Published : 16 Feb 2018 08:51 am

Updated : 16 Feb 2018 08:51 am

 

Published : 16 Feb 2018 08:51 AM
Last Updated : 16 Feb 2018 08:51 AM

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் சரி, நீதிமன்றங்களுக்கும் இது பொருந்துமா?

‘க


டவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்று பக்தப் பிரகலாதனின் வசனத்தைச் சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியது சென்னை உயர் நீதிமன்றம். தலைமைச் செயலகத்துக்கு எதிரே உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதால், அதை அகற்றுவதற்கு நீதிமன்றம் போட்ட உத்தரவில் இவ்வாசகங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த இஷ்டலிங்கேஸ்வரர் கோயில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு இடையூறாக இருந்ததால், அக்கோயிலை அகற்றுவதற்குப் பொதுப்பணித் துறை முயற்சித்தது. அதற்குத் தடைவிதிக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பாகப் போட்ட வழக்கை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதி கள் அமர்வு தள்ளுபடிசெய்தது (2009). அத்தீர்ப்பில், தலைமைச் செயலகம் கட்டுவது அரசின் இறையாண்மைக்கு உட்பட்டது. எந்த வழிபாட்டுத்தலம் குறுக்கிட்டா லும் அதை இடம்பெயரச் செய்திருப்பார்கள் என்று கூறியது நீதிமன்றம். அக்கோயிலின் மூலவர் சுயம்புலிங்கம் என்று நிர்வாகம் கூறியபோதும் அக்கோயிலை மாற்றுவதற்குத் தடையில்லை என்று நீதிமன்றம் கூறியது. அதேசமயத்தில், அக்கோயிலுக்கான மாற்று இடத்தை வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கியதுடன், மரபுரீதியான சடங்குகள் அனைத்தையும் செய்து அக்கோயிலை இடம்பெயரச் செய்தனர்.

நீதிமன்ற வாசலில்...

சென்னை உயர் நீதிமன்றத்தின் வாசலில் அமைக்கப் பட்டிருந்த நடைபாதைக் கோயிலை அகற்றுவதற்கு 40 ஆண்டுகள் ஆயின என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களே ஆக்கிரமிப்புக்கு ஆதரவளித்தது அதற்குக் காரணமாயிற்று.

தலைமைச் செயலகம் அமைப்பது இறையாண்மை அதிகாரத்துக்கு உட்பட்டது என்று நீதிபதிகள் கூறினாலும், தலைமைச் செயலகம் அங்கு செயல்படவில்லை. மாற்றாக, பல்நோக்கு மருத்துவமனைதான் செயல்பட்டுவருகிறது. இருப்பினும், அரசு அலுவலக வளாகங்களில் மதச்சார்பான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்த நீதிமன்றங்கள், தங்களது வளாகங்களில் அமைந்திருக்கும் வழிபாட்டுத் தலங்களைப் பற்றி எத்தகைய அணுகு முறையைக் கையாண்டார்கள் என்று பார்க்க வேண்டும்.

1993-லேயே அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தங்களது வளாகங்களில் எந்தவிதமான புதிய வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கும் (அ) ஏற்கெனவே உள்ள வழிபாட்டுக்கூடங்களை விரிவுபடுத்துவதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

2013-ல் பொதுவெளிகளில் எவ்விதமான வழிபாட்டுத் தலங்களையும் கட்டுவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கெனவே, பொதுப் பாதைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களைக் கருணை காட்டாமல் அகற்றுவதற்கும் உத்தரவிடப்பட்டது. தனது உத்தரவை மாநில அரசுகள் எந்த அளவுக்கு நிறைவேற்ற முற்பட்டன என்பதற்கான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த உத்தரவு கூறியது. தமிழக அரசும் தன் பங்குக்கு ஒரு அரசாணையை வெளியிட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றிவிட்டதாக அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கட்டுமானம்கூட அகற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.

மதச்சார்பான விழாக்கள்

பிள்ளையார் சதுர்த்தியின்போது பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைத்து வழிபாடுகள் நடத்தி, தனிநபர்கள் வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபடுவதை உள்ளாட்சி அமைப்புகளும் காவல் துறையும் போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்துவந்ததைப் பார்த்திருக்கிறோம். ஆயுத பூஜை வந்துவிட்டாலே அரசு அலுவலர்களுக்குக் கொண்டாட்டம். ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்துடன் அனைவரையும் அணுகி நன்கொடை வசூலை அள்ளிக் குவிப்பார்கள். கொடுக்க மறுப்பவர்களிடம் அதற்கு முந்தைய ஆண்டு கொடுத்த நன்கொடைப் புத்தகத்தைக் காட்ட மறந்துவிட மாட்டார்கள். ஆயுத பூஜை தினமன்று அதிகாரபூர்வமான அரசு விடுமுறை என்பதால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் களைகட்டிவிடும். அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் வேலை ஒன்றும் நடைபெறாது என்பது யாவரும் அறிந்ததே.

