அஞ்சலி: குமார் சாஹனி | சமரசமில்லா சினிமாக்காரர்
இந்தி இயக்குநர் குமார் சாஹனி கடந்த வாரம் காலமாகிவிட்டார். எழுபதுகளில் இந்தியாவில் மலர்ந்த மாற்று சினிமா முயற்சிகளின் ஒரு கண்ணி அவர். இந்திய மாற்று சினிமா முன்னோடிகளில் ஒருவரான ரித்விக் கட்டாக்கின் மாணவர். வர்த்தகம் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பாலிவுட் சினிமா தீவிரம் கொண்டிருந்த காலக்கட்டத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தனது இரண்டாவது பட வாய்ப்புக்காகப் பன்னிரெண்டு வருடங்கள் காத்திருந்தார் குமார்.
குமார் சாஹனியின் முதல் படமான ‘மாயா தர்பன்’, இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியச் சமூகத்தின் நிலையைச் சொல்லும் படம். குமார் சாஹனியின் சினிமாத் திறனுக்கும் இந்தப் படம் ஒரு பதம். ராஜஸ்தானில் ஒரு ஜமீன் வீடு. அங்கு வாழும் ஒரு ஜமீன்; அந்த வீட்டில் கணவனை இழந்த ஜமீனின் தங்கையும், திருமணமாகாத அவரது மகளும் இருக்கிறார்கள். பெரிய தூண்களும் உத்திரங்களும் தடித்த சுவர்கொண்ட அறைகளும் கொண்ட பெரிய வீடு அது. சுதந்திரம் அடைந்த பிறகு அது அரண்மனை என்கிற தன்மையை இழந்து நிற்கிறது. அந்த வீடு தரும் சோர்வை, பெருமைச் சுமையை குமார் சாஹனி காட்சிகள் வழியாகவே திருத்தமாக உருவாக்கியிருப்பார். அதன் தொடக்கக் காட்சியில் அவள் அந்த வீட்டிலிருந்து மேல் மாடத்துக்கு வரும் காட்சியும் தன் அப்பாவுக்காகப் புகைக்கும் கருவியைக் கொண்டு செல்லும் காட்சியும் பல கட்களாகக் கோக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்களுக்குச் சோர்வு தரும் விதத்தில் அவள் அந்த வீட்டில் அடுக்களையிலிருந்து அந்த உபகரணத்தை மிகக் கவனத்துடன், லாவகத்துடன் தூக்கிச் செல்வாள். அது தூண்களைக் கடந்து, அறைகளைக் கடந்து செல்கிறது. உண்மையில் குமார் கடந்த விரும்புவதும் அந்தச் சோர்வைத்தான். நிலப்பிரத்துவ வாழ்க்கை முறையில் பெண் என்னவாக இருக்கிறாள் என்பதையும் படம் பேசுகிறது. தந்தை, மகளை ஒரு வேலைக்காரியைப் போல் நடத்துகிறார். அதே சமயம் அவள் மீது கற்பித ஒழுக்கங்களும் கவிழ்த்தப்பட்டுள்ளன. அவளது அண்ணன், அஸ்ஸாமில் இருக்கிறான். அவனது கடிதங்களை அவள் வாசித்துப் பார்க்கிறாள். அவன் இதிலிருந்து விடுபட்டுவிட்டான். இந்தப் படத்தில் நாயகியான அந்த மகளின் மனம், கவித்துவமான வாய்ஸ் ஓவரில் விவரிக்கப்பட்டுள்ளது. பாலை வெளியில் அவள் நடந்து செல்லும் காட்சியில் அது பார்வையாளர்களிடம் கடத்தப்படுகிறது.
இந்த ஜமீன் வீட்டுக்கு வெளியே தொழிலாளார் போராட்டம் நடக்கிறது. அங்கு ஒரு ரயில்வே பொறியாளர் இதை முன்னெடுக்கிறார். புதிய அரசியல் தெளிவு ஒன்று மக்களிடம் ஏற்பட்டுவருகிறது. இந்தப் போராட்டத்தை அவள் வேடிக்கை பார்க்கிறாள். இந்தப் போராட்டம் யாருக்கும் யாருக்கும் இடையில், எதற்காக என அவள் வேள்விகளும் கேட்கிறாள். அவளது பாலியல் போராட்டமும் இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராமின் குரலில் பாஸ்கர் சந்தவர்கர் இசையில் ஒரு பாடல் இந்தப் படத்தில் வந்து செல்கிறது. ‘ஆஜாரே நின்டியா...’ என்கிற அந்தத் தாலாட்டுப்பாட்டு படமாக்கப்பட்ட விதமும் சிறந்த சினிமா அனுபவமாக வெளிப்பட்டுள்ளது. பாட்டில் அந்தக் காரை பெயர்ந்த உத்திரம் பேன் ஷாட்டாக நீண்டுகொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் மரக்கடையில் அடித்த உத்திரம் அந்த சினிமா கேமிராவின் வழி பல பொருள்களைச் சொல்கிறது. வெளியில் காயும் சீலைகளுக்கு நீளும் அந்தபேன் ஷாட், தூண்கள், தரை வழி அவள்தூங்கும் அந்த அறையில் முடியும். வெளியே தொழில் வளர்ச்சி, தொழிலாளர் எழுச்சி, வர்க்க பேதம் முரண், உள்ளே குடும்பக் கற்பித உடைப்பு, பெண்ணின் பாலியல் சுந்தந்திரம் எனப்பல அம்சங்களை இந்தப் படம் பேசுகிறது.
குமாரின் அடுத்த படம் ‘தரங்’கிலும் வர்க்கப் பிரச்சினையை ஒரு குடும்பத்தை உதாரணமாகக் கொண்டு பேசியிருப்பார். அறுபது ஆண்டுக் காலப் பயணத்தில் மிகக் குறைவான முழுநீளப் படங்களைத்தான் குமார் இயக்கியிருக்கிறார். ஆனால், அவை ஒவ்வொன்றும் இந்திய சினிமா வரலாற்றில் புதிய முயற்சிகளுக்கான முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
