அஞ்சலி: பங்கஜ் உதாஸ் | தாயின் கண்ணீரில் நனைந்த கடிதம்

அஞ்சலி: பங்கஜ் உதாஸ் | தாயின் கண்ணீரில் நனைந்த கடிதம்

Published on

தொண்ணூறுகளில் இசைத் தொலைக்காட்சி சேனல்களில் இந்தித் தனிப்பாடல் தொகுப்புகள் இசை ரசிகர்களை வசீகரித்துக்கொண்டிருந்த தருணத்தில், ‘அவுர் ஆஹிஸ்தா’ என்னும் பாடல் தனித்த கவனம் பெற்றது. நடிகை சமீரா ரெட்டியும், ஒரு வெள்ளையின இளைஞரும் நடித்திருந்த அந்த மென்மையான காதல் பாடல், இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் பிரபலம். அந்தப் பாடலைப் பாடிய கஸல் பாடகர் பங்கஜ் உதாஸ், பிப்ரவரி 26இல் மும்பையில் காலமானார்.

‘ஆஹிஸ்தா’ பாடலுக்கு முன்பே பங்கஜ் உதாஸின் இன்னொரு பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. அது மகேஷ் பட் இயக்கிய ‘நாம்’ (1986) திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘சிட்டி ஆயீ ஹை’ எனத் தொடங்கும் பாடல். ‘கடிதம் வந்திருக்கிறது’ என்பது இதன் பொருள். லக்‌ஷ்மிகாந்த் - பியாரேலால் இசையமைப்பில் உருவான அந்தப் பாடல், பங்கஜ் உதாஸுக்கு அமரத்துவத்தைப் பெற்றுத்தந்தது. பிரிவின் துயரையும், உறவுகளின் மேன்மையையும் உயிரோட்டத்துடன் பதிவுசெய்த அந்தப் பாடல் வட இந்தியக் குடும்பங்களில் ஓர் அங்கமாகவே மாறியது. இந்தப் பாடலின் காட்சி வடிவத்தில் பங்கஜ் நடித்திருந்தார்.

ஒலிப்பதிவின்போது இசையமைப்பாளர் லக்‌ஷ்மிகாந்த், பங்கஜிடம் சொன்ன ஒரு யோசனை அந்தப் பாடலை உயிர்ப்புடன் உருவாக்க வழிவகுத்தது. “கஸல் கச்சேரிகளில் எப்படிப் பாடுவீர்களோ, அப்படியே இங்கும் பாடுங்கள்” என்று சொல்லியிருந்தார் லக்‌ஷ்மிகாந்த். விசாலமான அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில், கஸல் இசைக் கச்சேரிக்கான பிரத்யேகஏற்பாடுகள் செய்யப்பட்டன. மூன்று சரணங்கள் கொண்ட அந்தப் பாடலை ஒரே மூச்சில் பாடி முடித்தார் பங்கஜ். லக்‌ஷ்மிகாந்த்அவரைக் கட்டியணைத்துப் பாராட்டி, பாடலை ஒலிக்கவிட்டார். லக்‌ஷ்மிகாந்தின் மனைவியும் அங்கு இருந்தார். கண்ணில் பெருகிய நீரைக் கையால் அந்தப் பெண் துடைத்துக்கொண்டதைப் பார்த்ததும் பங்கஜ் உதாஸின் மனம் நிறைந்தது.

1972இல் உஷா கன்னாவின் இசையில் ‘காம்னா’ என்னும் திரைப்படத்தில் முதல் பாடலைப் பாடியிருந்த பங்கஜ் உதாஸுக்கு, அப்படியான உன்னதத் தருணம் வாய்க்க 14 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் திரை வாய்ப்புகள் அதிகம் வரவில்லையே தவிர ‘ஆஹட்’ (1980), ‘முகர்ரார்’ (1981), ‘பைமானா’ (1983), ‘மெஹ்ஃபில்’ (1983) உள்ளிட்ட கஸல் இசைத் தொகுப்புகள் பங்கஜுக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்திருந்தன. பின்னாள்களில் ‘தயாவான்’, ‘சாஜன்’, ‘மோஹ்ரா’ உள்ளிட்ட பல இந்திப் படங்களில் கஸல் தனிப் பாடல்களையும், டூயட் பாடல்களையும் பாடி மேலும் புகழ்பெற்றார். சிறுவனாக இருந்தபோது, லதா மங்கேஷ்கரின், ‘யே மேரே வதன் கே லோகோன்’ எனும் தேசபக்திப் பாடலை ஒரு நிகழ்ச்சியில் பாடிப் பரிசும் பெற்றிருக்கிறார் பங்கஜ். பின்னாள்களில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து, ‘மாஹியா தேரி கஸம்’ (‘காயல்’ - 1990) உள்ளிட்ட பாடல்களைப் பாடும் அளவுக்கு உயர்ந்தார்.

குஜராத்தின் ஜேத்பூரில் ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர் பங்கஜ். அவரது தந்தை கேஷுபாய்க்கு தில்ரூபா இசைக் கருவி வாசிப்பதில் நாட்டம். அவரது சகோதரர்களும் இசைத் துறையைச் சேர்ந்தவர்கள்தாம். எனவே, இசை ஆர்வம் பங்கஜுக்கு இயல்பாகவே இருந்தது. குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்த பின்னர் நவ்ரங் நாக்பூர்கர் உள்ளிட்ட மேதைகளிடம் இசையைக் கற்றுக்கொண்டு பெரும் கலைஞராக பங்கஜ் உயர்ந்தார்.

பங்கஜின் அடையாளமாகிப்போன ‘சிட்டி ஆயீ ஹை’ பாடலைக் கேட்கும் ராணுவ வீரர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர்கள் தங்களது சொந்த ஊர், பெற்றோர் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கரைந்துவிடுவார்கள். தாய்ப் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தப் பாடலின் சூழலுக்கும் பங்கஜுக்கும் இறுக்கமான இன்னொரு பிணைப்பும் உண்டு. அவரது இளமைக் காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை, இரவெல்லாம் வாயிற்கதவு அருகே அவரது தாய் ஜீத்துபென் காத்துக்கொண்டிருப்பாராம். பல வருடங்களுக்குப் பின்னர், ஜீத்துபென் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, பங்கஜ் கொல்கத்தாவில் இருந்தார். தகவல் அறிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு மும்பை வந்து சேர்ந்தார். மருத்துவமனைப் படுக்கையில் இருந்தவாறு மகனின் வருகையை அறிந்த அந்தத் தாயின் உயிர் அந்தக் கணமே பிரிந்தது. “நான் தந்தைதான். சமாளித்துக்கொள்வேன். உன் தாயின் நிலைதான் மோசமாக இருக்கிறது” என்பது ‘சிட்டி ஆயீ ஹை’ பாடலின் ஒரு வரி!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in