

2024 ஜனவரி மாதம் முழுவதும், பாஜகவுக்குப் பலம் சேர்க்கும் நிகழ்வுகளால் நிறைந்திருந்த நிலையில்,பிப்ரவரி மாதத்தின் தொடக்கமே எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில அரசியல் சதிராட்டத்தில் பாஜகவுக்குக் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் அலுவலர் நடந்துகொண்டதாக உச்ச நீதிமன்றம் வைத்த குட்டு எனப் பல்வேறு விஷயங்கள் எதிர்க்கட்சிகளை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.
கூடவே, மோடி ஆட்சியில் பெரும் செல்வாக்குடன் வளர்ந்த பேடிஎம் நிறுவனம் முறைகேட்டுச் சர்ச்சையில் சிக்கி முடங்கும் நிலைக்குச் சென்றிருப்பது, ஆம் ஆத்மி கட்சியினரை வளைக்க பாஜக முயற்சிப்பதாக அர்விந்த் கேஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டு போன்றவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
நம்பிக்கை தந்த ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலமுதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன், நிலமோசடிக் குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டதும், கைதாவதற்கு முன்பு அவர் பதவி விலகியதும் பாஜக தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தன.
எனினும், அக்கட்சியின் சார்பில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற சம்பய் சோரன் தலைமையிலான அரசு, 47-29 என்ற விகிதத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது. சமீபத்தில் பிஹாரில் எதிர்க்கட்சிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் கிடைத்த நிலையில், ஜார்க்கண்ட்டில் அந்தக் கணக்கு நேர் செய்யப்பட்டிருக்கிறது.
கூடவே, நீதிமன்ற அனுமதியுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ஹேமந்த் சோரன்,பாஜகவையும் அமலாக்கத் துறையையும் சரமாரியாக விமர்சித்த விதம் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் உத்வேகம் தந்திருக்கிறது.
தன் மீதான புகார் தொடர்பான ஆதாரத்தைக் காட்டினால் அரசியலைவிட்டே விலகிவிடுவதாகச் சூளுரைத்த அவர், பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த தன்னை பாஜக பழிவாங்குவதாகவும் அவமதிப்பதாகவும் கூறியது பாஜகவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹேமந்த் கைதுசெய்யப்பட்டது தொடர்பான செய்தியில், ‘அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல மீண்டும் காட்டுக்குத்தான் போக வேண்டியிருக்கும்’ என்று பாஜக ஆதரவு ஊடகர் ஒருவர் நேரலையிலேயே பேசியது பெரும்சர்ச்சையானது. இதையும் தனது பேச்சில் சுட்டிக்காட்ட ஹேமந்த் தயங்கவில்லை.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக்கியதன் மூலம்,இந்தியாவின் மக்கள்தொகையில் 8.6%ஆக இருக்கும்பட்டியல் பழங்குடி மக்களின் ஆதரவைப் பெற முடியும்என்று நம்பியிருந்த பாஜக, ஹேமந்த் சோரனின் பேச்சால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ராகுல்காந்தி மேற்கொண்டுவரும் ‘நியாய யாத்திரை’பயணத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகளுக்கு இடையே அசெளகரியமான சூழல் நிலவும் நிலையில், ஜார்க்கண்டுக்கு அவர் சென்றிருந்த நேரத்தில்எதிர்க்கட்சிகளுக்குத் தெம்பளிக்கும் இந்நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன.
தேர்தல் கணக்கு: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, பழங்குடி மக்களின் ஆதரவு பெரும்பாலும் ஜேஎம்எம் கட்சிக்குத்தான். 2014 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றபோதுதான் முதன்முறையாக பழங்குடியினர் அல்லாத ஒருவர் (ரகுவர் தாஸ்) அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். ஆனால், 2019 தேர்தலில் பாஜகவை வீழ்த்திமீண்டும் ஹேமந்த் சோரன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் கதையே வேறு. 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் நான்கே இடங்களில் போட்டியிட்டது ஜேஎம்எம் (எஞ்சியவை காங்கிரஸுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் அளிக்கப்பட்டன).
அந்தத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில்தான் ஜேஎம்எம் வெல்ல முடிந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 12 இடங்களில் வென்றது - பழங்குடியினருக்கான தனித்தொகுதிகள் உள்பட.
