

பாஜக முதல் முறையாக 1996 இல் மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதின்மூன்றே நாள்களில் பிரதமர் வாஜ்பாய் பதவி விலக நேர்ந்தது. அப்போது, “பாஜக மீது அரசியல் தீண்டாமை காட்டப்படுகிறது” என வருத்தப்பட்டார் வாஜ்பாய்.
ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, கலவரங்கள் எனப் பல்வேறு காரணிகளால் பாஜக மீது மாநிலக் கட்சிகள் மத்தியில் உருவாகியிருந்த மன விலகல் அதன் பின்னணியில் இருந்தது. பின்னாள்களில் அது காணாமல் போனது. 1998 மற்றும் 1999இல் வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். பின்னாள்களில் மோடி அலையில் பாஜக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தது.
இன்றைக்கு அரசியல்ரீதியாக மட்டுமல்லாமல், தார்மிகரீதியிலான சவால்களைப் பாஜக எதிர்கொண்டிருக்கும் நிலையிலும் அக்கட்சியை நோக்கி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தித் தலைவர்கள் பலர் செல்கிறார்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் வெல்ல வேறு பல வியூகங்களையும் பாஜக வகுத்திருக்கிறது. குறிப்பாக, ஆபத்துக் காலத்தில் ஆயுதங்களைப் போலவே கேடயங்களும் முக்கியம் என்பதை அக்கட்சி உணர்ந்திருக்கிறது.
சர்ச்சைகளுக்கு நடுவே சாகசம்: சமகாலத்தில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய நெருக்கடி, தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. நீதிமன்ற உத்தரவைத் தடை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் அதீஷ் அகர்வாலா கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆனால், அப்படிக் கடிதம் எழுத அவருக்கு அங்கீகாரம் இல்லை என்று பார் கவுன்சில் மறுத்திருக்கிறது. ‘மோடி பக்தர்’ எனக் காங்கிரஸால் காட்டமாக விளிக்கப்படும் அதீஷ் அகர்வாலா, ‘Narendra Modi: A Charismatic and Visionary Statesman’ என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.
காலியாக இருக்கும் இரண்டு தேர்தல் ஆணையர் பதவிகளுக்கான நபர்களைப் பரிந்துரைக்க பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் இன்று (மார்ச் 14) கூடுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதியுடன் தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டேயின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. இன்னொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துவிட்டார்.
மேற்கண்ட கூட்டம்கூட மார்ச் 15ஆம் தேதிதான் நடைபெறவிருந்தது. ஆனால், அது முன்கூட்டியே நடைபெறுகிறது. ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ஒருவருக்கு இடமளிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைச் சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது.
இதுதொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத் திருத்தத்தின்படி, பிரதமர் மோடி, மக்களவைக் காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி ஆகியோருடன் மத்திய அமைச்சர் ஒருவர் பங்கேற்கிறார்.
அதாவது, - அரசின் சார்பில் இரண்டு பேர். இந்தப் புதிய ஏற்பாடு சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்துவருகின்றன. இதற்கிடையே, இந்தக் கூட்டம் நடத்தப்படுவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச் 15இல் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்கிறது. இவ்விவகாரத்தில் திரை மறைவில் பாஜகவின் பங்கும் பேசப்படுகிறது.
அருண் கோயலுடன் சேர்த்து கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு பேர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்கவிருந்த அருண் கோயல், ஏன் பதவிக் காலம் முடிவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகினார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அருண் கோயல் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றுகூட ஊகங்கள் நிலவுகின்றன. இப்படிப் பல சர்ச்சைகள்.
திசைதிருப்பும் உத்தி: தேர்தல் பத்திரம் தொடர்பாக மார்ச் 11இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாவதாக அன்று மாலையே மத்திய அரசு அறிவித்தது, பாஜகவின் இன்னொரு தந்திரம்.
அரசியல் அரங்கில் பேசுபொருளைத் தீர்மானிப்பதில் நிபுணத்துவம் பெற்றுவிட்ட பாஜகவின் இன்னொரு அஸ்திரம் இது. எதிர்பார்த்ததுபோலவே, குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான செய்திகளே ஊடகங்களில் பிரதான இடம்பிடித்தன.
சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான பிரச்சினை அதிகம் உள்ள அசாமிலும் மேற்கு வங்கத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாஜக பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் எழும் எதிர்ப்புகளும் மத அடிப்படையில் தங்களுக்கே பலன் தரும் என்றும் பாஜக நம்புகிறது.
இவ்விஷயத்தில், தற்போது பிரதமர் மோடி நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பாஜக தொடர்பான இன்னொரு நிகழ்வும் தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. அது ஹரியாணாவில் நடந்த திடீர் ஆட்சி மாற்றம்.
முதல் நாள் பிரதமர் மோடியால் அமோகமாகப் பாராட்டப்பட்ட ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், மறுநாள் - ஜனநாயக ஜனதா கட்சியுடனான கூட்டணிக்கு விடைகொடுத்ததுடன் - முதல்வர் பதவியில் இருந்தும் விலகிவிட்டார். “இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காக” என்று அதற்குக் காரணமும் சொல்லியிருக்கிறார். ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மாற்ற பாஜக வழக்கமாகச் செய்யும் வேலை இது என்பதுதான் கவனத்துக்குரிய விஷயம்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் புதியவர்கள் முதல்வர்களாக்கப்பட்டது இதற்கு அத்தாட்சி. கூடவே, ஓபிசிபிரிவைச் சேர்ந்த நயப் சிங் சைனியை முதல்வராக்கியிருப்பதன் மூலம், மக்கள் தொகையில் 40%ஆக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளையும் ஈர்க்க பாஜக திட்டமிடுகிறது.
கூடவே, விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்களின் காரணமாக ஜாட்சமூகத்தினரிடம் இழந்திருக்கும் செல்வாக்கைச் சரிகட்ட இதை ஒரு உத்தியாக பாஜக பயன்படுத்துகிறது.
ராஜஸ்தானின் ராகுல் காஸ்வான், ஹரியாணாவின் பிரிஜேந்திர சிங் என அடுத்தடுத்து ஜாட் சமூகத் தலைவர்கள் காங்கிரஸுக்குத் தாவியது பாஜகவை அதிரச் செய்திருக்கும் நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் மொத்தம் உள்ள 10 இடங்களையும் வென்ற பாஜக இந்த முறையும் அதையே தொடர விரும்புகிறது. அதுவும் ஒரு காரணம்.
அடுத்தடுத்த வியூகங்கள்: மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டிருக்கும் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடனும், ஜன சேனா கட்சியுடனும் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக மிகக் குறைந்த இடங்களில்தான் போட்டியிடுகிறது.
அதன் நோக்கம் - கர்நாடகத்தில் செல்வாக்கை இழந்த நிலையில் - தென்னிந்தியாவில் வலிமை பெறுவதுதான். அதனால்தான், ‘நாங்கள் ஊழலுக்கு எதிரான கட்சி’ என்று சொல்லிவந்தாலும் பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி சிறை சென்றுவந்த சந்திரபாபு நாயுடுவுடன் தயக்கமின்றிக் கூட்டணி அமைக்கிறது.
பிஜு ஜனதா தளத்துடனான பேச்சுவார்த்தையும் தொடர்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால் அகாலி தளம் கட்சியும் பாஜக கூட்டணிக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இன்றைக்கு இருக்கும் குழப்பச் சூழலில், இண்டியா கூட்டணிக்கெனப் பொதுச் செயல் திட்டம் இதுவரை முன்னிறுத்தப்படவில்லை. ஆனால், பாஜக தனது பயணத்தில் தெளிவாக இருக்கிறது. இவற்றுக்கு நடுவே, மார்ச் 15 தொடங்கி மூன்று நாள்கள் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், மணிப்பூர் பிரச்சினை, ஞானவாபி மசூதி, மதுரா சாஹி ஈத்கா மசூதி பிரச்சினை, சந்தேஷ்காளி, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை குறித்துவிவாதிக்கப்படவிருக்கும் இக்கூட்டத்தில்,பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நிறுவனப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மேலும் பல வியூகங்களைப் பாஜக வகுக்கும் எனத் தெரிகிறது.
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in