Published : 19 Feb 2018 08:54 AM
Last Updated : 19 Feb 2018 08:54 AM

விவசாயத் தொழிலாளர்களுக்கு விடிவு பிறக்குமா?

கா

விரி நதிநீர்ப் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஆறு வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது. அதையும்கூட கர்நாடகம் எதிர்த்துவருகிறது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள். உண்மையில், காவிரி நதிநீர்ப் பங்கீடு டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, விவசாயத்தைச் சார்ந்து வாழும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையும்கூட.

காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில், தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள். டெல்டா பகுதி ஒரு காலத்தில் மூன்று போகங்கள் விளைந்த பூமி. காலப்போக்கில் அது இரண்டாகி இப்போது சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது. 1971 முதல் பெருமளவிலான விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்பது ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடிஸ்’ நிறுவனத்தின் ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு நீர் மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன் வெளியிட்ட இடைக்கால ஆய்வில், கடந்த 40 ஆண்டுகளில் இந்த மூன்று மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விவசாய நிலங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன என்று தெரியவந்திருக்கிறது.

சாகுபடி பரப்பளவு குறைந்துவருவது, விவசாயத்தையே முழு நேரத் தொழிலாக கொண்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்திருக்கிறது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கேரளாவுக்குத் தோட்டத் தொழில் மற்றும் உதிரி வேலைக்குச் செல்வது அதிகரித்துவருகிறது. இளம் பெண்கள், சிறுவர், சிறுமிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் சாயப்பட்டறைகளில் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர்.

கல்வியில் டெல்டா மாவட்டங்கள் பின்தங்கியமைக்கு விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போதிய பொருளாதார வசதிகள் கிடைக்காததே காரணம் என்கிறார் டெல்டா மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜி.வரதராஜன். அரசு கணக்கின்படி ஒரு விவசாயத் தொழிலாளர் குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ. 6,450 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓராண்டில் அவர்களின் கடன் சுமை ரூ. 1.40 லட்சம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வருமானம் குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருந்தால் கல்வியில் எப்படி அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்?

விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் விவசாயம் மற்றும் அதன் சார்புத் தொழில்கள் செய்து பழகியவர்கள். வேலைவாய்ப்பின்மையால் வீட்டிலேயே அவர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம், உணவு உள்ளிட்ட சில தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்துகொள்ள உதவலாம். மற்ற செலவுகளுக்கு அவர்கள் எங்கே போவார்கள்?

விளைநிலங்களாக இருந்து பயிரிடாத காரணத்தால் தரிசு நிலங்களாக மாறியுள்ள நிலங்களின் பரப்பளவும் கவலைக்குரியதாக உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார் எஸ்.ஜனகராஜன். இந்தத் தரிசு நிலங்களும் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் போய், வேறு பயன்பாட்டுக்கு மாறும் அபாயம் உள்ளது எச்சரிக்கிறார்.

வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்குக் காப்பீடு, நிவாரணம் அளிப்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடுவதாக அரசு நினைக்கிறது. சொல்லப்போனால் விவசாய சங்கங்களும் அதன் தலைவர்களும்கூட இந்த விஷயத்தில் மேலோட்டமான பார்வையையே கொண்டிருக்கின்றனர். கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும். அதேசமயம், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். மீன்பிடியில்லாத நாட்களில் உதவித்தொகை வழங்கப்படுவதுபோல விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசு வழி செய்யலாம். வட்டார அளவில் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைத்து விவசாய உற்பத்தியும், வேலை உறுதியளிப்பும் செய்ய முடியும். ஆனால், மத்திய மாநில அரசுகள் இதுவரையில் விவசாயத் தொழிலாளர்கள் விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முறையாக நிறைவேற்றப்பட்டாலாவது அவர்களின் வாழ்க்கை மீண்டெழுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் உரிய காலத்தில் நிறுவப்பட்டு நதிநீரும் முறையாகப் பங்கிடப்பட்டால், டெல்டா பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் தப்பிப் பிழைப்பார்கள். சொற்பக் கூலிக்காக இடம்பெயரும் துயரிலிருந்து அவர்கள் விடுபட முடியும். காவிரி நீருக்காக விவசாயிகள் மட்டுமல்ல, விவசாயத் தொழிலாளர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

- சிவக்குமார் முத்தய்யா,

‘ஆற்றோர கிராமம்’

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: muthaiyasivakumar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x