

பா
ரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊழலில் ஈடுபட்டது தொடர்பான செய்திகளைப் பார்க்கிறேன். கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் அறக்கேடுகளின் ஒரு துளி இது. அறத்தை அப்பியிருக்கிற புற்றுக் கிருமிகள் உருவாக்கிய இந்த அறக் கேடுகள், திடீரென்று இன்றைக்குத் தோன்றிய புறக்கோடுகளும் இல்லை. அதற்கொரு மலினப்பட்ட வரலாற்றுத் தொடர்ச்சியும், கடந்த கால்நூற்றாண்டாக வெளிப்படையாக இருந்துகொண்டேதான் இருக்கிறது. தாராளமயம், உலகமயம், வியாபாரமயம் ஆகியவை அடையாளம் காட்டி யிருக்கிற புதிய பொருளாதாரத்தின் விளைச்சல் இது.
தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் அடுத்தடுத்துத் துணைவேந்தர் தேர்வு நடைபெற்ற 2015-2016 காலகட்டத்தில், துணைவேந்தர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து எல்லா எதிர்க் கட்சிகளும் ஒற்றைக் குரலில் வெளிப்படையாகவே கருத்துகளை வெளியிட்டன. ஆளுங்கட்சி அதற்குக் காதே கொடுக்காதிருந்த ஒரு வரலாற்றுப் பொழுதில்தான், நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பரிந்துரைக் குழுவில் ஓர் உறுப்பினராகச் செயல்படத் தொடங்கினேன். அதில் நான் எதிர்கொண்ட பிரச்சினைகள், கூட்டுநரின் அதிகார முறைகேடுகள், அது தொடர்பான எனது மேல்முறையீடுகள் தொடர்பாக, ‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழிகூறும் திசை காட்டிகளும்’ எனும் நூலில் (செப். 2017) எனது அனுபவங்களை முழுமையான ஆவணங்களுடன் பதிவுசெய்திருக்கிறேன்.
பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து வேறு சில பல்கலைக்கழகங்களும் இன்றைக்குப் பதில் சொல்ல வேண்டிய பட்டியலில் உள்ளன என்றே சொல்ல வேண்டும். இன்னமும் மாட்டிக்கொள்ளாததால் மற்ற அனைவரும் குற்றமற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது.
கைதுசெய்யப்பட்டிருக்கும் கணபதி, பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரித் தொழில் நுட்பத்துறை தலைவராயிருந்து, அதன்பின் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரானவர். திறமைக் குறைவு என்று சொல்ல முடியாது அவர் துறையில்! ஆனால் அந்தக் கல்வி, நேர்மைக் குமுறலை, கல்வி அறத்தை அவருக்கு ஊட்டவில்லை என்றால், அந்தக் கல்வியின் சமூகத் தேவையின் பொருள்தான் என்ன? எங்குதான் பிரச்சினை?
கஞ்சிக்கு வழியின்றிக் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களா இவர்கள்? இவர்களுக்காகப் பணத்தைக் கொட்டிக் கொடுக்க அவரவர் சாதிய நிறுவனங்களும், அதற்குரிய தொழிலதிபர்களும் என்ன அரசியல் லாபத்துக்காக இவர்களை வைத்துச் சொக்கட்டான் ஆடுகின்றனர்? இவர்களின் செயலில் நேர்மை, அறம், துளியும் இல்லாமல் இருப்பதற்கு, அறத்தேடல், அர்ப்பணிப்பு உணர்வு, சமூகநேயம் இவை குன்றிமணி அளவுகூட இவர்களிடம் இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினை!
துணைவேந்தர் பணி என்பது, தன் தகுதியால் தானாய்த் தேடிவருகிற ஒரு பொறுப்பாயிருக்க வேண்டுமேயொழிய, பிச்சைச் சோற்றுக்காய் ஓடிப்போய் வரிசையில் நின்று பெறுவதல்ல என்பதையாவது இவர்கள் கற்ற கல்வி இவர்களுக்கு உணர்த்த வேண்டாமா? ஒரு பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே துணைவேந்தராக இருந்து எதைச் சாதித்தோம் என்கிற பொறுப்புணர்ச்சி இன்றியே, அடுத்தடுத்த பல்கலைக்கழகங் களுக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகளைத் தேடிச் சிலர் அலைந்துகொண்டிருப்பது தவறு என்பதாவது இவர் களுக்கு உறைக்க வேண்டாமா? துணைவேந்தர் பதவி யின் குத்தகை ஏலத்தை வானுயர உயர்த்தி வழிகாட்டியவர்கள், அதற்கான அறுவடையை அள்ளப்போகிற சமயத்தில், எந்தப் பூனை குறுக்கே வந்து கெடுத்தது என்பதுதான் இன்று அவர்களுக்குள் இருக்கிற ஒரே பிரச்சினை! இதைக் குற்றச் செயலாகவே கருதாதிருக்கிற அவலமும், அதற்குச் சாதிய வன்மம், அமைச்சரின் காய்நகர்த்தல் என்று புதிய புதிய மேற்பூச்சு வண்ணங்கள் அதன்மேல் கட்டவிழ்க்கப்படுவதும் அதிர்ச்சி தரத்தக்கதாயிருக்கிறது. இதில் உண்மை இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால், எந்தக் குரலும், கல்வி அக்கறை சார்ந்த, மக்கள் மேம்பாட்டுக்கான அவரின் சமூக அர்ப்பணிப்பை, அறக் காப்பாக முன்மொழியவில்லை என்பதே உண்மை. இது, ஆபத்தானது!
