

கடந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்ற ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச்சின் (Paul Lynch) ‘தீர்க்கதரிசனப் பாடல்’ (Prophet Song) நாவல், எந்த ஒரு நாட்டிலும் ஏற்படக்கூடிய நிலைமையை ஒரு குடும்பத்தின்கதை வழியாகச் சொல்கிறது. தென் அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் வசிக்கும் லார்ரி ஸ்டேக், அந்நாட்டு ஆசிரியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர்; மனைவி எல்லிஷ் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்; நான்கு குழந்தைகள்: மூத்தவன் மார்க். அவனுக்கு இன்னும் 17 வயது நிறைவடையவில்லை. மோல்லி 14 வயதுப் பெண். பெய்லி அவளைவிடச் சிறியவன். பென், கைக்குழந்தை. அலுவலக வேலை முடிந்தவுடன் வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு எல்லாமே எல்லிஷுடையவை. மகிழ்ச்சியான குடும்பம்.
வீடு தேடி வரும் பாசிசம்: கணவரும் மக்களும் வீட்டுக்குத் திரும்புவதைக் காலணிகள் மாற்றப்படுவதிலிருந்தோ, சைக்கிளை வீட்டுக்குக் கொண்டு வருவதிலிருந்தோ எல்லிஷ் தெரிந்துகொள்வார். இருள் நிறைந்திருந்த ஒரு நேரத்தில் யாரோ வாசல் கதவை முரட்டுத்தனமாகத் தட்டுகிறார்கள். சிறிது அச்சத்துடன் கதவைத் திறக்கிறார் எல்லிஷ். இருட்டில் புதைந்துள்ளன இரண்டு முகங்கள். லார்ரியைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். “அவர் வந்தவுடன் எங்கள் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டுச் செல்கின்றனர். லார்ரி வந்தவுடன் தொடர்புகொள்கிறார். அது ‘கார்டா’ என்றழைக்கப்படும் உளவுத் துறைக் காவலர் அலுவலகம். “என்ன விஷயம் என்பதைத் தொலைபேசியிலேயே சொல்லுங்கள்” என்கிறார் லார்ரி. “இல்லை, அடுத்த நாள் காலை எங்கள் அலுவலகத்துக்குச் சிறிது நேரம் கட்டாயம் வந்து சென்றாலே போதும்” என்கிறார்கள். மறுநாள் அயர்லாந்து முழுவதிலும் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக ஆசிரியர்கள் அமைதி வழிப் பேரணியை நடத்தவிருக்கிறார்கள். கார்டா அலுவலகம் சென்ற லார்ரி திரும்பவேயில்லை. பதறிப்போன எல்லிஷ் அங்கே செல்கிறார். பாதுகாப்புக் காரணத்துக்காக லார்ரி வேறோரிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட எல்லிஸுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அலுவலக, வீட்டு வேலைச் சுமைகளுடன் தனக்குத் தெரிந்த எல்லாரையும் அணுகுகிறார் எல்லிஷ். எல்லா இடங்களுக்கும் செல்கிறார். ஆசிரியர் சங்கப் பேரணியும் நசுக்கப்படுகிறது. கார்டாவைச் சேர்ந்த இருவர் வீட்டு வாசல் கதவுக்கு வெளியேதான் நின்று கொண்டிருந்தனர் என்றாலும், அன்று முதலே ‘ஏதோவொன்று வீட்டுக்குள் புகுந்து அரக்கனைப் போல எல்லாரையும் கவ்விச்செல்லத் தொடங்கிவிட்டதாக’ எல்லிஷ் கருதுகிறார். அந்த ‘ஏதோவொன்று’ பாசிசம்தான்.
கட்டவிழும் அதிகாரம்: அயர்லாந்தில் தேசியக் கூட்டணிக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டாண்டுகளுக்குப் பிறகு தன் எதேச்சதிகார முகத்தைக் காட்டத் தொடங்குகிறது. ‘கார்டா தேசிய சேவை அமைப்பு’ என்ற உளவுத்துறைக்கும் நீதித் துறைக்கும் வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அரசியல் சட்ட உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுவதை மக்கள் மிகத் தாமதமாகவே உணர்ந்துகொள்கிறார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வே கூறியதுபோல், ‘பாசிசம் முதலில் படிப்படியாகவும் பிறகு திடீரென்றும் காட்சியளிக்கும்’. உண்மை நிலவரங்களைக் கூறும் ஊடகங்கள் ஒழிக்கப்படுகின்றன. ‘கூட்டணி’ அரசாங்கத்தின் தொலைக்காட்சியில் காட்டப்படுவன நம்பகத்தன்மை அற்றதாக இருப்பதால், பிபிசியை மட்டுமே எல்லிஷ் பார்க்கிறார். ‘சர்வதேச சமுதாயம்’ என்று சொல்லப்படுவதில் வழக்கம்போலவே மெளனம். மறுபுறம் பாசிசத்துக்கான ஆதரவும் பெருகிவருகிறது. ஓர் துருக்கியப் பழமொழி கூறுவதுபோல ‘காடு சுருங்கிக்கொண்டே வருகிறது. ஆனால், மரங்கள் தொடர்ந்து கோடரிக்கே வாக்களித்து வருகின்றன. ஏனெனில், கோடரி புத்திசாலித்தனமானது. கோடரிக் காம்பு மரத்திலிருந்தே உருவாக்கப்பட்டிருப்பதால் தானும் உங்கள் இனத்தைச் சேர்ந்ததுதான் என்று மரங்களை அது நம்பவைத்துவிட்டது’.
