Last Updated : 22 Feb, 2024 06:21 AM

 

Published : 22 Feb 2024 06:21 AM
Last Updated : 22 Feb 2024 06:21 AM

வேளாண் நிதிநிலை அறிக்கை: செய்ய வேண்டுவது யாது?

தமிழ்நாடு அரசு 4ஆவது வேளாண் நிதி நிலை அறிக்கையைத் தந்திருக்கிறது. வேளாண்மைத் துறைக்கு உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றி நான்கு நிதிநிலை அறிக்கைகளை வழங்கியது மெச்சத்தக்கது. மண்ணுயிர் காப்போம் என்று பயணிக்கும் இந்த அறிக்கை, ‘காஞ்சும் பேஞ்சும் கெடுக்குது மழை’ என்ற உழவர்களின் அங்கலாய்ப்பை உணர்ந்துள்ளது. அதனால்தான் காலநிலை மாற்றம் அடுத்த 20 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் எனக் கணித்துச் சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கத் திட்டமிடுகிறது. இருந்தபோதும், டெல்லியில் உழவர்கள் எழுப்பும் அதே குரல் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் என்பதை இந்த அறிக்கை உணரவில்லை.

கொள்முதல் விலை: 2021 தேர்தலில் திமுக பல வாக்குறுதிகளை வழங்கியது. அவற்றுள் ஒன்று, உணவு தானியங்களின் கொள்முதல் விலை குறித்தது. 2006இல் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு உற்பத்திச் செலவுகளுடன் சேர்த்து உழவர்களுக்கு 50% ஆதாயம் கிடைக்கும் அளவுக்குக் குறைந்தபட்சக் கொள்முதல் விலையைப் பரிந்துரைத்தது. 2021இல் இருந்த உற்பத்திச் செலவுகளைக் கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000 என ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குவதாக திமுக கூறியது. 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த விலை குறித்து தமிழ்நாடு அரசு இந்த முறை மூச்சுவிடவில்லை.

வாழ்வாதாரம் குறித்த வாக்குறுதியில் தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியம் ஆபத்தானதாகும். ஏனெனில் அப்போது அறிவிக்கப்பட்ட அந்த விலைகள் இப்போது போதவே போதாது. நாட்டியம் ஆட அறிவிப்புச் சலங்கைகள் மட்டும் போதாது. கட்டப்பட்டிருக்கும் பாதங்கள் அவிழ்க்கப்பட வேண்டும்.

குறுவைக்கான பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டில் தமிழ்நாடு அரசின் நிலையும் கவலைதருகிறது. வெள்ளம், வறட்சி என இயற்கைப் பேரிடர்களின் முற்றுகையில் உழவுத்தொழில் சிக்குண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறுவை சாகுபடிக்குப் பயிர் காப்பீடு இல்லை. காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம் வஞ்சிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் பாராமுகம் உழவர்களைக் கலவரப்படுத்துகிறது. விளைபொருள் விலைநிர்ணயம், இயற்கைப் பேரிடர்களில் நசுங்குபவர்கள் மத்திய மாநில அரசுகளின் மோதலில் நிவாரணம் கிடைக்காமல் திண்டாடுவது உழவர்கள் மத்தியில் அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது.

புழங்குமொழியில் பெயர்கள்: உழவர்கள் தரப்பில் எழுப்பப்படும் ஒரு கோரிக்கை காரிப், ராபி பருவங்களின் பெயர் மாற்றமாகும். சம்பா, குறுவை, தாளடி உள்ளிட்டு உழவர்கள் மத்தியில் பல புழங்கு பெயர்கள் உண்டு. வேளாண் உதவிகள் கோரி அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்கும் போகும் பட்டிக்காட்டு உழவர்கள் காரிப், ராபி பெயர்களால் குழப்பமடைகின்றனர்.

‘தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தால் நீங்கள் அடையப்போவது என்ன?’ என்ற கேள்வி அண்ணாவிடம் முன்வைக்கப்பட்டது. ‘பார்லிமென்ட் என்பதை லோக்சபா என மாற்றியதால் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என மாற்றியதால் நீங்கள் எதை அடைந்தீர்கள்? நான் உங்களைத் திருப்பிக் கேட்கிறேன். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?’ என அண்ணா கேட்டார். எனவேதான் புழங்கும் மொழியில் புரியும் வகையில் பருவப் பெயர் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

கருத்துக்கேட்பின் அவசியம்: வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை, வேப்பிலை, நொச்சி இலை, ஆடாதோடை ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வரவேற்புக்குரியது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உற்பத்தியைப் பெருக்க களத்தில் முன்வரிசை வீரர்களாக உழவர்கள் நின்றனர். அவர்களின் ஆயுதம் இயற்கைத் தாவர உயிரிகள்தான்.

