

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எதிர்மறையான பல நிகழ்வுகளை எளிதில் கடந்து, எதிர்க்கட்சியினரின் விமர் சனங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியபடி முன்னேறுகிறது பாஜக. முன்பைவிட நல்ல நிலைமைக்கு நகர்ந்துவிட்டாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் தடுமாறுகிறது இண்டியா கூட்டணி.
வார்த்தை வம்பு: பாட்னாவில் நடந்த இண்டியா கூட்டணிக் கூட்டத்தில், “மோடிக்குக் குடும்பம் இல்லாததால்தான் வாரிசு அரசியல் குறித்துப் பேசுகிறார்” என்பதாக லாலு பிரசாத் யாதவ் பேசியது பாஜகவினருக்குப் புதிய ஆயுதமாகியிருக்கிறது. 2014இல் மோடியை ஒரு டீக்கடைக்காரர் என்று குறிக்கும் வகையில் காங்கிரஸின் மணிசங்கர் அய்யர் பேசியதால், ‘சாய் பே சர்ச்சா’ என்ற பெயரில் டீக்கடைகளில் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் மோடி.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை முன்வைத்து ‘செளகிதார் சோர் ஹை’ (காவல்காரர் ஒரு திருடன்) என மோடியைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி சொன்னதை வைத்து, பாஜகவினர் டிவிட்டர் கணக்குகளில் தங்கள் பெயருடன் செளகிதார் என்ற சொல்லைப் பின்னொட்டாகச் சேர்த்துக்கொண்டனர். இரண்டு முறையும் வெற்றி கிட்டியது.
இப்போது, மோடியின் குடும்பத்தினர் என்று தங்களை அழைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். “மோடியின்‘அசல் குடும்பத்தினர்’ இந்தியாவைக் கொள்ளையடிக்கிறார்கள்” என்றெல்லாம் காங்கிரஸ் பதிலடி கொடுத்தாலும் அது ஊடகங்களில் பிரதானமாக இடம்பெறுவதில்லை.
போதாக்குறைக்கு, திமுக குறித்த பிரதமரின் பேச்சுக்குப் பதிலடி என ராமர், இந்தியா குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேசியது பாஜகவுக்கு இன்னொரு ஆயுதமாகியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி நாளிதழ்களின் முகப்புப் பக்கத்தில்இது குறித்த செய்திகள் வெளியாகின்றன.
“ஆ.ராசாவின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை” என்று காங்கிரஸார் பதறத்தொடங்கியிருக்கின்றனர். “சீனாவில் இளைஞர்கள் செல்போன் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். இந்திய இளைஞர்கள் செல்போனில் ரீல்ஸ் பார்க்கிறார்கள். செல்போன் பார்த்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லி இளைஞர்கள் பசியில் சாகட்டும் என மோடி விரும்புகிறார்” என்று ராகுல் பேசியதையும் பலமாகப் பிடித்துக்கொண்டு, “காங்கிரஸ் இந்து விரோதக் கட்சி” என்று களமாடுகிறார்கள் பாஜகவினர்.
பதறாத பாஜக: தேர்தல் பத்திரம் விஷயத்தில் பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த குட்டால் நிம்மதியடைந்திருந்த எதிர்க்கட்சிகள், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை ஜூன் மாதம் (மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு) வழங்க அவகாசம் கேட்டிருக்கும் பாரத் ஸ்டேட் வங்கியால் (எஸ்பிஐ) ஏமாற்றமடைந்திருக்கின்றன.
எஸ்பிஐ, பொதுத் துறை வங்கி என்பதால் அதன் பரிவர்த்தனைகளை மத்திய அரசால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என ஏற்கெனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், “மத்திய அரசு தரும் அழுத்தத்தால்தான் எஸ்பிஐ இப்போது தயங்குகிறது” என மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். இது தார்மிக அளவில் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், அக்கட்சி வழக்கம்போல ‘தேர்தல் பணி’களில் தீவிரம் காட்டிவருகிறது.
பாஜகவுக்குத் தாவும் தலைவர்கள்: 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வாராணசியில் (தற்போது மோடியின் தொகுதி) வென்ற மூத்த தலைவர் ராஜேஷ் மிஸ்ரா, சமீபத்தில் பாஜகவில் சேர்ந்துவிட்டார்; விஷயம் அது மட்டுமல்ல. “காங்கிரஸுக்கு வாராணசியில் ஒரு வாக்குச்சாவடி முகவர்கூட இல்லாமல் செய்துவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் மிஸ்ரா.
சமாஜ்வாதியுடனான காங்கிரஸின் கூட்டணி அக்கட்சிக்கு அழிவைத் தரும் என்று சாபம் வேறு விட்டிருக்கிறார். இத்தனைக்கும், பிப்ரவரி 16இல் நீதி யாத்திரை உத்தரப் பிரதேசத்துக்குள் நுழைந்தபோது ராகுல் காந்தியுடன் அவரும் இருந்தார். மாநிலக் காங்கிரஸ் தலைவர் பதவி தரப்படாததால் அதிருப்தியில் இருந்த அவரைக் கச்சிதமாகக் காய்நகர்த்தித் தூக்கிவிட்டது பாஜக.
