இந்தியா முழுமைக்கும் சுயமரியாதை இயக்கம் தேவை!

இந்தியா முழுமைக்கும் சுயமரியாதை இயக்கம் தேவை!
Updated on
3 min read

‘திராவிடக் கணினி’ எனப் பாராட்டப்படும் மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, திராவிட இயக்கத்தின் வரலாற்றை 12 பகுதிகளாக எழுதிவருகிறார். நீதிக்கட்சி வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு, திராவிடர் கழக வரலாறு, திமுக வரலாறு என விரியும் அந்த வரிசையின் சமீபத்திய வரவாக, ‘சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1’ வெளிவந்திருக்கிறது.

உடல் உபாதைகள், வாடகை வீட்டின் நெருக்கடிகள் என அன்றாடத்தின் பல்வேறு இடர்ப்பாடுகளைத் தாண்டி, திராவிட இயக்க ஆய்வுக்குத் தன்னை முழுமையாக அவர் ஒப்புக்கொடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அண்ணன்’ என அழைக்கும் திருநாவுக்கரசுவை ஒரு மாலை வேளையில் சந்தித்தேன்...

தந்தை பெரியாருடனான உங்கள் முதல் சந்திப்பு குறித்த நினைவுகளிலிருந்து தொடங்குவோம்... அப்போது நான் கூட்டுறவுச் சங்கம் ஒன்றில் எழுத்தராகத் திருவல்லிக்கேணியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘உண்மை’ இதழ் தொடங்கப்பட்டிருந்த நேரம். இதழுக்கான சந்தாவை நேரில் கொடுக்க விரும்பி, பெரியாரைச் சந்திக்கச்சென்றேன். ‘அய்யா என்ன பண்றீங்க?’ என்று கேட்டார்.

சொன்னேன். ‘அப்படியா... விளங்குற மாதிரி சொல்லுங்களேன்’ என்றார். நான் பணிபுரியும் நிறுவனத்தின் (டியூசிஎஸ் பெயரைச் சொன்னேன். ‘ஓ... அந்த மளிகைக் கடையா?’ என்றார். பிறகு ஒருமுறை, ‘விடுதலை’ அச்சகத்துக்கு ‘விக்டோரியா 12’ என்னும் ஜெர்மானிய அச்சு இயந்திரத்தை நிர்மாணிக்கும் பணியை அய்யா பார்வையிட்டபோது, அங்கு இருந்தேன். இப்படியாக அய்யாவுடன் இருந்த பொழுதுகள் இப்போது நினைவுக்கு வருகின்றன.

சுயமரியாதை இயக்க வரலாற்றை எழுதுவதற்குப் பெரியாரைப் பேட்டி காண நேர்ந்திருந்தால், அவரிடம் என்ன கேட்டிருப்பீர்கள்? - நிறைய வினாக்களை எழுப்பியிருப்பேன். மூன்று வினாக்களைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்: ஒன்று - இந்த இயக்கத்தை அகில இந்திய அளவில் கட்டமைப்பதற்கான முயற்சியை நீங்கள் ஏன் மேற்கொள்ளவில்லை? இரண்டு - சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த நீங்கள், இந்திய நாட்டுத் தலைவர்கள் அனைவருடனும் தொடர்பு கொண்டதோடு மட்டுமின்றி அவர்களும் உங்களை அறிந்து வைத்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில், இந்த இயக்கத்தின் அவசியம் இந்திய அளவில் மிகத் தேவை என்று கருதாமல் தமிழ்நாட்டுக்குள்ளேயே கட்டமைத்தது ஏன்? மூன்று - ஆரியர் வருகைக்கு முன்னால், தமிழர்கள்-திராவிடர்களின் சமூக அமைப்பு மநுவினுடைய அமைப்பைப் போன்று இருந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி இருக்கிறபோது, அதற்குப் பின்னர் ஒரு கலப்பு நிலை ஏற்பட்டதினால், நாம் சூத்திரர்கள் ஆக்கப் பட்டோம்; தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கப்பட்டோம். இந்த அடிப்படையை நீங்கள் நன்றாக அறிந்துதான் இந்த இயக்கத்தைக் கட்டமைத்திருக்கிறீர்கள். வருணாசிரம முறையின்கீழ் இந்தியச் சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா முழுமைக்கும் இந்த அமைப்பு தேவை தானே... இதை நீங்கள் கவனம் கொள்ளாதது ஏன்? - என்றெல்லாம் கேட்டிருப்பேன்.

சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டை எட்டவிருக்கிறது; சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாகப் பரிணமித்த 80ஆம் ஆண்டில் இருக்கிறோம். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் 60 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், திராவிட இயக்கத்தின் இன்றைய நிலை பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

திராவிட இயக்கத்தின் முதல் நோக்கம், தமிழர்களுடைய சமூக, வாழ்க்கை, அரசியல், வாழ்நெறி ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்வதுதான். சமூகம் நவீனக் கட்டமைப்புக்கு மாறிவந்திருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் நாம் செயல்பட வேண்டியவர்களாக உள்ளோம்.

திராவிட இயக்கத்தின் பணி அப்படித்தான் நிகழ்ந்து வந்திருக்கிறது; நிகழ வேண்டியவையும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அரசியல் நிலையில் ஒன்றிய அரசின் கட்டுக்குள் இருக்கும்போது ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

காங்கிரஸ், பாஜக என யாராக இருந்தாலும் இந்த முரண்பாடுகளின் விகிதாச்சாரம் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. அண்ணா காலத்திலிருந்து ஸ்டாலின் காலம்வரை முரண்பாடுகள் மேலும் மேலும் வளர்ந்து வருவதை அவர்களுடைய பேட்டிகளிலிருந்தே நாம் அறியலாம்.

புத்தர் காலத்திலிருந்து எந்தவொரு இயக்கமும் மாறுதலை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. இன்று இந்தியா முழுமைக்கும் அதற்கு உரிய வகையில் சுயமரியாதை இயக்கம் தேவை.

அத்தகைய நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம் அதன் பணிகளையும், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்திலும் இயன்ற வரையில் கொள்கைச் சாதனைகளைப் புரிந்துவருகின்றன.

திராவிட இயக்கம் எதிர்கொள்ளும் பெரும் சவால் சித்தாந்தரீதியிலான சரிவு எனப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்தச் சரிவிலிருந்து மீண்டெழுவதற்கான வழியாக உங்களுக்குத் தென்படுவது எது? - சித்தாந்தம் அப்படியேதான் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அரசியல் சூழல் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குப் பகுத்தறிவுரீதியாகவும் சமதர்மரீதியாகவும் தீர்வு காணக்கூடிய வலிமையைத் திராவிட இயக்கத்தின் கருத்தியல் பெற்றிருக் கிறது.

ஆனால், அது மக்களிடம் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்பது நாம் இன்று கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி. வெகுமக்களுக்கான இயக்கம் இது. சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டவர்களும்தானே சமூக அமைப்பில் மிக அதிகமாக இருக்கின்ற மக்கள்தொகையினர்? அவர்கள் அவ்வளவு பேரையும் இந்தச் சித்தாந்தம் சென்றடைந்திருக்கிறதா? அவ்வளவு பேரையும்கூடச் சென்றடைய வேண்டாம்; ஒரு 40 விழுக்காடு சென்றடைந்திருந்தால், ‘ஓ! இப்படி ஒரு இயக்கம் இருக்கிறது’ என்கிற நினைப்பு அவர்களுக்கு ஏற்படும்.

திராவிட இயக்கம் வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டுக் கலாச்சார இயக்கமும்கூட. அதற்குச் சித்தாந்தம் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டுபோகப் பிரச்சார உத்திகளும் இருக்கின்றன. அந்தந்தக் காலகட்டத் தின் புதிய உத்திகள் அவ்வளவையும் திராவிட இயக்கம் கையாண்டிருக்கிறது; கையாண்டு வருகிறது. அது அரசியல் வெற்றியைத் தமிழ்நாட்டில் பெறுகிறது.

