Last Updated : 11 Feb, 2024 03:57 PM

10  

Published : 11 Feb 2024 03:57 PM
Last Updated : 11 Feb 2024 03:57 PM

“25 இடங்களில் போட்டியிடுவது மட்டுமே நம் அரசியல் தகுதி அல்ல” - திருமாவளவன் நேர்காணல்

மக்களவைத் தேர்தல் களம் தமிழகத்தில் பரபரபாகி வருகிறது. இரு திராவிட கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. திமுகவில் முக்கியமான கூட்டணி கட்சியாக இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் விசிக பெறப்போகும் இடங்கள், சொந்த சின்னத்தில் போட்டி, வேங்கைவயல் விவகாரத்தில் திமுக நடவடிக்கை என முக்கியமான கேள்விகளுக்கு நம் பேட்டியின் வாயிலாகப் பதிலளித்திருக்கிறார்.

25 ஆண்டுகாலம் இயங்கிக்கொண்டிருக்கும் விசிக கட்சி, இப்போதும் திமுகவிடன் ஒன்றிரெண்டு தொகுதிகளுக்குப் பேச்சுவார்த்தை நடத்துக்கிறது. தமிழகத்தில் விசிக இன்னும் வளரவில்லையா?

“திமுக கூட்டணியில் 10-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அவரவர் கோரிக்கைகளுக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடுகளை முடிக்க வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சியின் பலம் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட கூட்டணி பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் நமது கொள்கை பகைவர்களை வீழ்த்த முடியும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் 10 இடங்கள் கேட்கப்பட்டது. ஆனால், இறுதியாக ஆறு இடங்களுக்கு உடன்பட்டோம். எனவே, தொகுதி எண்ணிக்கை என்பது கட்சி எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதைப் பார்த்து தீர்மானிப்பது அல்ல. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி நம் எதிரிக்கு ஒரு தொகுதியை கூட விட்டுக்கொடுத்த விடக்கூடாது. இந்த வெற்றி என்பது கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து சாதிக்க வேண்டியது.

ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் மற்ற கட்சிகளுக்காகப் பாடுபட வேண்டும். திமுக, விசிகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். விசிக, திமுக வெற்றிக்குப் பாடுபட வேண்டும். அந்தப் புரிதல் மிக முக்கியமானது. இன்று கசப்போடு தொகுதிப் பங்கீடு செய்துவிட்டு, நாளை நாம் களத்தில் தோல்விகளைச் சந்தித்துவிடக் கூடாது.

எனவே, இந்தப் புரிதலோடு இணக்கமாகவும் சுமுகமாகவும் தொகுதிப் பங்கீடு முடிவுகளை எடுக்க வேண்டும். ஆகவே, எண்ணிக்கை மட்டுமே கட்சியின் வலிமை தீர்மானிப்பது அல்ல. 25 இடங்களில் போட்டியிடுவது மட்டுமே நம்முடைய அரசியல் தகுதி இல்லை. கூட்டணி வைப்பதன் நோக்கமே நாமும் வெற்றி பெற வேண்டும்; கூட்டணி கட்சிகளும் வெற்றிப்பட வேண்டும். அதைவிட நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய அரசியல் பகைவர்கள் வீழ்த்த வேண்டும்.”

ஆனால், வெல்லும் ஜனநாயக மாநாடு நடத்தியதே தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும் ஸ்டண்ட் எனப் பேசப்பட்டதே..?

“எந்தச் செயலைச் செய்தாலும் அதில் அரசியலைப் பொருத்திப் பார்க்கப்பட்டு கருத்து சொல்லப்படுகிறது. அது நம் சிந்தனை பழக்கத்தில் உள்ள ஒரு பிரச்சினை. இந்த மாநாடு என் 60 வயது கடந்து மணிவிழா தொடக்க விழாவாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி நடத்த திட்டமிட்டோம். அதில் அனைத்து கூட்டணி கட்சிகள் தலைவர்களை அழைக்க முடிவு செய்தோம். அது தள்ளிப் போனது. பின் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டோம். ஆனால், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை காரணமாக இரண்டாவது முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக, ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது.

’பிறந்தநாள் மணிவிழா, விசிக கட்சியின் 25 ஆண்டுகாலம் வெள்ளி விழா, இண்டியா கூட்டணி தேர்தல் பிரச்சார தொடக்க விழா’ என இந்த மூன்று கருப்பொருளை மையமாக வைத்து ’வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டை நடத்தினோம். எனவே, இது தேர்தலில் கூட்டணிக்காக விசிக நடத்தியது என சொல்வதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.”

கடந்த மக்களவைத் தேர்தலில் உங்கள் வெற்றி போராடி பெறப்பட்டது. அதற்கு விசிக சொந்த சின்னத்தில் நின்றது காரணமாக என சொல்லப்பட்டது. இந்த முறையும் அந்த ரிஸ்கை விசிக எடுக்கணுமா?

“கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, காங்கிரஸ் இவற்றுக்கெல்லாம் அதிகாரபூர்வமாக சின்னம் இருக்கிறது. ஆனால்,விசிகவுக்கு அப்படி இல்லை. ஒரு தேர்தல் களத்தில் வெற்றி பெற பல காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக, பொருளாதாரம், அமைப்பு ரீதியிலான வலிமை, பொதுமக்களிடம் கட்சிக்கு இருக்கும் நன்மதிப்பு, கூட்டணி கட்சியின் ஒத்துழைப்பு என இவற்றை சொல்லலாம். அதில் முக்கியமான மற்றொரு காரணம் ’சின்னம்’. அது மக்களிடையே பிரபலமானதாக இருக்க வேண்டும்.

திமுகவுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் உதயசூரியன் சின்னத்தைத் தேடுவார்கள். அவர்களுக்குப் புதிதாக ஒரு சின்னத்தை நினைவூட்டி இறுதிவரை வழி காட்டுவது கடினம். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துகிறது. இது எளிதாக வெற்றி பெறுவதற்கான வழி செய்யும். மேலும், எதிர்தரப்பின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யாது. ஆனால், அதைக் கடந்து விடுதலை சிறுத்தைகள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிட நினைக்கிறோம்.

காரணம், உதயசூரியன் சின்னத்தில் நின்றால், அது திமுகவுக்கு கிடைத்த வாக்கு வங்கியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும். எனவே, விசிக என்னும் கட்சி வாக்கு வங்கி இருப்பதை நிரூபிக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் விசிக புதிதாகக் களம் கண்டது. ஆனால், சிதம்பரம் தொகுதியில் விசிகவுக்கு வாக்கு வங்கி கணிசமாக இருந்தது. எனவே, விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரத்தில் விசிக கட்சி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது.

அதன்பின், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்த சின்னத்தில் போட்டியிட்டோம். நான்கு இடங்களில் வெற்றி பெற்று வாக்கு வங்கியை உறுதி செய்தோம். இது எங்கள் அரசியல் பயணத்தில் முக்கியமான போராட்டமாகவே பார்க்கிறோம். எங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதையும் கவனித்தில் கொண்டு எந்தச் சின்னத்தில் போட்டி என்பது பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும்.”

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருத்தப்பதாக தரவுகள் சொல்கின்றன. அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

“முன்பெல்லாம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே நாங்கள் பேரணி, போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படாது. இதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து காவல் துறையிடம் விழிப்புணர்வு இல்லாதது, மற்றொன்று அதிகாரிகள் மத்தியில் பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலை காரணங்களாக இருந்தன. இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும், சமூக வலைதளங்கள் வருகைக்குப் பின் வழக்குப் பதிய வேண்டிய கட்டாயத்துக்கு காவல் துறையினர் தள்ளப்படுகின்றனர். இதனால், அனைத்து வழக்குகளும் முறையாகப் பதியப்படுகிறது.

ஆகவே, ஒரு கட்சிக்கும் சாதிய வன்கொடுமைக்கும் முடிச்சுப் போடுவது பொருத்தமான வாதமாக இல்லை. கடந்த ஆட்சியில் அதிமுக பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தியது. ஆனால், திமுக கட்டுப்படுத்தவில்லை என்னும் வாதத்தை முன்வைக்கலாம். திமுக தூண்டிவிட்டு பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்படுவதாக கருத்துக்கள் முன்வைப்பது தவறானது. இங்கு திமுகவுக்கு ஆதரவாகப் பேசவில்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் சாதிக் கொடுமைகள் தொடரவே செய்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறின. சாதி இந்துக்கள் பட்டியலின மக்களை எந்த வகையிலும் அங்கீகரிக்கவில்லை. மனிதனாகக் கூட மதிப்பதில்லை. சாதிப் பிரச்சினை பொது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்.அதைக் கட்சியோடு தொடர்புபடுத்த முடியாது.

இதற்குத் தீர்வாக, ஆளும் அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டங்களை இன்னும் கூர்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்த வலியுறுத்தலாம். அதைச் சொல்லாமல், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் இருப்பதைப் பிடிக்காதவர்கள் அற்பர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக பரப்பும் கருத்தாகவே இதைப் பார்க்கிறேன்.

மேலும், கூட்டணியில் இருந்தாலும் ஆளும் கட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியது விசிக . ஸ்ரீமதி வழக்கு, புதுக்கோட்டை வேங்கைவயல், மேல்பாதி என அனைத்து பிரச்சினைகளிலும் விசிக களத்தில் போராட்டம் நடத்தி இருக்கிறது. இதில், பாஜகவோ அதிமுகவோ, விசிக மீது விமர்சிக்கும் வைக்கும் எவரும் ரோட்டில் வந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. விசிகவுடன் தூண்டுதலால் மட்டுமே வேங்கைவயல் விவகாரம் சிபிசிஐடி-க்கும் மாற்றப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.”

ஆனால், முதல்வரின் நேரடி பார்வையில் உள்ள துறையில் விசாரணை நடந்தாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லையே...

“அந்த வழக்கு கிடப்பில் போடவில்லை. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், ராமஜெயம் கொலை வழக்கில் கூட குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கவில்லையே... திமுகவின் முதன்மைச் செயலாளர், முக்கியமான அமைச்சரான நேருவின் தம்பிதானே ராமஜெயம். அவரின் தம்பியின் கொலை குற்றவாளிகளை நேருவும், முதல்வரும் சேர்ந்து மறைக்கிறார்களா? அரசு இயந்திரத்துக்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அதில் தேக்கம் இருப்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x