மத்தியப் பிரதேசத்தில், கமல் நாத்தின் கலகம் ஒருவழியாக முடித்துவைக்கப்பட்டுவிட்டாலும் காங்கிரஸுக்குக் கசப்புகள் தொடரவே செய்கின்றன. ஒரு காலத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸில் இருந்த கேபி சிங் யாதவ், பின்னர் பாஜகவில் சேர்ந்து குணா தொகுதி எம்.பி-ஆகிவிட்டார். காங்கிரஸில் இருந்தபோதே ஜோதிராதித்ய சிந்தியாவுடன் முட்டிக்கொண்ட கேபி சிங்குக்கு இந்த முறை - சிந்தியா தலையீட்டால் - சீட் கிடைக்கவில்லை.
உடனே, எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார், “காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. வாருங்கள்” என்று அழைப்பு விடுக்க, அதை கேபி சிங் உறுதியாக மறுதலித்துவிட்டார். ராகுல் காந்தி தனது நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேசத்தின் ஷஹாஜ்பூர் நகரில் பயணம் மேற்கொண்டிருந்த தருணத்திலும், மகாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வெளியில் வந்தபோதும் அவரை நோக்கி, ‘மோடி மோடி’ என்று பாஜகவினர் முழக்கமிட்டிருக்கிறார்கள்.
இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆறு பேர் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் கலகலத்துக் கிடக்கிறது. முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் ஆட்சி நீடிக்குமா என்று கேள்வி எழும் அளவுக்கு அங்கு பல்வேறு குழப்பங்கள் நிகழ்கின்றன.
பாஜகவுக்குத்தான் இங்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்கிற அளவுக்கு இமாச்சலப் பிரதேசக் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்கே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் நரன் ரத்வா ஏற்கெனவே பாஜகவில் சேர்ந்துவிட்டார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் அம்பரீஷ் தேர் ஆகியோரும் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். “ராமர் கோயிலுக்குச் செல்ல கட்சித் தலைமை அனுமதிக்கவில்லை” என்று பின்னவர்கள் இருவரும் புகார் பத்திரம் வாசித்திருக்கிறார்கள்.
பாஜகவின் திட்டங்கள்: பாஜகவின் முதலாம் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 195 பேரில், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் தலைவராக இருக்கும் பிரதமர் மோடி, வேட்பாளர் தேர்வில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேச அமைச்சரவையில் இரண்டு பாஜக எம்எல்ஏ-க்களுக்கும், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சி ஆகியவற்றிலிருந்து தலா ஒருவருக்கும் இடமளித்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். எஸ்பிஎஸ்பி கட்சிக்கு ராஜ்பர் சமூகத்தின் கணிசமான ஆதரவு உண்டு.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகம் அது. மற்ற மூவர் சார்ந்தும் அரசியல் ஆதாயங்கள் உண்டு. ஆதித்யநாத் இரண்டாவது முறை முதலமைச்சரான பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்பது இங்கு கவனத்துக்குரியது.
பழைய நண்பர்கள்: ஒரு காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், பின்னர் தனி ஆவர்த்தனம் செய்துவரும் பிஜு ஜனதா தளம் மீண்டும் பாஜகவுடன் கைகோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் அலுவலகத்தின் தலைமைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா ஒடிஷாவுக்குச் சென்றதும், நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையைப் பெற்ற வி.கே.பாண்டியன் (முன்னாள் ஐஏஎஸ்) டெல்லிக்குச் சென்றதும் கூட்டணிக்கான ஏற்பாட்டுக் காகத்தான் எனச் சொல்லப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிஷா சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படவிருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், சட்ட மன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கும் அதிக இடங் களைப் பகிர்ந்துகொள்ளலாம் எனப் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. இத்தனைக்கு இடையிலும் பிஜு ஜனதா தள எம்எல்ஏ அரவிந்த் தாலி, பாஜகவில் இணைந்திருப்பது தனிக் கதை!
எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல; நீதிபதிகள்கூட பாஜகவில் சேரும் விநோதங்கள் நிகழ்கின்றன. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜீத் கங்கோபாத்யாய, தனது பதவியை உதறிவிட்டு பாஜகவில் சேர முடிவெடுத்துவிட்டார். அநேகமாக இவருக்கு கிழக்கு மேதினிபூரில் உள்ள தாம்லுக் தொகுதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய மூத்த தலைவர் தபஸ் ராய் விரைவில் பாஜகவில் இணைவார் எனக் கூறப்படுகிறது.
ஒருபுறம் இப்படிப் பலரும் பாஜகவுக்குப் படையெடுத்துக்கொண்டிருப்பது, விமர்சன அடிப்படையில் இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு தார்மிக பலம் சேர்க்கக்கூடியதுதான். அதை முடிந்த அளவுக்குப் பயன்படுத்த எதிர்க்கட்சிகளும் முயலவே செய்கின்றன. ஆனால், கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவே விடாத பாஜகவின் பலத்தைச் சுலபமாக எடைபோடும் தலைவர்கள் சிலர் உதிர்க்கும் வார்த்தைகள், பாஜகவின் பகடைக்காய்களாக மாறுவதுதான் இன்றைய யதார்த்தம்.
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in