Published : 12 Aug 2014 09:37 AM
Last Updated : 12 Aug 2014 09:37 AM

பாதுகாப்பை அலட்சியப்படுத்தினாரா ராஜீவ்?

அரசுப் பதவிகளில் கொஞ்சம் செல்வாக்கான இடங்களில் இருந்தவர்கள் ஒரு புத்தகம் எழுதினால், அது சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

ஆர்.டி. பிரதான் எழுதியிருக்கும் ‘ராஜீவ், சோனியா வுடன் நான் இருந்த ஆண்டுகள்' புத்தகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகச் செயலராக ஒன்றரை ஆண்டுகள் பதவி வகித்தவர் பிரதான். பின்னாளில், சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் ஐந்தாண்டுகள் இருந்தவர்.

ராஜீவ், சோனியாவுடனான தன்னுடைய அனுபவங் களைப் பட்டியலிடும் பிரதான், ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு, புலிகளின் வியூகம், உளவுத் துறையின் தோல்வி என எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு விமர்சித்திருக்கிறார்.

ராஜீவுக்கு வந்த கோபம்

“தனக்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை ராஜீவ் காந்தி வெறுத்தார். 1985 ஜூன் 30-ம் தேதி விமானப் படை தலைமைத் தளபதி எல்.எம். கட்ரே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த சோனியாவுடன் ராஜீவ் சென்றார். அன்றைக்கு மழை கொட்டியது. பாதுகாப்புப் படையினர் அவரைப் பல வாகனங்களில் பின்தொடர்வது வழக்கம். இது ராஜீவுக்குப் பிடிக்காது. அன்றைக்குக் காவல் துறை அதிகாரி ஒருவரை அழைத்து, என் பின்னால் பாதுகாப்புப் படை வாகனங்கள் வரக் கூடாது என்று கட்டளையிட்டுவிட்டு காரில் ஏறி அமர்ந்தார்.

ஏராளமான வாகனங்களில் பாதுகாப்புப் படையினர் பின்னால் வருவதைக் கண்டு எரிச்சல் அடைந்தார். மழை கொட்டுவதைக்கூடப் பொருட்படுத்தாமல் காரிலிருந்து கோபமாக இறங்கினார். ஐந்து கார்களின் கதவுகளைத் திறந்து சாவிகளை வெளியே எடுத்தார். எல்லா சாவிகளையும் அருகிலிருந்த வாய்க்காலில் வீசி எறிந்துவிட்டு, தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

இன்னொரு முறை, அவருடைய தனி ஜீப்பில் காவலர்கள் யாரும் உடன் வராமலேயே வேகமாக ஓட்டிக்கொண்டு விஜய் சதுக்கம் வரை சென்றார். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த பக்கவாட்டுத் தெரு வழியாக வீட்டுக்கே வந்துவிட்டார்” என்று குறிப்பிடுகிறார் பிரதான்.

புலிகளின் ஆள்

ராஜீவ் காந்தியின் வீட்டிலேயே விடுதலைப் புலிகளுக்கு உளவுசொல்ல ஒருவர் இருந்தார் என்றும், ராஜீவின் நடமாட்டத்தையும் வெளியூர் பயணங்களையும் அவர்தான் கண்காணித்து விடுதலைப் புலிகளுக்குத் தகவல் தந்தார் என்றும் ஒரு சந்தேகம் நிலவியதாகச் சொல்கிறார் பிரதான்.

“விடுதலைப் புலிகளுக்காகத் தகவல் திரட்டிய ஒருவருக்கு எண்: 10, ஜன்பத் வீட்டிலிருந்தே யாரோ ஒருவர்தான் ராஜீவின் சுற்றுலாப் பயண விவரங்களைத் தந்திருக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தச் சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. அப்படிச் சந்தேகப்பட்டவர் களில் சோனியாவும் ஒருவர். ராஜீவ் காந்தி படுகொலையின்போது முக்கியப் பிரமுகர்கள் யாரும் அவர் அருகில் இல்லை. அத்துடன் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் அதற்கும் முன்னதாகவே அவர் கலந்துகொண்ட கூட்டங்களுக்குச் சென்று, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஒத்திகை பார்த்திருப்பது பின்னர் தெரியவந்தது.

ராஜீவ் காந்தியின் வீட்டிலேயே இருந்த யாரோ, சதிகாரர்களுக்கு அவ்வப்போது தகவல் தந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் விசாரணைகள் வேகம் பெற்றபோதுதான் பலருக்கும் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு, செல் வாக்கு மிக்க பலர், தொலைவிடங்களில் இருந்தே சதித் திட்டம் தீட்டியுள்ளனர்” என்று சொல்கிறார் பிரதான்.

ராஜீவைக் காப்பாற்றியிருக்க முடியுமா?

இந்தப் புத்தகத்தில், ராஜீவ் காந்தியைக் காப்பாற்றியிருக்க முடியுமா என்று கேள்விகேட்டு ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் பிரதான். அதில், “விடுதலைப் புலிகளின் நோக்கம்குறித்து தமிழ்நாடு அரசுக்குத்தான் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்தது; யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் வராதபடிக்கு, அனைவரும் கவனக்குறைவாக இருக்கும் வகையில் விடுதலைப் புலிகள் நடந்துகொண்டனர். மத்திய அரசின் உளவுப்பிரிவும் (ஐ.பி.), தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கும் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டனர் என்பதே என் கருத்து” என்கிறார் பிரதான்.

மத்திய அரசின் உளவுப்பிரிவும் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கும் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x