

புது டெல்லியில் அமைந்திருக்கும் ‘கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்’ 2010இல் மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம். 1940 முதல் இன்று வரையான இந்திய நவீன ஓவியங்கள், சிற்பங்களின் வளமான தொகுப்பாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. பிரமிப்பூட்டும் ஓர் அற்புத உலகுக்குள் பிரவேசித்துத் திளைத்த பேரனுபவம் பார்வையாளர்களுக்குக் கிட்டும். 2022இன் தொடக்கத்தில், ‘கிரண் நாடார் மியூசியம் ஆஃப் ஆர்ட்’ அதன் பிரமாண்டமான கலை அருங்காட்சியகத்தின் ஓர் அங்கமாக, நம் காலத்தின் பெருமிதமான விந்தைக் கலைஞன் கே.ராமானுஜத்தின் கனவுலக சாம்ராஜ்யத்துக்கெனப் பிரத்யேகமான நிரந்தரக் காட்சிக்கூடம் ஒன்றை நிறுவியது. தனியார், சில கலைக் காட்சிக்கூடங்களின் சேகரிப்புகளிலிருந்து 42 படைப்புகளைப் பெரும் விலை கொடுத்து (சில கோடி ரூபாய்) வாங்கி இதை நிர்மாணித்துள்ளது. இது, இந்தியக் கலை வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு. 2022ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி அங்கு சென்று அக்கூடத்தில் ராமானுஜத்தின் அரிய பொக்கிஷங்களைப் பார்வையிட எனக்கு வாய்த்தது என் வாழ்வின் மிகப் பெரிய பேறு. இப்பின்னணியில் ராமானுஜத்தின் கலை மேதமை பற்றிப் பார்க்கலாம்.
நிலவின் குழந்தை: கலையின் புனித பூமியில் சிருஷ்டிகரத்தின் பெரும் கொடையோடு தன் கனவுலக சாம்ராஜ்யத்தை எழுப்பி, அதில் ஆனந்தமாகவும் கம்பீரமாகவும் வாழ்ந்த கலை மேதை கே.ராமானுஜம். கட்டுக்கடங்கா உத்வேகத்தோடும் கலை ஆற்றலோடும் படைக்கப்பட்ட இவருடைய சித்திரங்களும் ஓவியங்களும் தனித்துவமானவை; பிரத்யேகமானவை. அவை அவருடைய தனிப்பட்ட புராணீகங்கள். மிக மோசமாக அலைக்கழிக்கப்பட்ட ஒரு கலை மனம், தனக்கென ஓர் உலகை உருவாக்கிக்கொண்டு அதில் குதூகலமாய் வாழ்ந்திருக்க விழைந்த தகிப்பிலிருந்து பிறந்தவை.
கலைவெளியில் வான்கா சூரியக் குழந்தை எனில், ராமானுஜம் நிலவின் குழந்தை. வான்கா தன் வாழ்வின் அலைக்கழிப்புகளையும் உளைச்சல்களையும் வேதனைகளையும் வலிகளையும் தன் படைப்புகளில் சூரியத் தகிப்போடு வெளிப்படுத்தினார். மாறாக, வான்காவைப் போன்றே பிரத்யட்ச வாழ்வில் அல்லலுற்ற ராமானுஜம் தன் வலிகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் வெளியேறுவதற்கான ஒரு மார்க்கமாக நிலவின் குளுமையோடு தன் படைப்புகளை உருவாக்கினார். குதூகலமான ஒரு விந்தை உலகை உருவாக்கி அதில் அக மலர்ச்சியோடு வாழ்ந்தார். எனினும், மகத்தான அந்த இரு கலைஞர்களுமே இளம் வயதிலேயே, ராமானுஜம் 33 வயதிலும் வான்கா 37 வயதிலும், தற்கொலையின் மூலம் இந்த வாழ்விலிருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டார்கள்.
ராமானுஜத்தின் விந்தை உலகு: ராமானுஜத்துக்கு இந்த வாழ்வில் அவர் அறிந்திருந்த ஒரே பாதையாக ஓவியம் மட்டுமே இருந்தது. அவருடைய கனவுகள்தான், அவருடைய படைப்புலகம். கனவுலகின் விந்தைத் தன்மைதான் அவருடைய படைப்புக் கூறு. அவருடைய கலை உன்மத்தம்தான் அவருடைய கனவுலகை சிருஷ்டிப்பதற்கான சில விசேஷத் திறன்களை அவருக்குத் தந்திருக்கும். வெகுநுட்பமாக இழையூட்டியபடி நகரும் கோடுகள் மூலம் இன்றைய கிராஃபிக் பாணிக்கு நிகரான நுட்பமான வேலைப்பாடுகளைத் தன் அலாதியான விரல்கள் மூலம் சாத்தியப்படுத்தியவர் ராமானுஜம். ராமானுஜத்தின் வாழ்க்கையையும் படைப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு புனைவு பெற்றதுதான் என்னுடைய முதல் நாவலான ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்.’ அவருடைய கனவுலக சாம்ராஜ்யத்தின் சில அம்சங்களை நாம் இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்:
‘அவருடைய காதல் நங்கையின் கீர்த்திக்காக அவர் பிரம்மாண்டமான மாளிகைகள் எழுப்பினார். அதன் மாடங்களின் விதானங்கள் வழியாகப் பூமியிலிருந்து படர்கொடிகள் சொர்க்கத்தை நோக்கி உயர்ந்தன. அவள் பூமிக்கும் சொர்க்கத்துக்குமான அழகியாகத் திகழ்ந்தாள். அவள் நிலவில் அமர்ந்து அவரை அழைக்கவும் பரவசப்படுத்தவும் குழலூதினாள்.
