Published : 16 Feb 2018 08:53 AM
Last Updated : 16 Feb 2018 08:53 AM

முடிவுக்கு வருமா காவிரியின் சோகக் கதை?

கா

விரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. தலைமுறை களாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்று தமிழகமே காத்திருக்கிறது. காவிரி நீர்ப் பங்கீடு தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் மட்டுமேயான சிக்கல் இல்லை. கேரளத்துக்கும், புதுச்சேரிக்கும் நீராதாரத்தில் பங்கு உண்டு. காவிரியில் ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் எவ்வளவு நீர் உருவாகிப் பெருகுகிறது என்ற அடிப்படையில், காவிரி நீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் 2007-ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பாயம் 1901 முதல் 1972 வரை ஆண்டுதோறும் காவிரியில் உற்பத்தியாகும் நீர்வரத்து குறித்து ஆராய்ந்தது. அந்த விவரங்களிலிருந்து, வழக்கமான மழையளவில் 50% மட்டுமே பெய்தால்கூடக் குறைந்தபட்சம் காவிரியில் 740 டி.எம்.சி. தண்ணீர் வரத்து இருக்கும் என்று கண்டறிந்தது.

தமிழ்நாட்டில் கீழ் அணைக்கட்டு வரை காவிரியில் பாயும் மொத்த, குறைந்தபட்ச நீரின் அளவு 740 டி.எம்.சி. அளவு என்று தீர்ப்பாயத்தால் கணக்கிடப்பட்டது. இந்த ஒட்டுமொத்த நீர் அளவைக் கொண்டு, தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளத்துக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., மீதமிருக்கும் 14 டி.எம்.சி. இயற்கை வளத்துக்காக என்று தீர்ப்பாயம் பங்கிட்டது. மேலும், தமிழகத்துக்கு கர்நாடகம் 192 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்றும், மாத வாரியாக எவ்வளவு திறக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உத்தரவை வெளியிட்டது.

பங்கீட்டு முறை

ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதத்தில் 50 டி.எம்.சி., செப்டம்பர் மாதத்தில் 40 டி.எம்.சி., அக்டோபர் மாதத்தில் 22 டி.எம்.சி., நவம்பர் மாதத்தில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 2.5 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அது இன்றும் முடிந்த பாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்களில் ஒரு குழப்பம் ஏற்படலாம். 50% பருவ மழை பெய்தால், காவிரியில் மொத்தம் 740 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் என்கிறது கணிப்பு. அந்த 740 டி.எம்.சி. நீர் முழுவதும் கர்நாடகத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலிருந்து காவிரிக்குக் கிடைக்கும் என்கிற அடிப்படையில் இல்லை. காவிரி நீரில் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி., தமிழ்நாட்டின் பங்காகக் கொடுக்க வேண்டியது. மேலும் 192 டி.எம்.சி. என்றால், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து காவிரியில் நீர்வரத்து 462 டி.எம்.சி. என்று அர்த்தம். தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து கிடைக்க வேண்டிய 419 டி.எம்.சி.யில் கர்நாடகத்திலிருந்து 192 டி.எம்.சி. கிடைக்கிறது என்றால், மீதம் 277 டி.எம்.சி. தமிழகத்தில் பெய்யும் பருவ மழையால், தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து காவிரி யில் சேரும் நீரின் மூலமாகவே கிடைக்கிறது.

தமிழ்நாடு (277 டி.எம்.சி.), கர்நாடகம் (462 டி.எம்.சி.) நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து 689 டி.எம்.சி. நீர் காவிரிக்குக் கிடைத்தால், கேரள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து 51 டி.எம்.சி. நீர் காவிரிக்குக் கிடைக்கிறது. அதிலிருந்து கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீர் பகிரப்படுகிறது. மிச்சம் 7 டி.எம்.சி. நீர் புதுச்சேரிக்கும், 14 டி.எம். சி. நீர் இயற்கை வளத்துக்கும் கிடைக்கிறது. இதுதான் காவிரி நீர்ப் பங்கீட்டுத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள பங்கீட்டு முறை.

