Published : 08 Feb 2024 06:16 AM
Last Updated : 08 Feb 2024 06:16 AM

பேசாமல் பேசும் திறன்: எலான் மஸ்க் திட்டம் என்ன?

சிந்திப்பதை எல்லாம் மனிதனால் செயல்படுத்த இயலாது என்பதை உணர்ந்த கண்ணதாசன், ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்று எழுதிவைத்துச் சென்றார். ஆனால், மனித மூளை சிந்தித்தால் மட்டுமே போதும், அதை அந்நபரின் முயற்சி இல்லாமலேயே செயல்பாடாக நடத்திக் காண்பிக்க முடியும் என்பதை நிரூபிப்பதில் முதல் மைல்கல்லைத் தொழிலதிபர் எலான் மஸ்க் எட்டியுள்ளார்.

சிந்தித்தாலே போதும்! - யாரையேனும் திறன்பேசியில் அழைக்க வேண்டுமானால், அதை எடுத்துத் தொடுதிரையைத் தொட்டு, பெயரைத் தேடி அழைப்பதுதான் வழக்கம். சில திறன்பேசிகளில் நண்பரின் பெயரை உச்சரித்தால் அதுவே அழைத்துவிடும். ஆனால், கைகளைப் பயன்படுத்த முடியாத அல்லது பேச முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் நரம்பியல் நோய்கள் உள்ள நபர்களுக்கு இது சாத்தியமல்ல.

இப்படிப் பாதிப்புக்குள்ளான நபர்கள், நண்பர் ஒருவரைத் தொடர்புகொள்ள வேண்டுமென்று சிந்தித்தாலே போதும், அவரது திறன்பேசி அவர் நினைத்த நண்பருக்கு அழைப்பைப் பெற்றுக்கொடுக்கும்; அல்லது பேச முடியாத நபரின் சிந்தனைகளை அவரது நண்பருக்குத் திறன்பேசியின் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்ப முடியும். இதுதான் எலான் மஸ்க்கின் ‘நியூராலிங்க்’ (Neuralink) நிறுவனத்தின் ‘டெலிபதி திட்டம்’ (Telepathy project).

எப்படிச் சாத்தியமாகும்? - ஒரு நடவடிக்கையைச் செயல்படுத்தும் முன் நுணுக்கமாகத் திட்டமிடுவது, அதை உடல் உறுப்புகள் மூலம் செயல்படுத்துவது, பேச்சுத்திறன் போன்றவை முன்மூளையின் (Frontal lobe) வெவ்வேறு பகுதிகளின் செயல் பாடுகளாகும்.

உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி வெளியுலகைத் தொடர்புகொள்ள இயலாத நபரின், நடவடிக்கைகளைத் திட்டமிடும் (Planning) மூளைப் பகுதியில் ‘நியூராலிங்க் சில்லு’ (Neuralink Chip) ஒன்றை ரோபாட்டிக் நுண்துளை அறுவைசிகிச்சை மூலமாகப் பொருத்துவது நியூராலிங்க் திட்டத்தின் முதல்கட்டம்.

பின்பு, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இந்தச் சில்லுவின் நுண் இழைகள் மூலமாகச் சேகரித்து அனுப்பப்படும் அலைக்கற்றைகளை இதற்கென்று தயாரிக்கப்பட்ட திறன்பேசி அல்லது கணினிச் செயலிகள் குறிவிளக்கம் (Decode) செய்து திறன்பேசி அல்லது கணினியை வேலை செய்ய வைக்கிறது. இதன் மூலம் செயற்கை உறுப்புகளைக்கூட சிந்திப்பதன் மூலம் அந்நபரை செயல்படுத்தவைக்கலாம்.

மூளையின் சிந்தனைக்கும் திறன்பேசி/கணினிகளின் செயல்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் இந்த மந்திரப் பயன்பாடு ‘மூளை-கணினி இடைமுகம்’ (Brain-Computer Interface) என்று அழைக்கப்படுகிறது.

