

அக்கினிப் பிரவேசம் என்கிற தொன்ம நிகழ்வு சீதையுடன் தொடர்புடையது. பூமியின் மகளான சீதையே, தன் கற்பை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறாள். கம்பராமாயணத்தின் ‘மீட்சிப் படலம்’ சீதையின் அக்கினிப் பிரவேசம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறது. சீதையைப் போன்று ஆதிரையும் தன் கணவன் இறந்துவிட்டான் எனக் கருதி, தன் பதிவிரதைத் தன்மையை நிறுவ அக்கினிப் பிரவேசம் செய்தாள். கண்ணகி கற்பின் நெருப்பை மதுரையை எரிக்கப் பயன்படுத்திக் கொண்டாள். இன்றும் பெண்கள் தங்கள் ஒழுக்கத்தை நிறுவக் கோயில் முன்பு நெருப்பை அணைக்கின்றனர். கற்புக்கும் நெருப்புக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்துவருகிறது. ஜெயகாந்தன்தான் கற்பை நிரூபிக்க நெருப்புக்கு மாற்றாக நீரை முன்வைத்தார். பெண்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நீரே போதும் என்றார்.
ஜெயகாந்தன், 1966ஆம் ஆண்டு ‘ஆனந்த விகட’னில் ‘அக்கினிப் பிரவேசம்’ என்றொரு கதை எழுதினார். சீதைக்கு நடந்த அக்கினிப் பிரவேசத்தின் மீது மிகப் பெரிய மீள் வாசிப்பை நிகழ்த்திய கதை இது. கல்லூரியை விட்டுப் பேருந்துக்காகக் காத்திருக்கும் இளம்பெண் ஒருத்தி, முன்பின் தெரியாத ஒருவனின் உதவியை நம்பி காரில் ஏறுகிறாள். வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. அந்த இளைஞன்மீது இவளுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தாலும், காலம் காலமாகப் பின்தொடரும் கற்பு சார்ந்த விழுமியங்கள் அவளுக்குள் மனத்தடையை ஏற்படுத்துகின்றன. நடுக்கத்துடன் அவனை எதிர்கொள்கிறாள். களங்கத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறாள். மகளின் உண்மை நிலை அறிந்த அவளுடைய ஏழைத் தாய், தண்ணீரை மகள்மீது கொட்டி அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். இயல்பான வாழ்க்கைக்கு அப்பெண் திரும்புகிறாள். இச்சிறுகதை வெளிவந்தபோது பெண்களிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இக்கதையின் முடிவுமீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜெயகாந்தன் இக்கதையை விரிவாக்கி, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கங்கை எங்கே போகிறாள்’ என்று அடுத்தடுத்து நாவல்களாக எழுதினார்.
இக்கதையின் நாயகன் இந்திரனின் நவீன வடிவம். அந்தப் பெண்ணைக் கம்பனின் அகலிகையாகக் கருதுவதற்கு இடமிருக்கிறது. கம்பராமாயணக் கதையில் கௌதம முனிவரின் உருவத்துடன் இந்திரன் அகலிகையைக் கூடுகிறான். ஒரு கட்டத்தில் அகலிகைக்கு இந்த உருவம் கௌதமன் இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் இந்திரனால் கிடைக்கும் இன்பத்தை மனமுவந்து அகலிகை ஏற்றுக்கொள்கிறாள் என்று கம்பர் எழுதியிருக்கிறார். ‘அவளது கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பது போல் இப்போது அவளது கரங்கள் அவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன’ என்று ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். இந்திரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள், அவனுக்குக் கிடைத்திருக்கும் வசதிகள் பல பெண்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்யக் காரணமாக இருந்திருக்கின்றன. இக்கதையின் நாயகனும் அப்படித்தான் தன்னை உணர்கிறான். ‘தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே, தன்னை எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது’ என்கிறான். இவனது பெரிய கார், இந்திரனின் வாகனமான ஐராவதத்தின் குறியீடு.
அகலிகை, கௌதமரால் சாபம் பெற்றவள். ‘அந்தப் பெண்ணின் அம்மா சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் பார்த்தாள்’ என்றும் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். இந்தப் பெண்ணின் தோற்றம் அப்படியே அகலிகையை ஒத்திருக்கிறது. ஆனால், கதையின் முடிவு சீதையின் அக்கினிப் பிரவேசத்துடன் தொடர்புடையது. ஜெயகாந்தன் இந்த இடத்தில்தான் தொன்மத்தை நவீனப்படுத்துகிறார்.
கௌதமரைப் போன்று சாபம் தரவில்லை; ராமனைப் போன்று நெருப்பில் இறங்கித் தன் தூய்மையை நிரூபிக்கச் சொல்லவில்லை. யதார்த்தத்தில் என்ன சாத்தியமோ அதனைச் செய்திருக்கிறார். நெருப்பைத் தலையில் கொட்டினால் மட்டும் இவளது களங்கம் போய்விடுமா என்று அவளது அம்மா யோசிக்கிறாள். சீதையின் மீதான சந்தேகம் அவள் அக்கினிப் பிரவேசம் செய்த பிறகும் முற்றாகப் போய்விடவில்லை என்பதுதான் உண்மை. இந்தப் பெண்ணோ, குழந்தை. அவள் மனம் தூய்மையானது. அவள்மீது கொட்டிய நீர் அவள் உடல் அழுக்கையும் அடித்துக்கொண்டு போய்விடுகிறது என்று முன்வைத்திருக்கிறார் ஜெயகாந்தன்.