‘ஆவண அமுதம்’ இதழ்கள்: வரலாற்றைச் சொல்லும் பிரதிகள்

‘ஆவண அமுதம்’ இதழ்கள்: வரலாற்றைச் சொல்லும் பிரதிகள்
Updated on
2 min read

தமிழ்நாடு ஆவணக் காப்பகம், 1986ஆம் ஆண்டு ‘ஆவண அமுதம்’ என்கிற காலாண்டிதழை வெளியிடத் தொடங்கியது. ஓர் அரசுத் துறை, ஒரு காலாண்டிதழை நடத்த முன்வந்ததும், ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இடைவிடாமல் நடத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது. 1986ஆம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் முதல் இதழிலிருந்து, 1994ஆம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் இதழ் வரை தொடர்ச்சியாக 31 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. ‘ஆவண அமுத’த்தின் முதல் ஐந்து இதழ்களும் கடைசி ஒன்பது இதழ்களும் தட்டச்சில் வெளியாகியிருக்கின்றன. மற்ற இதழ்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

1640ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் இன்றைய அரசாணைகள் வரை இங்குள்ளன. ஏறக்குறைய 375 ஆண்டுக் காலத் தமிழக, இந்திய வரலாறு ஆவணக் காப்பகத்துக்குள் உறங்குகிறது. பல்வேறு ஆய்வாளர்கள், அறிஞர்கள், சமூகவியல், வரலாற்று மாணவர்கள், எழுத்தாளர்கள், மக்கள் ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்தினாலும், பொக்கிஷமாய் இருக்கிற வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பெருவாரியான மக்களை, ஆய்வாளர்களைச் சென்றுசேர வேண்டும் என்கிற வரலாற்று அக்கறையில் ‘ஆவண அமுதம்’ காலாண்டிதழ் தொடங்கப்பட்டது.

இதழ் இரு பிரிவாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதி ஆங்கிலம், இரண்டாம் பகுதி தமிழ். ஆங்கிலப் பகுதியில் ஆய்வுக் கட்டுரைகளும், ஆவணக் காப்பகத்தில் இருக்கும் ஆவணங்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்ப் பகுதியில் சின்னஞ்சிறிய துணுக்குகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள். எடுத்துக்காட்டாக மதராஸில் எப்போது வீட்டுவரி வசூலிப்பது தொடங்கப்பட்டது, பாந்தியன் சாலை என்ற பெயர் ஏன் வந்தது என்பது போன்ற சுவாரசியமான குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. பத்திரிகையாளராக பாரதியார் சந்தித்த தடைகள், பாரதியாரின் நகைச்சுவை பற்றி கல்கி எழுதிய கட்டுரை, பாரதியாரின் புதுச்சேரி நாள்கள் எனப் பாரதியாரைப் பற்றி பல கட்டுரைகள் உள்ளன. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடராகப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஆணையர் தன் அறிமுகக் குறிப்பில், ‘ஆவணக்காப்பகத்தின் பணியாளர்களும் புதிய ஆய்வாளர்களும் எழுதுவதற்கான வாய்ப்பை உருவாக்கித்தர’ இக்காலாண்டிதழ் தொடங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கிருந்த தலைமைச் செயலாளரும் ஓரிதழில் கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆவணக் காப்பகத்தை, அதில் இருக்கும் துறைவாரியான ஆவணங்கள், ஆவணங்கள் உருவாகிய விதம், ஒழுங்குபடுத்தப்பட்ட விதம், பூச்சிகள், கறையான்கள், வெயில், மழை, ஈரப்பதம் முதலியவற்றில் இருந்து நான்கு நூற்றாண்டுகளாக எவ்விதம் பராமரிக்கப்பட்டு வருகிறது, மூல ஆவணங்களைக் கையாளாமல், அதன் பிரதியாக்கப்பட்ட, அச்சாக்கப்பட்ட நூல்களை வளமாகக்கையாள்வது எப்படி என ஒவ்வோர் இதழிலும் ஆய்வாளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. தங்களிடம் இருக்கும் ஆவணங்களை முறையாக, எளிதாக ஆய்வாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘ஆவண அமுதம்’ இதழ் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கான தரவுகளைக் கொடுப்பதுடன் அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்காக ஆவணக் காப்பகம் முன்னெடுத்த இப்பணி வியப்பளிக்கிறது.