முக்கனிகளையும் நிதிநிலை அறிக்கை சிறப்பிக்கிறது. அதேவேளை வேளாண் துறையில் எண்ணெய் வித்துப் பயிராகவும் தோட்டக்கலைத் துறையில் தோட்டப் பயிராகவும் பயிரிடப்படும் தென்னை சாகுபடி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். வேளாண்மைத் துறையில் இருந்த தென்னை இப்போது தோட்டக்கலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 2017இல் ஏற்பட்ட கஜா புயல் சுமார் 27 லட்சம் தென்னை மரங்களை வேரோடு பெயர்த்தது. தென்னை விவசாயிகள் போராடி மீண்டுள்ளனர். அவர்களின் கருத்துக்கேட்பு ஏதுமின்றி மாற்றம் நடந்துள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்நுட்பத்தால் தென்னை விவசாயம் பலன் பெற முடியும். இதேபோல் கரும்புச் சாகுபடியில் கிடைக்கும் எத்தனாலை எரிபொருளாக வாகனங்களில் பயன்படுத்தி புதுச் சந்தையை உருவாக்கலாம்.

உணவுச் சந்தைகளில் ஆந்திரம், கர்நாடகப் பொன்னி அரிசிக்கே கிராக்கி உள்ளது. தமிழ்நாட்டு அரிசியின் தரத்தை உயர்த்த ஆய்வு நோக்கில் வேளாண் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் மேம்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நடமாடும் நெல் உலர்களங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைப்போல நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். அரிசி விலை உயர்கிறது. தனியார் அரிசி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. ஊழலைக் களையெடுக்கவும் கொள் முதலை அதிகரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகள் காலத்தின் தேவையாகும்.

கொள்முதலில் 20% நிரந்தர ஈரத் தளர்வுக்கான அதிகாரத்துக்கு மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும். சிறுதானிய உற்பத்தி, பாரம்பரிய மாற்றுப்பயிர்கள் ஆகியவற்றுக்கான கொள்முதல், கிடங்கு, சந்தைப்படுத்தும் வசதிகளைத் தமிழ்நாடு அரசு நேரடியாகச் செய்துதர வேண்டும்.

வேளாண் சுற்றுலாவும் பிறவும்: வருமானத்தை அதிகரிக்கும் வழிகளையும் கருத்துக்கேட்புக் கூட்டங்களில் உழவர்கள் முன்வைத்துள்ளனர். இத்தாலியில் புகழ்பெற்று இந்தியாவின் மகாராஷ்டிரத்திலும் வெற்றிபெற்றது வேளாண் சுற்றுலா திட்டம். மீன் பிடித்தல், மாட்டுவண்டிச் சவாரி, காய்கறி அறுவடை உள்ளிட்டவற்றில் இந்தத் துறை அங்கு வருவாயைப் பெருக்குகிறது.

உழவர்களைத் தவிக்க வைக்கும் மற்றொரு நிகழ்வு நடவு-அறுவடை காலங்களில் சந்திக்கும் இடர்களாகும். பர்மா செட்டுகள், ஸ்பிரேயர்கள் போன்றவற்றை அரசு வாடகைக்கு விட்டது முன்பிருந்தநடைமுறைதான். இந்த இயந்திரத் தொழிற்சாலைகளைத் தொடங்கி வாடகை மூலமாக வருவாயைப் பெருக்கலாம்.

வெள்ளை அறிக்கை: உழவர்களின் மற்றொரு கோரிக்கை வேளாண் நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறை குறித்த தகவல்களாகும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் வேளாண் தொழிற்பேட்டைகளை உருவாக்குதல், திருச்சி - நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடத்தை உருவாக்குதல் போன்ற வாசகங்கள் சென்ற அறிக்கைகளிலேயே காணப்பட்டன. இப்போதும் உள்ளன. செயற்கை உரக் கலப்படங்களை அறிய ஆய்வகங்கள், அனைத்து மாணவியர் விடுதியிலும் காய்கறி, பழம், மூலிகைச்செடித் தோட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல் குறித்தும் விளக்கம் தேவை. தூர்வாரும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயத்துக்குப் புது மின் இணைப்புகள், சாகுபடிக் கடன் விவரங்கள், 2023இன் தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை, மாடித் தோட்டங்கள், நாட்டு விதைகளுக்கான வங்கிகள் ஆகிய அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தேவை.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகம், மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றக் கையாளும் வழிகள் தமிழ்நாட்டின் முன்னெடுப்பு குறித்து உழவர்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உருவாக்கியுள்ளன. வேளாண் நிதிநிலை அறிக்கையின் பயணத்தில் ஒரு திருப்பம் தேவை.

ஜேம்ஸ் நூர்பரி என்கிற எழுத்தாளர் ஒரு நூலில் இப்படிக் கேட்பார்: “ஒரு பயணத்தில் எது முக்கியம். பயணமா? புறப்படும் இடமா? சேரும் இடமா?” அதற்குப் பயணி இவ்வாறு பதில் கூறுவார்: “நாம் சேர்ந்து பயணிக்கிறோமே, அதுதான் முக்கியம்.”

வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து வழங்கும் தமிழ்நாடு அரசு, தனது பயணத்தில் உழவர்களை நம்பிக்கையைப் பெற்று இணைத்துச்செல்ல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x