Last Updated : 16 Feb, 2024 06:19 AM

1  

Published : 16 Feb 2024 06:19 AM
Last Updated : 16 Feb 2024 06:19 AM

பணியிட இடஒதுக்கீடு: ஓரவஞ்சனை தகுமா?

இந்தியாவில் நிகழ்ந்துவரும் வளர்ச்சியின் பலன்கள் விளிம்புநிலை மக்களைச் சென்றடையாத சூழலில், அவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படி உருவாக்குவது என்று பயிலவும், ஆராய்ச்சி செய்யவும் நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களில், ‘சமூக விலக்கல் - உள்ளடக்கிய கொள்கை மையம்’ (Centre for social exclusion and inclusive policy) 2009இல் உருவாக்கப்பட்டது.

அந்த மையம் அமைந்திருக்கும் அண்டை மாநிலத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில், 15 ஆண்டுகளாக அந்தத் துறைக்குப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் இடங்கள் நிரப்பப்படவில்லை. 2019 இல் அத்துறையின் பின்தங்கிய காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

2021 இறுதியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இருவர் மட்டுமே தகுதிபெற்றனர். ஒருவர்தான் நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். கடைசியில், ‘இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் யாரும் இல்லை’ என்று தேர்வுக் குழு குறிப்பெழுதி வைத்துவிட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி, நேர்காணலுக்குத் தகுதியானவர் என அழைத்ததும் அதே குழுதான்.

சமூக அநீதி: இடஒதுக்கீட்டுப் பிரிவில் குறைவான விண்ணப்பங்கள் அல்லது தகுதியானவர் ஒரே ஒருவர் வரும்போது என்ன செய்ய வேண்டும், எப்படி இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு விதிமுறைகளை வகுத்தளித்துள்ளது. அதில் முக்கியமான அரசின் ஆணை 1970இல் வெளியிடப்பட்டது.

அதன்படி, ‘எஸ்சி - எஸ்டி பிரிவின் கீழ் நேரடிப் பணி நியமனத்துக்கு (Direct Recruitment), வரும் தகுதியானவர்களை, அங்குள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு நிரப்ப வேண்டும். தகுதியற்றவர்கள் யாரையும் பணிக்கு எடுக்கத் தேவையில்லை. அதேவேளை, அந்தப் பணிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி இருக்கிறது என்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்’ என்பதே அரசு ஆணையின் சாரம்.

மேற்படி துறையில் ஒரே ஒரு காலிப் பணியிடம் இருக்கிறது. ஒருவர்தான் தகுதியானவர் என்று நேர்காணலுக்குத் தெரிவு செய்யப்படுகிறார் என்றால், அந்த ஒருவருக்குப் பணி நியமனம் வழங்கியிருக்க வேண்டும். அதுவே இடஒதுக்கீட்டை அதன் முழுப் பரிமாணத்தில் அமல்படுத்த மத்திய அரசு பிறப்பித்த ஆணை.

ஆனால், அந்த இடத்தை அரசு ஆணைப்படி நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் தயாராக இல்லை. இவ்வளவுக்கும், ‘ஒருவரும் பொருத்தமானவர் இல்லை’ என்ற பெயரில் நிராகரிக்கப்பட்டவர், அத்துறையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியவர்; ஆய்வுகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர்.

‘போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை’ எனக் கூறி, வேறொரு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்த பழங்குடிச் சமூகத்தவருக்கு நேர்காணல் கடிதமே அனுப்பப்படவில்லை. இவரும் இந்தியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் படித்தவர்; பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர்.

இவ்வாறு நீடிக்கும் இந்தக் காலிப் பணியிட ஒதுக்கீடு, ஒரு கட்டத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டுவிடும்‌. இப்படியாகப் பட்டியல் சாதி, பழங்குடியின மக்களில் படித்துப் பட்டம் பெற்ற தகுதியானவர்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்த அவலம் நீடிக்கிறது. குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால்கூட ஜீரணித்துக்கொள்ள முடியாத சமூக அநீதி இது.

இடஒதுக்கீடு மீதான வெறுப்பு: Locomotor disability என்கிற வகையின்கீழ் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகச் சிறு விழுக்காடே இடஒதுக்கீடு கிடைக்கிறது. அதன்கீழ் ஓர் உயர் கல்வி நிறுவனத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. நேர்முகத் தேர்வுக்குச் சென்ற மூவரில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

மூவரும் மூன்று முறை நிராகரிக்கப்பட்டனர். பின்னர், அந்த ஒதுக்கீடு வேறு துறைக்கு மாற்றப்பட்டு, வேறு சிலர் பணி நியமனம் பெற்றனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒருவர், “இளம் வயதில் கால்கள் ஊனம் அடைந்து, நடக்கச் சிரமப்பட்டு, படித்து, மத்தியப் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பேராசிரியர் பணி அனுபவமும் உள்ளது. இதற்கு மேலும் என்ன தகுதி எனக்கு வேண்டும்?’’ என்று குமுறுகிறார்.

