

ரா
ஜஸ்தான் மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கும் நடந்த இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பது ஆளும் பாஜகவுக்குப் பெரிய தர்மசங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணங்களைக் கட்சியின் மூத்த தலைவர்கள் விவாதித்துவருகின்றனர். கட்சிக்குள் கணிசமானவர்களின் எதிர்ப்பு, பெரும்பாலான மக்களுடைய அதிருப்தி ஆகியவற்றைச் சம்பாதித்துள்ள முதல்வர் வசுந்தராவுக்குத் தவறுகளைத் திருத்திக்கொள்ள மிகக் குறைந்த அவகாசமே இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும்.
வசுந்தராவின் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கூடி தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிட்டனர். இந்த மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜபுத்திரர்கள் சமூகம் அறிவித்தது. ‘பத்மாவத்’ திரைப் படத்தைத் தடைசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் தவறிவிட்டதால், பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று ராஜபுத்திர அமைப்புகள் அறிவித்தன. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல் ஆகியவை யும் ஆதரவு சரிந்ததற்குக் காரணங்கள்.
ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.50,000 வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தபடி செய்யவில்லை என்று விவசாயிகளும் அதிருப்தி யில் ஆழ்ந்துள்ளனர். ஷெகாவதி பகுதியில் விவசாயிகள் 13 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடத்திய பின்னர் நியமிக்கப்பட்ட குழு, இன்னமும் தன்னுடைய பரிந்துரைகளை அரசிடம் தெரிவிக்கவில்லை. இந்தக் குழு கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று அங்கு விவசாயிகளின் பிரச்சினைகள் எப்படித் தீர்க்கப்படுகின்றன என்று ஆராய்ந்தது.
பாஜக தொண்டர்களில் ஒரு பிரிவினருக்கு வசுந்தராவின் அணுகுமுறைகள் பிடிக்கவில்லை. அவர்கள் முன்னாள் அமைச்சரும், புரட்சிக்காரருமான கன்ஷியாம் திவாரி தொடங்கியுள்ள ‘தீன்தயாள் வாஹினி’ என்ற அமைப்பில் சேர்ந்துள்ளனர். மாநில அமைச்சரவையில் தன்னைச் சேர்க்கவில்லை என்பதால், கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார் திவாரி. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சித் தலைமையை அவர் கடுமை யாக விமர்சித்துவருகிறார். மாநிலத்தின் ஊழல் ஆட்சிக்கு மத்தியத் தலைவர்கள் கேடயமாக இருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டிய திவாரி, கட்சிக்கு இப்படியொரு படுதோல்வி கிடைத்த பிறகும், வசுந்தரா ஏன் இன்னமும் முதலமைச்சராகப் பதவி யில் நீடிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார்.
அல்வார், அஜ்மீர் மக்களவைத் தொகுதியிலும் மண்டல்கர் சட்டப் பேரவைத் தொகுதியிலும் பாஜக தோற்றதற்குக் காரணங்கள் பல. வியாபாரிகளிடையே ஜிஎஸ்டி மீது ஏற்பட்ட வெறுப்பு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை கெட்டுவருவது, ஊழல் அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்படாமலிருக்க வசுந்தரா கொண்டுவந்த பாதுகாப்பு மசோதா, இடஒதுக்கீடு தொடர்பாகவும் வேறு விஷயங்களிலும் கட்சியின் நிலை யைக் கண்டிக்கும் விதமாக குஜ்ஜார்கள், பிராமணர்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது ஆகியவை முக்கிய மானவை.
நகர்ப்புற வாக்காளர்களே இம்முறை பாஜகவுக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட அஜ்மீர் நகரிலேயே வடக்குப் பகுதியில் 6,975 வாக்குகள் வித்தியாசத்திலும் தெற்குப் பகுதியில் 13,070 வாக்குகள் வித்தியாசத்திலும் கட்சி தோற்றிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், ஜிஎஸ்டி வரியால் தங்களுக்கு வியாபாரம் குறைந்ததாலும், வரி விண்ணப்பங்களை நிரப்புவது சிக்கலாக இருப்பதாலும் ஏற்பட்ட கோபத்தால் வியாபாரிகள் ஆதரிக்கவில்லை.
வசுந்தரா ராஜே முதலமைச்சரான 2013 முதலே ஆர்எஸ்எஸ் அவரிடமிருந்து ஒதுங்கியே நிற்கிறது. இப்போது நடந்த இடைத்தேர்தலின்போதுகூட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் களத்தில் இல்லாதது எல்லோராலும் உணரப்பட்டது. வாக்காளர்களைத் திரட்டும் வேலை எதிலும் ஆர்எஸ்எஸ் ஈடுபடவில்லை. 2013 சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்வில் ஆர்எஸ்எஸ்ஸைப் புறக்கணித்தார் வசுந்தரா. அத்துடன் ஜெய்ப்பூரில் சில ஆலயங்களை அவை இருந்த இடங்களிலிருந்து அகற்றினார். இதனால், ஆர்எஸ்எஸ் தொண்டர் களுக்கு அவர் மீது அதிருப்தி அதிகமானது.
இடைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி மிகுந்த ஒற்றுமையுடன் செயல்பட்டது. அதன் மாநிலத் தலைவர்கள் அனைவரும் இணைந்தனர். பாஜகவின் கொள்கை களையும் திட்டங்களையும் பட்டியலிட்டு, அதனால் மக்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைக் கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் உட்பட அனைவரும் பிரச்சாரம் செய்தனர். மக்களில் வெவ்வேறு பிரிவினருக்கு பாஜக மீது இருந்த கோபத்தையும் அதிருப்தியையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
அல்வார், அஜ்மீர் தொகுதிகளில் வெவ்வேறு சாதிகளிடையே புதிய கூட்டணியை காங்கிரஸ் ஏற்படுத்திக்கொண்டது. கால்நடைகளை வளர்க்கும் விவசாயி களையே பசு குண்டர்கள் தாக்கியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அஜ்மீர் தொகுதியில் போட்டி சச்சின் பைலட் - வசுந்தரா ராஜே இடையே என்று சொல்லுமளவுக்குப் பிரச்சாரங்கள் அமைந்தன.
தமிழில்: சாரி,