சென்னைப் புத்தகக் காட்சியின் முன்னோடிகள்

சென்னைப் புத்தகக் காட்சியின் முன்னோடிகள்
Updated on
2 min read

மார்கழி இசை நிகழ்ச்சிகள், திருத்தலப் பயணம், கிறிஸ்துமஸ்-புத்தாண்டு வரிசையில் சென்னைப் புத்தகக் காட்சியும் சேர்ந்துவிட்டது. இந்திய அளவில் நடைபெறும் புத்தகக் காட்சியில் இரண்டாவது மிகப் பெரியது இதுதான்; சென்னையில் நடத்தப்பட்டாலும், தமிழகம் முழுமைக்குமான பண்பாட்டு நிகழ்வாகவே கருதப்படுகிறது. 47 ஆண்டுகளாக நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் கே.கிருஷ்ணமூர்த்தி, கே.வி.மேத்யூ உள்ளிட்ட முன்னோடிகள்.

நூல் வெளியீட்டாளர் கே.கிருஷ்ணமூர்த்தி இன்று நம்மிடையே இல்லை. அவருடைய மகன் சீனிவாச மூர்த்தி, புத்தகக் காட்சிக்கான கள வேலைகளில் முன்னின்றவர். அவருக்குத் தற்போது 70 வயது. சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டது குறித்த செய்திகளைச் சீனிவாச மூர்த்தி பகிர்ந்துகொண்டார்: “புகழ்பெற்ற பதிப்பகமான ‘ஆசியா பப்ளிஷிங் ஹவுஸ்’ நிறுவனர் பீட்டர் ஜெயசிங், சென்னையைச் சேர்ந்த பதிப்பாளர்கள் ஓர் அமைப்பின் கீழ் திரளும் யோசனையை முன்வைத்தார். 1953இல் இந்தியப் பதிப்பாளர்-புத்தக விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக அவரது வழிகாட்டல் முக்கியக் காரணம். இதன் தொடர்ச்சியாக 1954இல் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) தோன்றியது. ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனத்தின் சங்கரநாராயணன், மேக்மில்லன் பதிப்பக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.ஐ. பதிப்பக மேலாளர் கே.வி.மேத்யூ, சேஷாசலம் அண்ட் கம்பெனியை நடத்திய எம்.என்.ராவ், ஓரியண்ட் லாங்மேன் நிர்வாகியான அப்துல்லா, ஆக்ஸ்போர்டு பதிப்பகத்தை நிர்வகித்த பார்த்தசாரதி, ஈஸ்ட் வெஸ்ட் பதிப்பகத்தைச் சேர்ந்த பத்மநாபன், மெர்க்குரி பப்ளிஷர்ஸைச் சேர்ந்த டி.வி.எஸ்.மணி, பொன்னுசாமி, என் தந்தை கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இந்த அமைப்பை நிறுவினார்கள். ஏறக்குறைய 20 பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

நூல்களுக்குத் தள்ளுபடி விலை, வெளிநாட்டு கரன்சி மதிப்பில் நூல் வாங்குவது, நூல் அச்சிடுவதற்கான தாள் விலை, இறக்குமதி, நூலகத்துக்கான புத்தகக் கொள்முதல் ஆணைகளைப் பெறுவது தொடர்பாகப் பதிப்பாளர்கள் கலந்துபேச வேண்டிய சில தேவைகள் இருந்தன. பதிப்பாளர்களுக்கிடையே தொழில் நோக்கிலான கருத்துவேறுபாடுகளும் அவ்வப்போது எழும். அவற்றுக்கெல்லாம் தீர்வு காண உறுப்பினர்கள் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அப்போது புதுடெல்லியில் உலகப் புத்தகக் காட்சி தொடங்கியிருந்தது. சென்னையைச் சேர்ந்த பதிப்பாளர்களும் அதில் பங்கேற்றனர். இந்தச் சூழலில் சென்னையிலும் ஒரு புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது. புத்தக விற்பனைத் தொழிலுக்கு உடனடி வாடிக்கையாளர்கள் எவ்வளவு தேவையோ, அதேபோலப் புதிய வாசகர்களை உருவாக்குவதும் அவசியம். நீண்ட நாள்களாகத் தேக்கம் அடைந்துள்ள புத்தகங்களை விற்றாக வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. இதன் அடிப்படையில்தான் சென்னைப் புத்தகக் காட்சி 1977இல் தொடங்கப்பட்டது. அப்போதைய தமிழக அரசு இம்முயற்சிக்கு ஆதரவளித்தது. அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்துக்குள் செயல்பட்டு வந்த மதரஸா-இ-ஆஸம் பள்ளியில் இடம் அமைந்தது. பள்ளி நிர்வாகம் வாடகை எதுவும் வசூலிக்கவில்லை. ஏறக்குறைய 100 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட ஒரு கூடம் இதற்காக ஒதுக்கப்பட்டது. 20 அரங்குகள் அமைக்கப்பட்டன. அரங்குக்குப் பதிப்பாளர்களிடமிருந்து வாடகை பெறப்பட்டது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கில நூல் பதிப்பாளர்களே. நூல்கள் விற்குமோ விற்காதோ என்ற ஐயத்தில் தமிழ்ப் பதிப்பாளர்கள் அரங்கு எடுக்கத் தயங்கினர். எனவே, அவர்களுக்குக் குறைவான வாடகை நிர்ணயிக்கப்பட்டது. வானதி பதிப்பகம் புத்தகக் காட்சியில் பங்கேற்றது.

புத்தகக் காட்சி குறித்த செய்திகளை எல்லா நாளிதழ்களும் பத்திரிகைகளும் வெளியிட்டன. ‘தி இந்து’ நாளிதழ், செய்தியோடு இலவச விளம்பரங்களையும் வெளியிட்டது. அப்போதைய கல்வித் துறை அமைச்சர் அரங்கநாயகம் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார். புத்தகக் காட்சி, வெறுமனே பொழுதைக் கழிக்க நினைப்பவர்களுக்கான இடமாகிவிடக் கூடாது; வாசகர்கள் மட்டும் வந்தால் போதும் எனப் பதிப்பாளர்கள் நினைத்ததால், நுழைவுக் கட்டணம் 50 காசு என நிர்ணயிக்கப்பட்டது. 10 நாள்கள் நடந்த நிகழ்வுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் வந்திருப்பார்கள். நாவல்கள் அதிகளவில் விற்பனையாகின. குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பலர் வந்திருந்தனர்.

புத்தகக் காட்சி இப்படித் தொடர்ந்த நிலையில், பதிப்பாளர் ஒருவர் சிறுநீரகக் கோளாறால் அகால மரணம் அடைந்தார். அவரது பதிப்பகத்தை மூட வேண்டிய நிலை. அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில், ஒரு புத்தகக் காட்சிக்கான நுழைவுக் கட்டணத் தொகையில் பாதி, அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதிலிருந்து புத்தகக் காட்சியின் வருவாயில் குறிப்பிட்ட பகுதியைத் தேவைப்படுவோருக்கு உதவி செய்யச் செலவிடும் முறை தொடங்கியது. தற்போது சென்னைப் புத்தகக் காட்சி, ஒரு முக்கியமான கலாச்சார நிகழ்வாக மக்கள் மனங்களில் இடம்பிடித்துவிட்டது. அதைத் தொடங்கியவர்களின் அடிப்படை விருப்பம் இதுதான்” என்றார் சீனிவாச மூர்த்தி.

பிப். 4: கே.வி. மேத்யு பிறந்தநாள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in