அரசு அலுவலகங்களில் அதிகாரபூர்வமாக மதச்சார்பான விழாக்களைக் கொண்டாடுவது அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்குப் புறம்பானது என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். ‘இயலுகின்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் தெய்வம், ‘எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!’ என்று தங்கள் தீர்ப்பில் பாரதியாரின் கவிதை வரிகளைத் துணைக்கு அழைத்துக்கொண்ட நீதிபதிகள், மக்கள் தங்களது எழுதுபொருட்களையும் தெய்வமாக நினைத்து வழிபடுவதில் தவறில்லை என்று கூறிவிட்டனர். அதிலிருந்து ஆயுத பூஜைக்கான வசூல், அரசு அலுவலகங்களில் இன்னும் அதிகமாகக் களைகட்டிவிட்டது.

இதற்கிடையில், கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒரு சிறிய கற்சிலையுடன் வழிபாடுகளை நடத்திவந்த வழக் கறிஞர்கள், அதைச் சுற்றி கோபுரத்துடன் ஒரு கோயில் அமைக்க முற்பட்டபோது, அதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. அதேபோல் மதுரை உயர் நீதிமன்ற அமர்வு வளாகத்தில் ஒரு கோயில் அமைக்க வக்கீல்கள் சார்பாக கோரிக்கை எழுப்பியதை நிராகரித்ததோடு அவ்வளாகத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் பாரம்பரியம் மிக்க பல கோயில்கள் இருக்கும்போது அவ்வளாகத்திலும் மேலும் ஒரு அமைப்பை உருவாக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வளாகத்துக்கு வளாகம் இடத்துக்கு இடம் இப்படிப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதுடன் அதனால் பல ஸ்தலப் பிரச்சினைகளும் ஏற்பட்டன. பழைய திண்டிவனம் நீதிமன்ற வளாகம் அமைந்திருந்த இடம் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான இடமாக இருந்தது. அதிலும் ஒரு பிள்ளையார் கோயில் எழுப்பி, அதற்கு விழா எடுக்க அங்கிருந்த சார்பியல் நீதிபதி யும் சில வழக்கறிஞர்களும் முயன்றபோது வெளியிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்புத் தெரிவித்த சமூக ஆர்வலர் பிரபா கல்விமணி மீதுகூட வழக்கறிஞர்கள் கிரிமினல் வழக்கு தொடர்ந்தனர்.

இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், அங்கிருந்த வழக்கறிஞர் சங்கம் அனுமதியின்றி கட்டிடம் கட்டியதைச் சுட்டிக்காட்டியதோடு தமிழகம், புதுச்சேரி மாவட்ட நீதிபதிகள் அனைவரும் தங்களது நீதிமன்ற வளாகத்தில் எவ்விதக் கட்டுமானத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு புதிய சுற்றறிக்கை அனுப்பியது.

வழக்குரைஞர்கள் உணர வேண்டும்

இதற்கிடையில், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிவிநாயகர் சிலையை வைத்து, நீதிவிநாயகர் திருக்கோயிலை அமைத்தனர். அதற்கு எவ்வித முன் அனுமதியும் பெறாததால், சிவகங்கை மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் தனது 22.11.2017 தேதியிட்ட கடிதத்தின் மூலம் உடனடியாக அந்தக் கட்டிடத்தை இடிக்கும்படி உத்தரவிட்டார். எதிர்காலத்தில் தேவையில்லாமல் சமயச் சச்சரவுகள் வரும் என்றும், தேவைப்பட்டால் இடிப்பதற்கு காவல் துறையின் உதவியை நாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த உயர் நீதிமன்றத்தின் நிர்வாகரீதியான உத்தரவை எதிர்த்து, அம்மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனு தொடர்ந்துள்ளனர். தங்களது மனுவில் அரியலூர், முதுகளத்தூர், கோவை, உதகமண்டலம், திண்டுக்கல் நீதிமன்றங்களில் கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தாங்கள் அமைத்த கோயிலை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளனர் (2017). இம்மனு தற்போது விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் நிர்வாகரீதியான உத்தரவுகள், நீதிப் பேராணைகள் மூலம் ரத்துசெய்யப்படுமா என்பது கேள்விக்குறி.

நீதிமன்றங்கள் நடைபெறும் கட்டிடங்கள் அரசுக்குச் சொந்தமானவை என்பதையும், அவை அலுவல்ரீதியாகப் பலதரப்பட்ட மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்கள் என்பதையும், அரசமைப்புச் சட்டத்தின் ஆரம்ப வரிகளில் கூறப்பட்ட மதச்சார்பற்ற குடியரசு என்பதை அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் வழக்குரைஞர்கள் உணர வேண்டும். நீதிபதிகளும் தங்களது அலுவலக மேஜைகளைக் கிட்டத்தட்ட ‘மினி கோயில்’ களாகவே மாற்றியுள்ளதையும் தவிர்க்க வேண்டும். இந் நிலையில், இறைவனை எங்கு வேண்டுமானாலும் வழி படலாம் என்று சொன்ன உத்தரவு நீதிமன்றங்களுக்கும் பொருந்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

- கே.சந்துரு,

நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x