சிற்றூராட்சி நிர்வாகத்தில் தொடர மக்களுக்கு உரிமை இல்லையா?

சிற்றூராட்சி நிர்வாகத்தில் தொடர மக்களுக்கு உரிமை இல்லையா?
Updated on
1 min read

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகளை அருகில் இருக்கும் மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சிகளோடு இணைப்பது அல்லது பெரிய ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக வகை மாற்றம் செய்வதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதுஅதிகாரப்பரவல் குறித்த தமிழக அரசின் அக்கறையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 35 கிராம ஊராட்சிகளை நகரங்களாக மாற்றுவதற்கு அரசு முயற்சி எடுத்துவருகிறது. இவற்றில் 10 ஊராட்சிகளை நேரடியாகப் பேரூராட்சிகளாக மாற்றவும், பிற 25 கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்கவும் பணிகள் நடந்துவருவதாகத் தெரிகிறது.

இதன் விளைவாக, ஏழை மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், 100 நாள் வேலைத் திட்டம் முற்றிலுமாக முடங்கிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஊராட்சிகள் நகரங்களாகும்போது சாதாரண மக்களின் வீட்டு வரியும், குடிநீர்க் கட்டணமும் பல மடங்கு உயரும் என்றும், விவசாயத்துக்கான விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.

கிராமசபை மூலமாகவும், கிராம ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாகவும்தான் இயற்கை வளங்களைத் தக்கவைக்க, பாதுகாக்க முடியும். கிராமங்களை நகர நிர்வாகமாக மாற்றி, வெறும் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கும் நிலைக்கு மக்களை மாற்றுவது, எந்தச் சூழ்நிலையிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாகமாக இருக்கவே முடியாது.

இதுநாள் வரை இதுபோன்று கிராம ஊராட்சிகள் நகரங்களோடு இணைக்கப்படும்என்கிற ஓர் அதிகாரபூர்வ செய்திகூட சம்பந்தப்பட்ட மக்களுக்கோ, கிராம சபைக்கோ,ஊராட்சி மன்றத்துக்கோ, ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கோ முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறை’ என்பது அதிகாரப் பரவல் என்கிற கருத்தியலுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது; அதே அதிகாரப்பரவல் கருத்தியல் இதற்குப் பொருந்தாதா?

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல திருச்சி, ஈரோடு எனத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் இதுபோன்று கிராம ஊராட்சிகளை வலுக்கட்டாயமாக நகரங்களாக மாற்றும் முயற்சி நடந்துவருகிறது. கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துகொண்டே போகிறது.

இது வெறும் எண்ணிக்கை வீழ்ச்சி கிடையாது. மனிதவள மேம்பாடு, ஜனநாயகத்தன்மை, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் வீழ்ச்சி. இது மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான இடைவெளியை அதிகரித்து, அதிகாரக்குவியலுக்கு வழிவகுக்கும் முயற்சி. வலுக்கட்டாயமாக நகரங்களை அதிகரிப்பதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறோம்?

- தொடர்புக்கு: nanda.mse@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in