தேசத் துரோகிகள்: மூத்த மகன் மார்க் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அவனைக் கல்லூரிக்கு அனுப்பும் திட்டம் தகர்கிறது. 17 வயதுகூட நிறைவடையாத அவன், ராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். பள்ளி அதிகாரிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை எல்லாரிடமும் மன்றாடியும் எல்லிஷுக்குப் பலனில்லை. மார்க்கோ, தன் தந்தையைக் கண்டறிந்து கொண்டுவருவதில் பிடிவாதமாக இருக்கிறான். ஒருநாள் அவனும் காணாமல் போய்விடுகிறான். சர்வாதிகாரப் பாசிசத்தை ஒழித்துக்கட்ட உருவாக்கப்படும் கிளர்ச்சியாளர் படையில் சேர்ந்துகொள்ளும் அவன், தன் திறன்பேசியில் புதிய சிம் கார்டைச் செருகி அந்த எண்ணை மட்டும் தாயிடம் கொடுக்கிறான். எப்போதேனும் ஒருமுறை அவனிடமிருந்து ஓரிரு வார்த்தைகள் கிடைக்கும். பிறகு அதுவும் நின்றுபோய்விடுகிறது.
எல்லிஷ் வேலை செய்யும் நிறுவனத்தில் ஆள்குறைப்பு என்ற பெயரில் அவரும் வேறு சிலரும் வேலைநீக்கம் செய்யப்பட்டு, அரசாங்கத்துக்கு வேண்டியவர்கள் அந்த இடங்களில் அமர்த்தப்படுகின்றனர். வேலையின்றித் தவிக்கும் எல்லிஷுக்கு வருமானம் இல்லை; வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுகின்றன. அவரது குழந்தைகள்மீது பாசம் கொண்ட ஒரு பெண்மணி அடிக்கடி உணவு கொண்டுவருகிறார். ஆனால், அந்தப் பெண்மணியின் கணவரும் ஒருநாள் கைது செய்யப்பட்டுவிடுகிறார். குழந்தைகளுக்கு உணவுக்குக்கூட வழியில்லை. விலைவாசி உயர்வு விண்ணைத் தொடுகிறது. கனடாவில் வசிக்கும் தமக்கை அவ்வப்போது அனுப்பும் சிறிது பணம்தான் பட்டினியால் சாகாமல் அவர்களைத் தடுக்கிறது. தமக்கையுடன் சில மாதங்கள் கழிக்கக் கனடாவுக்குச் செல்வதற்கும் தடை. தாயார் இறந்த பிறகும் சொந்த வீட்டிலேயே வசிக்கும் தந்தையையும் அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எல்லிஷுக்கு. கிழவருக்கோ மறதி. பல ஆண்டுகளுக்கு முன்பே தன் மனைவி இறந்துவிட்டதைக்கூட மறந்துவிடுகிறார். அவருக்குத் துணை வளர்ப்பு நாய் மட்டுமே.
அரசாங்கம் குண்டர் படைகளையும் உருவாக்குகிறது. ‘தேசத் துரோகிகள்’ என்று அவர்களால் கருதப்படுபவர்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். மக்களுக்கு ஏராளமான சேதங்கள். ‘ஆம்’ என்பதை ‘இல்லை’ என்றும், ‘இல்லை’ என்பதை ‘ஆம்’ என்றும் மக்கள் சொல்ல வேண்டும் என்று கூறுமளவுக்குப் பாசிச அரசாங்கத்துக்கு வலிமை.
அரசாங்க ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர் படைகளுக்குமிடையே மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பினருமே பேரழிவுகளை ஏற்படுத்துகின்றனர். ஒரு மூர்க்கத்தனமான ஆட்சிக்குப் பதிலாக அதேபோன்ற இன்னொன்று வந்துவிடுமோ என்று எல்லிஷ் அஞ்சுகிறார். ஒருநாள் இரு தரப்பினருக்குமிடையே நடக்கும் சண்டையில் காயமடையும் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்காகச் செல்கிறான் இரண்டாவது மகன் பெய்லி. அவன் தலையிலும் குண்டு பாய்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையாகச் செல்கிறார்கள். கடைசியில், அவன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரியவருகிறது. எல்லிஷால் பார்க்க முடிந்ததெல்லாம் பிணவறையில் இருந்த அவன் சடலத்தை மட்டுமே. ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு விகாரமாக்கப்பட்ட உடல்.
சூரியனுக்குக் கீழே: இதற்கிடையே நாட்டைவிட்டு வெளியேறுபவர்களுக்கு, அவர்களிடம் கொள்ளைப் பணம் வாங்கிக்கொண்டு ஏற்பாடுசெய்யும் ஒரு நிறுவனம் முளைக்கிறது. எல்லிஷ், தன் குடும்பத்தில் எஞ்சியுள்ள மகளுடனும் குழந்தையுடனும் சொல்லொணாத் துன்பங்கள் தரும் பயணம் மேற்கொண்டு,ஒரு கடற்கரையை அடைகிறார். அங்கு அவரைப் போல் ஏராளமானோர். ‘கடல்தான் வாழ்க்கை’ என்று அவர் சொல்வதுடன் நாவல் முடிகிறது. சிரிய, காஷ்மீர, இந்திய, பாலஸ்தீன மக்களுக்காகவும் உள்நாட்டுக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் புலம்பெயர்ந்து செல்ல முயலும் ஏதிலிகளுக்காகவும் எழுதப்பட்டுள்ள இந்த நாவலில் இரு முகப்புக் கூற்றுகள் (epigrams) உள்ளன: 1. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள ‘பிரசங்கி’யில் உள்ள வசனம்: ‘முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை’; 2. பெர்டோல்ட் பிரெஹ்ட்டின் கவிதை வரிகள்: ‘இருண்ட காலங்களில் பாடுவதும் இருக்குமா? ஆம், பாடுவதும் இருக்கும், அது இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்’.