ஆக, மக்களவைத் தேர்தலில் பழங்குடியினரின் வாக்குகளைப் பாஜகவுக்கு எதிராகத் திரட்டுவது ஜேஎம்எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அவ்வளவுஎளிதாக இருக்காது. தவிர, தற்போது ஜேஎம்எம் கட்சிக்குக் கிடைத்திருக்கும் அரசியல் முக்கியத்துவத்தால், மக்களவைத் தேர்தலின்போது தொகுதிப் பங்கீட்டில் அக்கட்சி முன்பைவிட அதிக இடங்களை எதிர்பார்க்கக்கூடும். இண்டியா கூட்டணிக்கு அதுவும் சிக்கலாகலாம்.
விழித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள்: ஒருவேளை ஜேஎம்எம் அரசு வீழ்ந்துவிட்டால், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தி - ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பாஜக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், இன்னும் சில மாதங்களில் ஜேஎம்எம் ஆட்சியே முடிவுக்கு வரவிருப்பதால், அக்கட்சியின் எம்எல்ஏ-க்களைக் கவர்ந்திழுப்பதில் பாஜக ஆர்வம் காட்டவில்லை என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி, இந்த முறை ஜேஎம்எம் தனது எம்எல்ஏ-க்களைக் ‘காபந்து’ செய்த விதம் கவனத்துக்குரியது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியான கையோடு தங்கள் எம்எல்ஏ-க்களைப் பாஜகவின் பாசவலையிலிருந்து பாதுகாக்க, காங்கிரஸ் ஆட்சியின்கீழ் இருக்கும் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்துக்கு அனுப்பியது கட்சித்தலைமை.
பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள்கள்அவகாசம் தரப்பட்டிருந்தாலும், இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் சம்பய் சோரன் முன்வந்ததற்கு, பாஜகவின் ‘ராஜதந்திர’த்தின் மீதான அச்சம்தான் காரணம் என்கிறார்கள்.
இதற்கிடையே, பிப்ரவரி 12 அன்று பிஹார் சட்டமன்றத்தில் நம்பிக்கைவாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கும் சூழலில், தேசியஜனநாயகக் கூட்டணிக்குப் போதிய பலம் இருக்கும்நிலையிலும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது; “காங்கிரஸுக்குத் தனது உறுப்பினர்கள் மீதே நம்பிக்கை இல்லை” என்று பாஜக பகடி செய்யவும் வழிவகுத்திருக்கிறது.
பிற அஸ்திரங்கள்: ஒரே பான் எண்ணுடன் ஆயிரக்கணக்கானோரின் பெயரில் கணக்குகள் இணைக்கப்பட்டது, கேஒய்சி விதிமுறைகள் முறையாகப்பின்பற்றப்படவில்லை என்பன உள்ளிட்ட புகார்கள்காரணமாக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குஉள்ளாகியிருக்கும் பேடிஎம் நிறுவனத்தை வைத்துஎதிர்க் கட்சிகள் பாஜகவை விளாசத் தொடங்கிவிட்டன.
2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், பிரதமர் மோடியின் படத்துடன் பேடிஎம் நிறுவனத்தின் விளம்பரம் முன்னணி நாளிதழ்களில் வெளியானது குறித்த தகவல்களையும், பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படங்களையும் செய்தியாளர்களிடம் காட்டி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்.
பாஜகவுடன் இணைய வேண்டும் என்று அழுத்தம்தரப்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், தனது அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் போல தானும் கைதுசெய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தொடர்ந்து பேசிவருகிறார்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் தனது அரசுமேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்துவருவதாகவும் அவர் விமர்சிக்கிறார்.
அமலாக்கத் துறையின் அழுத்தத்துக்கு அடிபணியப்போவதில்லை என்று அர்விந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அணிதிரளத் தொடங்கிவிட்டனர்.
சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில், “ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பது தார்மிக ரீதியில் பாஜகவை நெருக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, 370 இடங்களில் பாஜக வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், கனவு காண்பது அவரவர் உரிமை என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்திருக்கின்றன.
வழக்கமாக சாதி அரசியலில் நம்பிக்கை இல்லை என்று அழுத்திப் பேசும் மோடி, “நான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவன் என்பது எதிர்க்கட்சிகளின் பார்வையில் படவில்லையா?” என்றுநாடாளுமன்றத்தில் பேசியது அவரது பதற்றத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இரண்டாம் சுற்றில் சுறுசுறுப்படைந்திருக்கும் எதிர்க்கட்சிகள், பாஜகவுக்கு எதிரான அரசியலை எப்படி முன்னெடுக்கப்போகின்றன என்பதைப் பொறுத்துதான் ‘இண்டியா’வின் எதிர்காலம் அமையும்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in