எதிர்காலத் திட்டங்கள்: மூளைநரம்பு நோய்களால் பார்வை, பேச்சுத்திறன், கைகால் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் தங்களது சிந்தனையில் உள்ளதை வெளிப்படுத்தவும், விரும்பிய செயல்களைச் சிந்திப்பதன் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தும் வகையில் நியூராலிங்க் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மருத்துவத் துறைக்கு அப்பாற்பட்ட பல நோக்கங்களுடன் இது விரிவுபடுத்தப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மூளையில் சில்லு பொருத்தப்பட்ட இரண்டு நபர்கள், தங்களுக்கிடையே சிந்தனைகளைத் தூரத்திலிருந்தவாறே பரிமாறிக்கொள்ள முடியும். இதனால்தான் இந்தத் திட்டத்துக்கு ‘டெலிபதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டான்லி குப்ரிக்கின் ‘தி ஷைனிங்’ (1980) திரைப்படத்தில் இப்படியான அறிவியல் தொடர்புகள் இல்லாமலேயே, இதை ஒரு அமானுஷ்ய வித்தை போலச் சித்தரித்திருப்பதை சினிமா ரசிகர்கள் கவனித்திருக்கலாம்.

மூளை-கணினி இடைமுகத்தின் மூலம், சிந்திப்பதைச் செயற்கை நுண்ணறிவுக்கு அனுப்பி, செயலிகள் மூலம் கட்டுரைகூட எழுதவைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான சிலிக்கான் துகள்களை மூளைக்குள் செலுத்தி, அதன் மூலம் நரம்புகளின் வேலைகளை வெளியிலிருந்தே கட்டுப்படுத்தும் திட்டமும் உள்ளது. இதற்கு நரம்புத் தூசுகள் (Neural dust) என்றழைக்கப்படும் தூசுபோன்ற சிலிக்கான் சில்லுகளைப் பயன்படுத்தவிருப்பதாகவும் தெரிகிறது. உச்சகட்டமாக, ஒருவர் உலகைப் புரிந்துகொள்ளும் விதத்தையே மாற்ற முடியும் என்பது ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான தகவல்.

காத்திருக்கும் சவால்கள்: இந்த உயிரிச் சில்லுவை (Bio-chip) மனித மூளைக்குள் பதிக்கும் முதல்கட்ட வேலை ஜனவரி 29 அன்று வெற்றிகரமாக நடந்துள்ளது. இனி அது அனுப்பும் அலைக்கற்றைகளைக் குறிவிளக்கம் செய்து, நினைத்த காரியத்தைச் சாத்தியமாக்குவது பெரும் சவாலானது. இந்த மூளை-கணினி இடைமுகத்தை நிரப்புவது செயற்கை நுண்ணறிவுதான் (Artificial Intelligence).

இதனால் எலான் மஸ்க்கின் இந்தப் பரிசோதனை முயற்சி ஒருவேளை சாத்தியமானாலும், கூகிள் போன்ற தேடுதளங்களில் நாம் ஒன்றைத் தேடும்போது, செயற்கை நுண்ணறிவின் மூலம் தரப்படும் பரிந்துரைகள் சில நேரம் தவறாக இருப்பதைப் போல், மூளை-கணினி இடைமுகத்தின் செயல்பாடுகள் ஒரு சதவீதம் இருந்துவிட்டால்கூட இதன் விளைவு மோசமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கவிருக்கும் சுமார் 50 வகையான பணியாளர்களில் ஒருவர் மட்டுமே நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராவார். மற்ற எல்லா பணியாளர்களும் மென்பொருள் தொழில்நுட்ப நிபுணர்கள்தாம். எனவே, இத்திட்டத்தை ஆய்வகப் பரிசோதனையிலிருந்து மருத்துவத் துறைக்கு மாற்றும்போது பல மருத்துவ நெறிமுறைச் சிக்கல்களுக்கு (Medical Ethical problems) உள்ளாக வாய்ப்புள்ளது.