இன்றைய உயர் கல்வி நிறுவனங்களில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு, தேவையான நபர்கள் கிடைக்காததால் மட்டுமே அந்தப் பணியிடங்கள் காலியாக இல்லை. இடஒதுக்கீட்டை வெறுப்பவர்கள், அதற்கான உத்தரவுகளை உதாசீனப்படுத்துபவர்கள் எனப் பலர் இதன் பின்னணியில் உள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டைப் பூர்த்திசெய்ய நடவடிக்கைகளை எடுக்கும்போது, பல கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக அரசு உதவிபெறும் கல்லூரிகள் - பல்கலைக்கழகங்கள், எந்தத் துறைக்கு ஆள் கிடைக்க மாட்டார்களோ அல்லது குறைவாக உள்ளனரோ அந்த இடத்தைப் பட்டியல் சாதி - சமூகப் பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்கின்றனர்.

உதாரணமாக, தற்போதைய நிலையில், வரலாற்றுப் பாடம் கற்பிக்கப் போதுமான கல்வித் தகுதி உள்ளவர்கள் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் கிடைப்பதில்லை. இதனால், ஆள்கள் கிடைக்காத அல்லது குறைவாக இருக்கும் துறையாக அது மாறிவிட்டது.

பெரும்பாலான அரசு உதவிபெறும் கல்லூரிகள், வரலாற்றுப் பாடத்தில் உருவாகும் காலிப் பணியிடத்தை, பட்டியல் சாதிப் பிரிவினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்து விளம்பரங்கள் வெளியிடுவதைத் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

வளர்ந்துவரும் உயிரித் தொழில்நுட்பம், உயிரி வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்குப் பொதுவாக ஆள் கிடைக்காத நிலை இருக்கிறது. இதற்கான காலிப் பணியிடங்களும் பின்தங்கிய சமூகங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பொதுப் போட்டியில் கிடைக்காத நபர்கள், காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சமூகங்களில் இருந்து மட்டும் எப்படிக் கிடைப்பார்கள்?

என்ன செய்ய வேண்டும்? - சாதி, மதம் சார்ந்த நிறுவனமாக இருந்தால் அவர்கள் சமூகப் பிரிவினரைச் சிக்கல் இன்றி நிரப்பிக்கொள்ளலாம். பணம் வாங்கும் நிறுவனங்கள் எனில், அதிகப் போட்டி இருந்தால், அதிக விலைக்குப் பதவியை விற்க முடியும். இந்த உண்மை வெளியே தெரியாமல், “இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் போதுமான நபர்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது” எனக் கூறி, அந்த இடஒதுக்கீட்டை ரத்துசெய்வதற்கான திட்டம் சட்டரீதியாகவே வகுக்கப்படுகிறது என்பது வேதனையளிக்கும் உண்மை.

சமீபத்தில், ‘உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு வழிகாட்டு நெறிமுறைகள் - நவம்பர் 2023’ என்ற வரைவு அறிக்கையைப் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றுக்கு விட்டது. அதில் மேலே கூறப்பட்ட இடஒதுக்கீட்டை எவ்வாறு ரத்துசெய்வது என்கிற வழிமுறைகள் பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கேட்புக்கு முன்வைக்கப்பட்டன.

கருத்துக் கேட்புக் காலம் நிறைவடையும் தறுவாயில், இந்தப் பிரச்சினை பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்தபோது, மத்தியக் கல்வி அமைச்சகம் தலையிட்டது. இறுதியில் அந்தச் சுற்றறிக்கை பல்கலைக்கழக மானியக் குழு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த முயற்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென உள்ள சட்டங்கள் - அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்துவது, இடஒதுக்கீட்டின் முழுப் பரிமாணத்தையும் நிறைவேற விடாமல் தடுக்கும் சட்டத்தின் ஓட்டைகளை அடைப்பது, எந்தெந்த இடங்களுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உண்மையில் கிடைக்கவில்லை என்பதை அடையாளம் கண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எனப் பல்வேறு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்!

- தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

To Read in English: Reservation in jobs: Could partiality be justified?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x