுகிறது. அத்துடன், பயன்படுத்தக்கூடிய புதிய நீர்த்திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் பாரம்பரியச் சாகுபடி உரிமை உள்ளவர்களுக்கே நதிநீர்ப் பங்கீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. இப்படியாக, கண்முன் உள்ள உண்மைகளை மறந்துவிட்டு, நிலத்தடி நீரைக் காரணமாகச் சொல்லி நதிநீர்ப் பங்கீடு செய்வது சரியா?

- அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர் மற்றும்

துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

தொடர்புக்கு: narayana64@gmail.com]

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x