மகபூப் பாட்சா: ஒடுக்கப்பட்டோரின் மீட்பர்

மகபூப் பாட்சா: ஒடுக்கப்பட்டோரின் மீட்பர்
Updated on
2 min read

மனித - ஜனநாயக உரிமைகளைப் பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் தன் வாழ்நாள் முழுதும் செயல்பட்ட மகபூப் பாட்சா (64), பிப்ரவரி 14 அன்று சென்னையில் காலமானார். மதுரை சோக்கோ அறக்கட்டளையின் நிர்வாக மேலாளரான அவர், நீதிமன்றத்தில் தனது இருத்தலை நிறுவாத ஒரு வழக்கறிஞராக வாழ்ந்தார்; கனிந்த மனிதநேயர். அவரது வாழ்க்கை, மனித உரிமையில் அக்கறை கொண்ட அனைவருக்கும் வழிகாட்டக்கூடியது.

மனித உரிமைக் குரல்: மதுரையில் 1980களில் சைக்கிள் ரிக் ஷா வண்டிகள் நகர் முழுதும் இருந்தன. அந்நாள்களில் சாலை விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அவர்களிடம் காவல் துறையினர் சிலர் ஐந்து ரூபாய் பணம் கேட்பதும், அவர்கள் தர முடியாதபோது ரிக் ஷா இருக்கையைக் கழற்றி எடுத்துச் செல்வதும் நடைமுறையாக இருந்துள்ளது.

ரிக் ஷா ஓட்டுநர்களுடன் வேலைசெய்த இளைஞர்கள் அவர்களை ஒன்றுதிரட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஊர்வலமாகச் செல்லும் போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்தை நடத்தியதாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மகபூப் பாட்சா.

அந்தக் காலகட்டத்தில் சாஸ்திரி–சிறிமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து, தாயகம் திரும்பியோர் கொடைக்கானல் பகுதியில் மூங்கில் வெட்டும் பணிக்கு ஒப்பந்ததாரர்களால் அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால், ஒப்பந்ததாரர்களோ முன்பணம் கொடுத்து, அதன் மூலம் குறைந்த கூலிக்கு அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவந்தனர்.

மகபூப் பாட்சாவும் அவரது நண்பர்களும் அந்தத் துயரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் நீதிமன்ற ஆணையராக மகபூப் பாட்சாவை நியமித்தது. இதன் தொடர்ச்சியாக 118 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் கொத்தடிமைப் பிடியிலிருந்து விடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பில் கொத்தடிமைகளாக இருந்த பளியர் பழங்குடிக் குடும்பங்களை மகபூப் பாட்சா மீட்டார். திருச்சி அருகே வல்லம் கிராமத்தில் முந்திரிக் குத்தகையை வனத் துறை, அந்தக் கிராம மக்களுக்கு வழங்கும். ஆனால், திடீரென அந்தக் குத்தகை வெளிநபர்களுக்கு வழங்கப்பட்டது. அது தொடர்பாக எழுந்த கிராம மக்களின் எதிர்ப்பைக் காவல் துறை ஒடுக்கப் பார்த்தது.

இது தொடர்பாக, வடமாநிலப் பத்திரிகையாளரான கன்ஷியாம் பர்தேசி தாக்கல் செய்த வழக்கில், அன்றைய தலைமைக் குற்றவியல் நடுவர் சுப்ரமணியன், மகபூப் பாட்சா இருவரும் நீதிமன்ற ஆணையராக நியமிக்கப்பட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்தனர். மகபூப் பாட்சாவின் பரிந்துரையில் மீண்டும் முந்திரிக் குத்தகையை கிராம மக்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்பெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்வோரில் சிலர், முன்பணம் கொடுத்து அவர்களைத் தங்களுடன் அழைத்துச் சென்று, கொத்தடிமைகளாக நடத்துவது வாடிக்கை. மிட்டாய், முறுக்கு வியாபாரம் போன்றவற்றில் கொத்தடிமைகளாகச் சித்ரவதைக்கு உள்ளான பல குழந்தைகளை மகபூப் பாட்சா சட்டப் போராட்டத்தின் வழி மீட்டு, மறுவாழ்வுக்கு வழிசெய்தார்.

சோக்கோ அறக்கட்டளை வழியாகத் தொடர்ந்து மனித உரிமை சார்ந்த கல்வி-நீதியை அடித்தட்டு மக்களுக்கு வெளிச்சமாகத் தருவது என சமூகத்துக்குத் தொடர் பங்களிப்பு செய்துவந்தார்.

முக்கிய வழக்குகள்: வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையால் பழங்குடி- மலையோரக் கிராம மக்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாயினர். அந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த சிலரில் மகபூப் பாட்சாவும் ஒருவர். இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, தேசிய மனித உரிமை ஆணையத்துக்குக் கூட்டு அழுத்தம் கொடுத்து, நீதிபதி சதாசிவா ஆணையம் உருவாகப் பங்களிப்பு செலுத்தியவர் மகபூப் பாட்சா. அந்த ஆணையத்தின் முன்னிலையில் பாதிக்கப்பட்டோரின் சார்பிலும் அவரின் பங்களிப்பு முக்கியமானது.

மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டார் மகபூப் பாட்சா. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதிபதி பி.என்.பகவதி உள்ளிட்ட - மனித உரிமைகளைப் பேசிய நீதிமான்களின் மாணவரான அவர், தமிழ்நாட்டில் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாகப் பல தொடர் இயக்கங்களையும், கருத்துருவாக்கத்தையும் முன்னெடுத்தார்.

பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை நீக்கக் கோரி, நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆட்சியாளர்களிடம் வைத்த எல்லா வேண்டுகோளிலும் மகபூப் பாட்சாவின் பங்கிருந்தது. நீதிபதி பி.என்.பகவதி ‘My Tryst with Justice’ என்கிற தன்வரலாற்று நூலில் மகபூப் பாட்சாவின் சமூகப் பங்களிப்பு குறித்துப் பதிவுசெய்துள்ளார்.

மகபூப் பாட்சா மனித உரிமை சார்ந்து பல பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2006இல் மதுரை மத்திய சிறையில் கைதிகள் மீது சிறை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம், சிறைக்குச் சென்று மாவட்ட நீதிபதி ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

குற்றம்சாட்டப்பட்ட சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது. பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு இழப்பீடு வழங்கியது. மேலும், மாவட்ட நீதிபதிகள் முன்னறிவிப்பின்றி சிறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னை முன்னிலைப்படுத்தாமல் உழைத்த மகபூப் பாட்சா போன்ற சமூகப் போராளிகளைப் பொதுச் சமூகம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!

- தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in