மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் தொழில்முனைவோர் ஆகட்டும்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் தொழில்முனைவோர் ஆகட்டும்!
Updated on
2 min read

பட்டியல் சாதியைச் சேர்ந்தபடித்த, தொழில் ஆர்வமிக்க இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்ற பெயரில் மிகச் சிறந்த திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. இதன் காரணமாக, தொழில் தொடங்க ஆர்வம் உள்ள பட்டியல் சாதி இளைஞர்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். முதல் தலைமுறைத் தொழில்முனைவோரை உருவாக்கும் சிறந்த திட்டமாக இது திகழ்ந்துவருகிறது. இத்திட்டத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்: ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட’த்தின்படி குடும்ப ஆண்டு வருவாய் உச்சவரம்பு இன்றி 18 முதல் 55 வயது வரையிலான புதிய தொழில்முனைவோர் கடன் பெற முடியும். ஏற்கெனவே தொழில்செய்வோருக்கு வயது வரம்பு இல்லை. கல்வித் தகுதி ஏதும் இல்லை. திட்டமதிப்பீட்டுத் தொகைக்கான உச்சவரம்பும்இல்லை. நேரடி விவசாயம் தவிர்த்து,அனைத்து வகையான பொருளாதாரரீதியாகச் சாத்தியமுள்ள தொழில்கள் செய்யக் கடன் பெற முடியும். ஆடு, மாடு,கோழி, பன்றி, இறைச்சி, தோலுக்கான விலங்குகள், பறவை வளர்த்தல், மீன்-இறால் பண்ணை, தேனீ வளர்த்தல், பட்டுப்புழு வளர்த்தல் போன்ற திட்டங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்துக்கு மேல் திட்ட மதிப்பீடு இருப்பது அவசியம்.

கதிரடிக்கும் இயந்திரம், இதர பண்ணைசார் இயந்திரங்களை வாடகைக்கு விடுதல், அறுவடைக்குப் பிந்தைய சுத்தம்-தரவகைப்படுத்துதல் சார்ந்த தொழில்கள், குளிர்பதனச் சேமிப்புக் கிடங்குகள், கூட்ட அரங்குகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எரிவாயு நிலையங்கள் ஆகிய தொழில்களுக்குக் கடன் பெற முடியும். இதில் 35% மானியமாகவும், 65% வங்கிக் கடனாகவும் பெறலாம். கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களைச் சீர்தூக்கிவிடும் அருமையான திட்டம். பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் இத்திட்டத்துக்கு வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

<strong>கே.பாலு</strong>
கே.பாலு

விரிவாக்கத்துக்கான தேவை: பட்டியல்சாதியினரைப் போல சமூக, கல்வி,பொருளாதார நிலையில் பின்தங்கியிருப்பவர்களாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சமூகத்தினரும் உள்ளனர். வன்னியர்கள், பர்வதகுல மீனவர்கள், பரதர்கள், குலாளர்கள், போயர்கள், ஒட்டர்கள், வண்ணார், நாவிதர்,கொண்டயங்காட்டு மறவர்கள், பிரமலைக் கள்ளர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், தொட்டிய நாயக்கர்கள், வலையர்கள், முத்தரையர்கள், இசை வேளாளர், சீர்மரபினர் உள்ளிட்ட 118 சாதியினர் மிகவும்பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.

இப்பிரிவில் உள்ள சமூகத்தினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் குடிசைகளில் ஏழ்மை நிலையில் வாழ்கின்றனர். பட்டியல் சாதியினருக்கு அமல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் விரிவுபடுத்தினால் அவர்களும் தொழில் முனைவோராக மாற வாய்ப்பு ஏற்படும். இத்திட்டத்தை விரிவுபடுத்தும்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான திட்டத்தை, பெரியாரின் சமூகநீதிப் பார்வைக்கு முன்னோடியாக விளங்கிய அத்திப்பாக்கம் வெங்கடசாமி நாயக்கர் பெயரில் செயல்படுத்தினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். இத்திட்டத்தை அமல்படுத்தினால், வேலைவாய்ப்பைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கை யைக் கட்டுப்படுத்த முடியும். நகர்ப் புறங்களில் குவிந்து கிடக்கும் தொழில்முனைவோரைக் கிராமப்புறத்தை நோக்கிஅழைத்துச் செல்லவும் அங்கு வேலைவாய்ப்பைப் பெருக்கவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.

சமூகநீதியை நிலைநாட்ட... இவற்றைக்கருத்தில்கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சிறப்புத் தொழில்முனைவோர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தொழில்முனைவோர்ஆக மாறும்போது தொழில்புரட்சியில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற முடியும். ஏழ்மையை ஒழிப்பதிலும் இத்திட்டம் துணைபுரியும்.

அனைத்துப் பிரிவினரையும் கல்வி,பொருளாதாரரீதியாகச் சமப்படுத்துவது தான் உண்மையான சமூகநீதி. அதற் கான புதிய தொடக்கமாக இத்திட்டம் இருக்கும். இத்திட்டத்தைச் செயல்படுத்தி சமூகநீதியை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பாலு, வழக்கறிஞர், செய்தித் தொடர்பாளர், பாட்டாளி மக்கள் கட்சி. | தொடர்புக்கு: baluadvocate@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in