சமூக அக்கறை கொண்ட, கல்விக் குணம் படைத்த அர்ப்பணிப்பாளர்களாக இவர்கள் யாரும் இல்லாததால், சாதி, மதம், அரசியல், பணம் இதுதான் இவர்களை வழி நடத்திக்கொண்டிருப்பதால், எல்லோருக்கும் பொதுவாய், நியாயமாய் அறம் சார்ந்து இயங்க வேண்டிய கல்வி, மருத்துவம், நீதி என்று ஜனநாயகத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பொத்தல்கள் பெருக்கெடுத்தோடுகின்றன. ஆக, நம்பிக்கையுடன் திகழ வேண்டிய அத்தனை ஜனநாயக நிறுவனங்களும் இன்று தன் சுயா தீனத்தை இழந்து, சுயமரியாதை பிறழ்ந்து, நம்பிக்கை சிதிலமடைந்து வலுவிழந்து கிடக்கின்றன என்பதையே இந்த அறத்தாழ்வு நமக்குக் காட்டுகிறது. இந்நிலையில், எங்கிருந்து இந்தப் பிரச்சினையை அணுகுவது?
இவர்கள் யாருமே வானத்திலிருந்து குதித்து வந்தவர் கள் அல்லர். இங்கிருக்கிற இன்றைய பேராசிரியர்தான் நாளைய துணைவேந்தர். இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நிகழ்ந்த பணி நியமனங்கள் பெரும்பான்மையும் பணம் கொடுத்து வந்ததாய்த்தான் இருக்கும். இல்லை என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் திறன் கொண்டவர்கள் சொற்பமானவர்கள் மட்டுமே இருப்பர். துணைவேந்தரின் அற இழிவுக்குத் துணை போகிறவர்களாகத்தான் அவருக்குப் பக்கபலமாய் இருக்கிற பேராசிரியர்களும் பேரவை அமைப்புகளும் இருக்கின்றன.
இவர்கள் கொடுத்து உள்நுழைந்த பணத்தை எடுக்க, பல்கலைக்கழகங்களின் கல்விப் பணிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். முனைவர் பட்டம் பெற, வழிகாட்டி யின் அனுமதிக் கையெழுத்துக்கு, இன்றைய நிலவரப்படி, மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை விலை போகிறது என்பதுதான் வேதனை. என்ன ஆவார் அந்த ஆய்வு மாணவர்? அவரின் அறச் சார்பு என்னவாகும்? என்னவொரு வசதியைச் செய்துதந்திருக்கிறது பல்கலைக்கழக நிறுவனம்? வாய்மொழித் தேர்வுக்கும் ஓர் ஆய்வு மாணவர் குறைந்தபட்சம் மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சம்வரை - வரும் பேராசிரியருக்கு விமானக் கட்டணம், மூன்று நட்சத்திர விடுதியில் தங்கும் அறை, இத்யாதி பரிசுப் பொருட்கள், விருந்துச் செலவு என்று செலவிட வேண்டியிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலை!
ஆய்வேடு மதிப்பிடும் தேர்வாளர்களுக்குள், பெரிய வலைப்பின்னல், பணத்‘திரை’யால், மறுஉபசாரம் செய்யும் ‘முறை’யால், கண்டுகொள்ளும் ‘வரத்’தால் அவர்களுக்குள் பின்னப்பட்டிருக்கிறது. இந்த முறையில் வளர்ந்துவரும் இவர்கள்தான், ஐபிஎல் ஏலம்போல், ஆனால் வெளிச் சொல்ல முடியாத பணத்தால், துணைவேந்தர்களாகின்றனர். இவர்களால் உருவாக்கப்படும் ஆய்வு மாணவர்களின் கதி - அவர்களின் எதிர்காலம் - குட்டித் துணைவேந்தர்களாகக் கால எந்திரம் அவர்களை உருவாக்கிக் கொடுத்துக் கெடுத்துவிடும். தகுதி, திறமை, சமூக அர்ப்பணிப்பு, அறத் தேட்டம், தொலைநோக்குக்குச் சிறிதும் இடமின்றி, பணம், சாதி மதம், அரசியல் செல்வாக்கு ஆகியவை தொடர்ந்து இன்னொரு தலைமுறையையே காவு வாங்கிவிடக் கூடும்!
இதை எவ்விதம் எதிர்கொள்வது? சமூக அர்ப்பணிப்பும் உண்மை உத்வேகமும் அநீதிக்கு எதிரான கோபமும் அறச் சீற்றமும் கொண்ட இளைஞர்கள் - மாணவர் கள் -இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை இழந்துவிட்டால்தான் எதிர்காலம் தள்ளாடத் தொடங்கிவிடும்.
சமூக அக்கறைகொண்ட பெருவெளியில், ஆக்க சக்திகளைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போல், ஜல்லிக்கட்டு எழுச்சி யைப் போல், மாணவர்கள்தாம் தங்கள் எதிர்காலத்தின் உண்மைக்காக, இந்தக் குப்பைக் கூளங்களைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பாய் விளங்கக்கூடியவர்கள். கல்வியின் பிரிக்க இயலாத அங்கமாயிருக்கிற அவர்களின் சத்தியவேட்கையில் மட்டுமே இன்றைய நிலையில் அறத்தூய்மை துலங்கக்கூடும்!
- மு.இராமசாமி,
ஓய்வுபெற்ற நாடகத் துறைப் பேராசிரியர்,
தொடர்புக்கு: dramaswamy.mu@gmail.com