மனநலம் சந்திக்கவிருக்கும் சவால்கள்: அறிவியல் தொழில்நுட்பங்கள் முன்னேறும்போதெல்லாம் அதற்கேற்ப மனநலப் பாதிப்புகளின் அறிகுறிகளும் புதிய பரிமாணங்களை எடுத்துக்கொள்வது வழக்கம். வேற்றுக்கிரகவாசிகள் தங்களுடன் தொடர்பு கொள்கிறார்கள், தங்கள் சிந்தனைகளைப் பிறர் அறிந்துகொள்கிறார்கள் அல்லது அவை வெளியே ஒளிபரப்பப்படுகின்றன, தூங்கும்போது தங்களதுமூளைக்குள் வைக்கப்பட்ட சில்லு மூலமாகத்தாங்கள் கண்காணிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்றெல்லாம் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆளாவதுண்டு.

ஆனால், நியூராலிங்க் திட்டத்தின் மூலம் இதுஉண்மையில் நடக்கச் சாத்தியம் ஏற்படுமாயின்நிஜத்திலிருந்து மனப்பிறழ்வை வித்தியாசப்படுத்துவது சவாலாக இருக்கும். சிந்தனைகளில் தோன்றும் எதிர்மறை எண்ண ஓட்டங்களெல்லாம் நிஜத்தில் நடந்துவிடுமோ (Magical thinking) என்றபதற்றத்துக்கு ஆளாவது, எண்ணச் சுழற்சி நோயின்(OCD) ஒரு அறிகுறியாகும்.

ஆனால், சிந்திப்பதேசெயல்பாட்டுக்குச் சமம் (Thought is equal to act)என்பது நியூராலிங்க் மூலம் சாத்தியமானால், திறன்பேசிகள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களால் பல சவால்களை எதிர்கொண்டுவரும் மனநலத் துறை, இன்னும் அதிகச் சவால்களைச் சந்திக்க நேரிடும்.

எதிர்பார்ப்பும் விமர்சனங்களும்: எலான் மஸ்க்கை ஆதரித்துப் பலர் பேசினாலும் பல விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். டெஸ்லா கார்கள் மூலம் ஓட்டுநர் இல்லாப் போக்குவரத்து, ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி ஆய்வுகள், புவி வெப்பமாதலிலிருந்து விடுவிக்கும் முயற்சிகள் முதல் நியூராலிங்க் திட்டம் வரை எல்லாமே அவரது விசித்திரமான அல்லது பிரம்மாண்ட மனநிலையின் வெளிப்பாடுகள் என்று சில அறிவியலாளர்கள் விமர்சிக்கின்றனர்.

கண்ணதாசன் பாடலில் சொன்னதுபோல, கடவுளின் இடத்தை மனிதனின் மனதிலிருந்து எடுக்கும் ‘எதிர் கடவு’ளை உருவாக்கும் முயற்சியாக இதைக் கருதி இறையியலாளர்களும் எதிர்ப்புக் காட்டிவருகிறார்கள். ‘நியூராலிங்க் சில்லு’ மூளையில் பொருத்தப் பட்டுள்ள நபரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் பிரத்யேகச் செயலிகள் மூலம் அவரது சிந்தனை ஓட்டங்கள் கண்காணிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை இம்முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் மருந்துகள், அறுவைசிகிச்சைகளால் பயன்பெற முடியாமல் இயன்முறை மருத்துவத்தை மட்டும் நம்பியிருக்கும் உறுப்புகள் செயலிழந்த, ஆனால் சிந்திக்கும் திறனுள்ள நபர்களுக்குப் வரப்பிரசாதமாக அமையலாம்.

- தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

To Read in English: Ability to speak without speaking: What’s Elon Musk’s project about?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x