அப்படி இருந்தும் வலதுசாரிக் கொள்கை பெரிதாகப் பேசப்படுகிறது, அத்துடன் சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உண்டான ஒரு மக்கள் இயக்கம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை அது வழங்கிக்கொண்டிருக்கிறது - அப்படியென்றால், அதற்கு முழு முதற்காரணம் அதன் கருத்துகள் தருகின்ற மயக்கம்தான்.

மயங்குகிற நிலையைக் கடந்து திராவிட இயக்கம் மேலே செல்ல வேண்டும். நம்முடைய முழு வாழ்நெறியை மீட்டுருவாக்கம் செய்கிறோம் என்கிற கடப்பாடு இல்லாமல் இருக்கும், அந்த வெற்றிடத்தை இட்டுநிரப்புவது எப்படி என்றுதான் இயக்கத்தார் யோசிக்க வேண்டும்.

அதற்கு ஒருவருடைய மனத்தில், எண்ணத்தில் இந்தச் சித்தாந்தம் முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்; அப்போதுதான் சமூக, அரசியல், பொருளாதார வெற்றியை முழுமையாக்க முடியும். அதை எடுத்துச் சொல்வதற்குரிய ஆற்றலை இயக்கத்தார் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும் என்பது என் ஆசை.

பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே தனிமனிதராக திராவிட இயக்கம் சார்ந்த ஆய்வை நீங்கள் இடையறாது மேற்கொண்டுவருகிறீர்கள். உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கருதுகிறீர்களா? - 60 ஆண்டுகளாக இதில் என்னை ஈடுபடுத்திக்கொண் டுள்ளேன். எந்த வேலையில் இருந்தாலும் ஆய்வுக்காக நூலகங்களுக்குச் சென்று தேடுவது, புதிய நூல்களைப் படிப்பது என்பது என்னுடைய இயல்பாக ஆகிவிட்டது. பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு ஒரு திட்டம் வைத்திருப்பார்கள்; வழிகாட்டிகள் இருப்பார்கள்.

நமக்கு அப்படி யாரும் வழிகாட்டிகள் இல்லை. தலைவர்கள் உண்டு. அவர்களுடைய கருத்துகள் பெரும் கருவூலமாக நம்மிடம் இருக்கிறது. அந்தக் கருத்துக் கருவூலம் கருத்தியல்ரீதியாக நம்முடைய எதிரிகளுக்கும் நமக்கும் இருக்கின்ற வேறுபாட்டைக் காட்டுகிறது. கருத்தியல் போரில் நம்முடைய கருத்தமைவு ஒரு சூத்திரமாக இருக்கிறதே தவிர, அது விரிவுபடுத்தப்பட வில்லை.

அதை விரிவுபடுத்துகிறபோது நமக்குச் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அந்த விஷயங்களுக்கான ஆதாரங்கள் முழுமையாக நம்மிடம் இல்லை. அவற்றைத் தேடிக் கண்டடைவதற்கு ரொம்பக் கடினப்பட வேண்டி இருக்கிறது.

அறிஞர் அண்ணா எங்கள் குடும்பத்தை நன்கு அறிந்தவர்; இதுவன்றி எனக்குரிய அங்கீகாரத்தைக் கலைஞரும் ஸ்டாலினும் நன்றாகவே வழங்கியுள்ளனர். இந்த இயக்கம் என் பின்னால் பெரும்பலமாக இருக்கிறது. இயக்க முன்னணியினர் என்மீது பெருமதிப்பு வைத்திருக்கின்றனர். இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்?

தன்வரலாறு எழுதும் திட்டம் உண்டுதானே? - என்னுடைய வரலாறு இயக்கத்துடன் இணைந்ததுதான்; இயக்கத்துடன் கரைந்துவிட்ட நாம் எங்கு தனி வரலாறு எழுதுவது? நமக்கென்று தனி வரலாறு கிடையாது. இந்த இயக்கம்தான் எல்லாம்!

சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1 (1925-1944)
க.திருநாவுக்கரசு

நக்கீரன் பதிப்பகம்
விலை: ரூ.800
தொடர்புக்கு: +91 9841097078

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in