பழைய புத்தகக் கடைகளின் மாணிக்கங்கள்

பழைய புத்தகக் கடைகளின் மாணிக்கங்கள்
Updated on
2 min read

பல்வேறு கலை, இலக்கியம், மருத்துவம், மனித நாகரிகம், வரலாறு என்கிற அற்புத விஷயங்களுடன் வெளிவந்து, இன்று அநேகமாய் இல்லாமல்போன ஆங்கில ‘Home Magazines’ எனப்படும் பத்திரிகைகள் அநேகம். இவை கடைகளில் விற்கப்பட்டவை அல்ல. விமானப் பயணிகளுக்கென அந்தந்த விமானப் போக்குவரத்துக் கழகங்கள் தயாரித்தவை. நட்சத்திர ஓட்டல்கள் இவ்விதமான சிறப்பிதழ்களைக் கொண்டுவந்தன. இவற்றின் பக்கங்களில் பயணம், கோயில் கட்டிடக்கலை, ஓவியங்கள், சிற்பங்கள், இசை, நடனம், நாடகம், திரைப்படம், வரலாறு, மருத்துவம், நாகரிகம் போன்றவை வந்துபோயின.

இந்தியன் ஏர்லைன்ஸ் ‘ஸ்வாகத்’: உள்ளூர் விமான சேவை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் ‘ஸ்வாகத்’ என்கிற மாத இதழைக் கொண்டுவந்தது. இந்தியிலும் பெரும்பகுதி ஆங்கிலத்திலுமாய் வெளிவந்தது. விமானப் பயணிகளின் கவனத்தை நம் நாட்டின் லலித கலைகள், விழாக்கள், காட்டுயிர்கள், பிரபலங்கள்பால் ஈர்த்து, சுற்றுலாத் துறைக்கும் கவன ஈர்ப்பு ஏற்படும் வகையில் இவ்விதழ்கள் கவர்ச்சிகரமான வண்ணப் படங்களால் ஆனவை. இந்தியப் பெருவெளியின் எல்லாச் சுற்றுலாத் தலங்களும் இந்த இதழ்களில் வலம்வந்தவை.

1985 டிசம்பர் இதழில் அடுத்தடுத்து இரு பாகங்களாக பிரிட்டிஷ் நாடக மேதை பீட்டர் புரூக் பற்றியும் அவரது மகாபாரதம் பற்றியுமாக ‘The Mahabharatha - Journey into an epic’ என்கிற நீண்ட அரிய கட்டுரை விஜயா மேதாவால் எழுதப்பட்டு, இந்தியன் ஏர்லைன்ஸின் இதழான ‘ஸ்வாகத்’ வெளியிட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் 2000இல் தர்பண் (darpan) என்ற ஆங்கில இதழையும் கொண்டுவந்தது. இந்திய மகாராஜாக்களின் தற்போதைய வாழ்க்கை, அரண்மனைகளைக் கொண்ட அரிய சிறப்பிதழ் ஒன்றை 2003இல் தர்பண் வெளியிட்டது.

ஏர் இந்தியாவின் ‘நமஸ்கார்’: நமது அரசின் சர்வதேச விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவும் ‘நமஸ்கார்’ என்கிற மாத இதழை மிகச்சிறந்த வடிவமைப்பிலும் உள்ளடக்கத்தோடும் வெளியிட்டு வந்தது. இவை கடைகள் எதிலும் கிடைக்காது. ஆனால், பழைய புத்தகக் கடைகளில் பிரதி மாதமும் கிடைக்கும். மடிப்பாக்கத்தில் நம்மாழ்வார் நாயுடு பழைய பேப்பர் கடையில் பழைய புத்தகங்களும் பத்திரிகைகளும் கிடைத்தன. ‘ஸ்வாகத்’, ‘நமஸ்கார்’ ஆகிய இதழ்கள் கைபடாது அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.

‘தாஜ்’ இதழ்: இந்திய நட்சத்திர ஓட்டல்கள் வெளியிட்டு வந்த பிரமாதமான மாத, காலாண்டிதழ்கள் பழைய புத்தகக் கடைகளில் மட்டுமே கிடைப்பவை. இவற்றில் மிகவும் குறிப்பிட வேண்டியது, அண்ணா சாலை கீதா கபே ஓட்டலை ஒட்டியுள்ள சிவா பழைய புத்தகக் கடை. மிகச் சிறந்த காலாண்டிதழ் ‘தாஜ்’. தாஜ் ஓட்டல் குழுமத்தின் வெளியீடு. அவ்வப்போது சிறப்பிதழ்களும் வெளிவரும். சந்தா செலுத்திப் பெறக்கூடிய இவற்றை சிவா கடையில் கால் விலைக்கு வாங்கியிருக்கிறேன். 80களிலேயே ஒரு இதழ் 25 ரூபாய். தாஜ் சிறப்பிதழ்கள் ஒவ்வொன்றும் 500 - 600 ரூபாய். வண்ணப் படங்களின் தரம் ‘தாஜ்’ இதழில் அற்புதமாயிருக்கும். ஒவ்வொன்றும் அரிய ஓவியம், சிற்பம் என்று கண்ணைப் பறிக்கும். இந்த இதழ், டெல்லிக்கும் கல்கத்தாவுக்கும் தனித்தனியே இரு சிறப்பு மலர்களைக் கொண்டு வந்தது. கல்கத்தா 300 ஆண்டுகள் - 1690 - 1990 என்ற இந்தக் கனத்த - சேபியா நிறப் புகைப்படங்கள் நிறைந்த - இதழ் 1989இல் வெளிவந்தது. தனி விலை 150 ரூபாய்.