காவிரியில் கர்நாடகப் பகுதியில் பெறப்படும் நீர், மேற்குத் தொடர்ச்சி மலை காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஹசன், கூர்க், மைசூரு போன்ற பிரதேசங்களின் வழியே தென்மேற்குப் பருவமழை மூலமாகக் கிடைக்கிறது. இந்தப் பருவமழை ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்தப் பருவமழை நீர், கேரளத்தில் பெய்யும் பருவ மழையால், அதன் நீர்ப்பிடிப்புப் பகுதி களிலிருந்து காவிரியில் சேர்கிறது. அதனால், கேரளத்துக்கும் காவிரி நீரில் பங்கு இருக் கிறது. மலையிலிருந்து கீழே சமவெளியில் காவிரி நதி இறங்கிய பின் பெரும்பாலும் தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையில் வரும் நீரும் காவிரியில் சேர்கிறது. இப்படி பருவ மழையினால் காவிரியில் வந்து சேரும் நீரின் அளவு 227 டி.எம்.சி. இது கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு நீரை (192 டி.எம்.சி.) விட அதிகம்.

மேலாண்மை வாரியம் எப்போது?

தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை இவை பொய்த்தாலோ, குறைந்தாலோ தமிழகத்துக்கு காவிரியிலிருந்து கிடைக்கும் நீர் மிகவும் குறைந்துவிடுகிறது. அதேசமயம், குடகில் தென்மேற்குப் பருவ மழையும் குறைந்தால், நீர்ப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிறது. அந்தச் சமயத்தில்தான் தமிழகத்துக்குத் தர வேண்டிய பங்கைக் கைவிரிக்கிறது கர்நாடகம். அந்த நேரங்களில் தமிழகம் தண்ணீருக்காகப் போராட வேண்டியிருக்கிறது.

காவிரி நீரைத் தீர்ப்பாயம் கூறியவாறு பங்கீடு செய்ய காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. 2016 அக். 4-க்குள் மேலாண்மை வாரியத்துக்கு மாநிலங்கள் தமது உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தான் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கியவுடன், காவிரி நீர் மேலாண்மையை அமைக்கும்படி பணித்த தன்னுடைய ஆணையை நிறுத்திவைத்திருக்கிறது.

மேலும் சிக்கல்கள்

இந்நிலையில்தான் கர்நாடக அரசு, காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் ஏறக்குறைய ரூ. 6,000 கோடியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட முடிவுசெய்துள்ளது. முக்கியமாக பெங்களூரு நகரத்துக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இந்த அணை கட்டப்படுவதாகவும், தமிழகத்துக்குத் தர வேண்டிய 192 டி.எம்.சி. பங்கு நீரை தருவதற்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல், இந்த அணை கட்டப்படும் என்று கர்நாடகம் கூறுகிறது.

இந்த அணை 64 டி.எம்.சி. நீரைத் தேக்கும் அளவுக்கு அமையும் என்று தெரிகிறது. ஆனால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீருக்கு எவ்விதப் பிரச்சினையும் வராதெனில், மேகதாது அணையின் கட்டுமானத்தைத் தொடரலாம் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். அதனால், தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ச் சச்சரவை இந்த அணை மேலும் சிக்கலாக்கிவிடக்கூடும் என்றே தோன்றுகிறது.

இதற்கிடையில், காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத் தின் தீர்ப்பு நடைமுறைக்கு வராமலேயே தேங்கிக்கிடக்கிறது. அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்றால், மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் தீர்வு எட்டப்படும். மேலாண்மை வாரியத்தை அமைப்பதில், சுணக்கம் காட்டுவதில் அர்த்தமில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி ஹேமாவதி, கபினி அணைகளைக் கட்டியது போலவே, தற்போது மேகதாதுவிலும் பெரிய அணையைக் கட்டி தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரைத் தடுக்க முயற்சிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் உச்ச நீதின்மன்றத் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில் இத்தீர்ப்பு அமைய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினர் எதிர்பார்ப்பும்!

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

வழக்கறிஞர்,

திமுக. செய்தித்தொடர்பாளர்,

தொடர்புக்கு: rkkurunji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x