

கனவுத் தமிழ்நாடு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கிஸ்ஃபுளோ (Kissflow) நிறுவனத்தின் நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம்,Thirukural.ai என்னும் செயற்கை நுண்ணறிவுத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில்நடந்த ‘சென்னை கணித்தமிழ் 24’ மாநாட்டில்இது அறிமுகப்படுத்தப்பட்டது. சாட்ஜிபிடி என்னும்செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது இயங்குகிறது. திருக்குறளின் சாட்ஜிபிடி வடிவம் என்றும் இதைச் சொல்லலாம்.
உங்கள் கணினி அல்லது திறன்பேசியின் உலாவியில் Thirukural.ai என்று தட்டச்சினால், https://www.thirukural.ai/ என்னும் தளம் திறந்துவிடுகிறது. இதில் திருக்குறள் தொடர்பான கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குப் பொருத்தமான விடைகளைப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக ‘காதல் குறித்து திருக்குறள் சொல்வது என்ன?’ என்று கேள்வியை உள்ளீடு செய்தால், அடுத்த சில நொடிகளில் காதல் குறித்து திருக்குறள் என்ன சொல்கிறது என்பது சுருக்கமான குறிப்பாகத் தரப்படுகிறது. அதற்குக் கீழே காதல் தொடர்பான திருக்குறள்கள் பட்டியலிடப்படுகின்றன.
அந்தக் குறள்களைச் சொடுக்கினால் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும், பரிமேலழகர், மு.வரதராசனார், மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகிய நால்வரின் உரைகளையும் படிக்கலாம். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் கேள்விகளை எழுப்பலாம்.
இது தவிர 1,330 குறள்களும் முப்பால்கள், 133 அதிகாரங்களின் கீழ் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தேவைப்படும் குறளை மிக எளிதாகத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிகிறது. ‘உலகப் பொதுமறை’ என்று புகழப்படும் திருக்குறளையும் அதன் கருத்துகளையும் அதிகச் சிரமம் இன்றி இணையம்வழியே கற்றுணர இந்தத் தளம் மிகவும் பயனுள்ளது.
டிஜிட்டல் யுகத்தின் இளைஞர்களுக்கும் தமிழ் தெரியாதவர்களுக்கும் திருக்குறளின் மேலான கருத்துகளைச் செயற்கை நுண்ணறிவு வழியாகக் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.