அவரை ஏந்தியபடி உயர்ந்து நிற்கும் அவளுடைய உள்ளங்கையில் அவர் ஒய்யாரமாய் ஓய்வெடுப்பார். கொடிகள் படர்ந்து அவருக்குப் புகலிடம் அளிக்கும். முட்களற்ற ஒரு கடிகாரமாக, காலமற்ற ஒரு காலாதீதத்தில் அவர்கள் காதல் உறைந்திருக்கும். தாமரை தாங்கிய அவளுடைய கை, நட்சத்திரங்களுக்கு நடுவே அவரை உயர்த்திப் பிடிக்கும். நிலவில் குதிரைச் சவாரி செய்வதுபோல் அமர்ந்திருக்கும் அவளுக்காக அவர் குழலிசைப்பார்.
அவருடைய ஒய்யார எழில்மாட உலகில் நிலவினைச் சூடியவளாக, அதன் மைய விதானத்தின் உச்சியில் அவள் வீற்றிருப்பாள். ஒரு வினோத மிருகத்தின் வாயில் அவர் தலைக்கொரு திண்டும் காலுக்கொரு திண்டுமாகப் படுத்திருக்க, அவர் அருகில் அமர்ந்து அவருடைய கரத்தோடு தன் கரம் கோத்து நடனமாடுவாள்.
ஆறு தலைகள் கொண்ட பருத்த நாகவுடல் படுக்கையின்மீது அவளுடைய உடலும், பாம்புத் தலைகளின்மீது அவளுடைய தலையும் சாய்ந்திருக்க, திருமாலைப் போல் சயனித்திருந்தபடி, அவருக்காகப் பண்ணிசைப்பாள். யானையின் மீது வீற்றிருந்து அவருக்கு அருள் பாலிக்கும் அம்பிகை அவள். நாகலோக ராணி. கடலடி உலகில் பெரும் சிப்பிக்குள் எண்ணற்ற கோலங்கள் கொண்டிருப்பவள். அவளே மச்சக்கன்னி; அவளே கடல் ராணி. அவளே கருட வாகன தேவதை. அவளே பெண்ரூப விஷ்ணு; விஷ்ணுரூபப் பெண்’.
தரையில் தரிக்கா கால்கள்: வெளியும் காலமும் எல்லைகளும் முடிவுமற்றுத் திகழ்ந்த ஒரு விந்தைப் பிரதேசத்தில் அவருடைய வாழ்வு பரிபூரணமாக மலர்ந்திருந்தது. பொதுவாக, மண்ணில் அவருடைய நடமாட்டம், ஒரு நிலவுவாசி பூமிக்கு வந்துவிட்டதைப் போல, ஏதும் புரியாததாகவும் மிக அந்நியமாகவும்தான் இருந்தது. அதிலிருந்து விடுபடவும் தனதான உலகில் வாழவும் ஓர் அழகிய விந்தை உலகைக் கண்டடைந்தார். அதை அபாரத் திறனோடு சிருஷ்டித்தார்.
அவர் வான்வெளியில் மேகங்களின் இளவரசனாகத் திகழ்ந்தார். அவருடைய பிரம்மாண்டமான சிறகுகள் அவர் வானுலகில் சஞ்சரிக்கத் துணையாக இருந்தன. அதேவேளை, அவரைத் தரையில் சுபாவமாக நடக்கவிடாமல், அவை தடுத்துக்கொண்டிருந்தன. ராமானுஜத்தைப் பற்றி கே.சி.எஸ்.பணிக்கர், ‘நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது’ என்கிறார்.
கலை ஆர்வமுள்ள டெல்லிவாழ் தமிழர்களும், டெல்லிக்குச் செல்பவர்களும் இந்த அருங்காட்சியகத்துக்கு ஒருமுறையேனும் செல்லுங்கள். அதன் கலை உலக வாசல்கள் உங்கள் வாழ்நாளுக்கான மிகப் பெரும் கொடையை உங்களுக்கு அளிக்கும். வாழ்வு புதிதாய் மலரும்.