ஆவணங்களை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷார். பிரிட்டிஷாரின் ஆவணங்களின் வழியாகவே நவீன இந்தியாவின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அவ்வரலாற்றை எழுதும்போது, பிரிட்டிஷாரின் ஆவணங்களில் இருக்கும் தகவல்களை, இருப்பதை இருக்கும்விதத்திலேயே எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தகவல்களின் உண்மைத்தன்மையை, சார்பை, இந்தியரின் பார்வையில் இருந்து அணுகவேண்டியதன் அவசியத்தை, ‘ஆவண அமுத’த்தின் கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவில் காலூன்றிய ஐரோப்பியர்களில் ஆர்மேனியர்கள் அதிகம் பேசப்பட்டதில்லை. வணிகத்தில் தேர்ந்தவர்களான ஆர்மேனியர்களின் பங்குச் சென்னை மாகாணத்தில் தனித்துவமானது. ஆர்மேனியர்களின் குடியேற்றம் பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று முதல் இதழிலேயே வெளியாகியுள்ளது.

அன்றைய சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் நடைபெற்ற சுவாரசியமான விவாதங்களை, ‘ASIATIC JOURNAL’ வெளியிட்டிருக்கிறது. அவ்விதழ்களில் இருந்து தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், பாரதியார் பாடல்கள் குறித்து எழுந்த விவாதம், பெண்கள் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக எழும்பூரில் அரசு மருத்துவமனை அமைத்தல் முதலியவற்றின் மேல் நடத்தப்பட்ட விவாதங்களை, ‘ஆவண அமுதம்’ மறுபிரசுரம் செய்திருக்கிறது.

1755ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நத்தக்கோட்டையில் பிரிட்டிஷார் நடத்திய படுகொலை பற்றி கட்டுரை ஒன்று உள்ளது. காரணமற்ற காரணம் ஒன்றுக்காக, 394 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் அது. ஜமீனில் இருந்த ஆடு, மாடு, குதிரை என ஒன்றையும் விட்டுவைக்காமல் ஆங்கிலேயே அதிகாரி ஒருவன் நடத்திய முதல் இந்தியப் படுகொலை பற்றி முதன்முறையாக இந்த இதழில்தான் படித்தேன். ஆறே பேர் உயிர் தப்பியதாக கால்டுவெல் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வந்த வரலாறு, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றிய வரலாறு, சாதிகளின் தோற்றம் பற்றி ஸ்டான்லி ரைஸ் எழுதிய கட்டுரை, சென்னை மாகாணத்தில் நடந்த கல்வி முன்னெடுப்பு எனத் தீவிரமாக எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளுக்கு இடையில்,ஓர் இந்துப் பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க, வெள்ளி நகைகளின் பட்டியல், ஓர் இந்துப் பெண் காலிலும் கழுத்திலும் அணிந்திருந்த நகைகளின் பட்டியல் எனச் சமூகவியல் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆவணக் காப்பகத்தின் வரலாற்றில் இரண்டு காப்பாட்சியர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. காப்பகத்தின் முதல் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஆங்கிலேயர் ஹென்றி டாட்வெல், முதல் இந்தியராகப் பணியாற்றிய டாக்டர் பி.எஸ்.பாலிகா. இருவரின் சாதனைகள் குறித்த கட்டுரைகள் இன்றைய தலைமுறைக்கும் தேவையானவை. மறந்துகொண்டே இருப்பது மனித மனத்தின் இயல்பு. நினைவூட்டிக்கொண்டே இருப்பது சமூகத்தின் பொறுப்பு. இந்த இதழ் தொடங்கும்போது சொல்லப்பட்டுள்ள நோக்கங்கள் எல்லாம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நமக்கு நினைவூட்டப்பட வேண்டியவை. ஆவணங்கள் பற்றிய அக்கறையைப் பொதுச் சமூகத்தில் வளர்க்க அவர்கள் எவ்வளவு முயன்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ‘ஆவண அமுதம்’ இதழ்கள் துணை நிற்கின்றன. ஆவண அமுதத்தின் மின் நூல்களை https://www.tamildigitallibrary.in/ இணைப்பில் வாசிக்கலாம். கையில் வைத்துப் படித்துப் பாதுகாக்க விரும்புபவர்கள், பழைய பிரதிகளை எழும்பூரில் இருக்கும் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் விலைக்குப் பெறலாம்.

- அ.வெண்ணிலா
எழுத்தாளர், ஆய்வாளர்
தொடர்புக்கு: vennilaa71@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in