சைதாப்பேட்டை பஜார் தெருவில் வர்த்தக கூட்டுறவு சங்க ஓட்டலுக்கு எதிரில் இருந்த பழைய புத்தகக் கடையில் கல்கத்தா சிறப்பு ‘தாஜ்’ இதழை ஒரு ரூபாய்க்கு வாங்கினேன். டெல்லி சிறப்பிதழ் ஒன்றை ரூ.50க்கு அரிய கறுப்பு வெள்ளைப் பதிப்போவியங்கள் மிக்கதாக தாஜ் தயாரித்து வெளியிட்டது. இதில் டி.எஸ்.நாகராஜன், ரகுராய் ஆகிய சிறந்த ஒளிப்படக் கலைஞர்களின் உயர்ந்த கறுப்பு வெள்ளைப் படங்கள் உண்டு. சைதாப்பேட்டை கடையில் இந்த இதழ் எட்டணாவுக்குக் கிடைத்தது.

‘நமஸ்தே’ இதழ்: வெல்கம் ஓட்டல் குழுமம் ‘நமஸ்தே’ என்ற மாத இதழை வெளியிட்டது. சோழா ஷெராட்டன் ஓட்டலின் சார்பில் காலஞ்சென்ற ‘மெட்ராஸ் மியூசிங்க்ஸ்’ ஆசிரியரும் புகழ்பெற்ற சென்னை நகர வரலாற்றாசிரியருமான எஸ்.முத்தையாவின் அரிய கட்டுரைகள் ‘நமஸ்தே’ இதழில் வெளிவந்தன. ஓபராய் சர்வதேச ஓட்டல் குழுமத்தின் சிறந்த காலாண்டிதழ் ‘சோமா’ மிகவும் குறிப்பிடத்தக்கது. 1985-86 காலத்து அரிய சோமா இதழ்களை ஆழ்வார்பேட்டை மர்ரேஸ் கேட் சாலையிலிருந்த மூர்த்தி பழைய புத்தகக் கடையில் எட்டணா வீதம் வாங்கியிருக்கிறேன்.

நமஸ்தே இதழ் 1992லும் 2002 - 2003களிலும் சிறுகதைச் சிறப்பு மலர்களைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மலரும் சைதை பழைய புத்தகக் கடையில் எட்டணா வீதம் கிடைத்தவை. இம்மூன்று மலர்களில் ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், மா.அரங்கநாதன் எழுதிய கதைகள் ஆங்கிலமாக்கப்பட்டு வெளிவந்தன.

இந்த அரிய பொக்கிஷங்கள் பழைய புத்தகக் கடைகளில் மட்டுமே கிடைத்தவை. இவற்றுக்கும் மேலே ஆங்கில ‘தி இந்து’ செய்தி இதழ் 1996 முதல் 2001 வரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ‘FOLIO’ என்ற மிகச் சிறப்பான இலவச இதழைத் தயாரித்து ‘இந்து’ இதழோடு வழங்கிற்று. இவையும் பழைய புத்தகக் கடைகளில் கேட்ட விலையில் கிடைத்தன. ‘இந்து’வுக்குப் பதிலாக வேறு தினசரி வாசிப்பவர்களும் இந்த இதழை விரும்பி பழைய புத்தகக் கடைகளில் ஒன்று 25 பைசா என்று வாங்கினர். மருத்துவம் உட்பட பல்வேறு விஷயங்களைச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு எழுதவைக்கப்பட்டு வெளிவந்தது. இந்த இதழில் படங்கள் மிகத் துல்லியமாயிருக்கும்.

சென்னை, கல்கத்தா, பம்பாய், டெல்லியைப் பொறுத்தளவு பழைய புத்தகக் கடைகளே இவ்வித அரிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விற்கும் இடங்களாயுள்ளன. புத்தகக் காட்சி நடைபெறும் நாள்களில் பழைய புத்தகக் கடைகளை இன்றும் வெளியில் நடைபாதையில் காண முடிகிறது.

- விட்டல்ராவ், எழுத்தாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in