Published : 09 Jan 2024 06:13 AM
Last Updated : 09 Jan 2024 06:13 AM

புத்தகத் திருவிழா 2024 | செம்மை: அனுபவம் ஊறும் தன்வரலாறு!

கன்னட மொழியில் மட்டுமல்லாது, இந்திய இலக்கியத்திலும் ஒரு பேராளுமையாகத் திகழ்ந்தவர் சிவராம் காரந்த் (1902-1997). இவரைப் போல் ஓர் எழுத்தாளராக இருந்தபடியே வாழ்வின் பன்முக அனுபவங்களைப் பெற்று, அவற்றைச் செறிவோடு தன்வயமாக்கிக் கொண்ட அறிஞர்களைக் காண்பது அரிது. அதனாலேயே இவருடைய தன் வரலாறு புதிய தலைமுறைகளின் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரியதாகிறது.

47 நாவல்கள், 31 நாடகங்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், 9 கலைக்களஞ்சியத் தொகுதிகள், 2 கவிதைத் தொகுதிகள், பல்வேறு பொருள்கள் பற்றிய 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் என மழை வளம் சுரந்த மேகம் போல் மொழிவளம் பெருக்கியவர் சிவராம் காரந்த். ‘ஹச்சு மனசின ஹத்து முககளு’ என்கிற தலைப்பில் காரந்த் கன்னடத்தில் எழுதிய தன் வரலாற்றை, ‘Ten Faces of a Crazymind’ (மொ-ர்: சாரதா பிரசாத்) என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு வழி தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் கவிஞர் சிற்பி.

ஒரு ஞானக்கிறுக்கனின் பத்து முகங்கள் (தன்வரலாறு)
சிவராம் காரந்த்
தமிழில்: சிற்பி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.450

மரிச்ஜாப்பி குறித்த மாற்றுப் பார்வை: சுந்தரவனப் பகுதியில் சதுப்பு நிலக் காடுகள் சூழ்ந்த தீவு மரிச்ஜாப்பி. தண்டகாரண்யத்திலிருந்து அகதிகளாக அங்கு வந்து தலித் மக்கள் குடியேறினர். 1978-79ஆம் ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு முதலமைச்சராக இருந்தபோது அன்றைய அரசு மரிச்ஜாப்பியில் குடியேறிய 17 ஆயிரம் தலித் மக்களைப் படுகொலை செய்தது என்னும் குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இதை ஆதாரபூர்வமாக மறுக்கும் வகையில், பத்திரிகையாளர் ஹரிலால் நாத் வங்க மொழியில் எழுதிய நூல் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மரிச்ஜாபிக்கு வந்த அகதிகளை கம்யூனிஸ்ட் அரசு படுகொலை செய்தது என்று சொல்லும் நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய உள்ளன. அதற்கு நேரெதிரான பார்வையை முன்வைக்கும் முதல் நூல் தமிழில் இதுதான்.

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது?
ஹரிலால் நாத்
தமிழில்:
ஞா.சத்தீஸ்வரன்
பாரதி புத்தகாலயம், தமிழ் மார்க்ஸ்
விலை: ரூ.330

இந்து தமிழ் திசை வெளியீடு: பள்ளிப் பாடப் புத்தகங்களில் மனப்பாடப் பகுதியாகச் சுருக்கியதாலும் கற்றல் இனிமையுடன் பயிற்றுவிக்கத் தவறியதாலும் இன்றைய இளைஞர்கள், சிறார்களிடையே திருக்குறள் கற்கும் ஆர்வம் பரவலாக இல்லை. சிறாரை ஈர்க்கும் வகையில் திருக்குறளைக் கற்பிக்க வேண்டும் என்றால், அதைச் சிறாருக்கான கதையாகச் சொல்ல வேண்டும் என்கிற உத்தியை மமதி சாரி கையாண்டிருக்கிறார். சிறார்களுக்கு அவசியம் சென்றுசேர வேண்டிய குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் ‘கெட்டிக்குட்டி’ என்னும் கதாபாத்திரம் வழியாகச் சிறார்களுக்கான கதையாகப் படைத்திருக்கிறார்.

குட்டிகள் குறள்
மமதி சாரி
விலை: ரூ.130

திருநங்கை பிரஸ்: புத்தகக் காட்சி அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்றால், அனைத்துத் தரப்பினருக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டாக வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருநர் சமூகத்தினரின் அரங்கு இடம்பெற்றிருப்பதால், சென்னைப் புத்தகக் காட்சி ஒரு வகையில் அந்த நோக்கத்தை நேர்செய்திருக்கிறது.

பாலினச் சமத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் திருநங்கையர் இணைந்து ‘திருநங்கை பிரஸ்’ பதிப்பகம் சார்பாக சென்னைப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருக்கிறார்கள் (அரங்கு எண்: 164 D). திருநர், பால்புதுமையினர் சமூகத்தைப் புரிந்துகொள்ள வழிகாட்டும் புத்தகங்கள் இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.

திருநர் செயல்பாட்டாளர்கள் ஆல்கா, கல்கி சுப்பிரமணியம், கிரேஸ் பானு ஆகியோருடன் திருநம்பிகள் சோனேஷ், காந்த், மிக்கேல் உள்ளிட்ட பலரது புத்தகங்கள் இந்த அரங்கில் இடம்பெற்றுள்ளன. திருநர் சமூகம் குறித்துப் பிற எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளும் இந்த அரங்கில் இடம்பெற்றுள்ளன.

பாலஸ்தீனத்தைப் புரிந்துகொள்ள.. இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருபத் தோராம் நூற்றாண்டிலும் அதே தீவிரத்துடன் தொடர்கிறது பாலஸ்தீனம் - இஸ்ரேல் பிரச்சினை. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்த இஸ்ரேல், உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறிப் போரைத் தொடர்ந்துவருகிறது.

இந்தப் பின்னணியில் பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சினையை அனைவரும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியதற்கான தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்திருக்கிறது.

பாலஸ்தீனம் தொடர்பான மூன்று நூல்களை இந்தப் புத்தகக் காட்சிக்குக் கொண்டுவந்திருக்கிறது எதிர் வெளியீடு. டயானா ஆலன் எழுதிய ‘நக்பா - பேரழிவின் பெருங்குரல்கள்’ நூலை நா.வீரபாண்டியன் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆவணங்கள், அறிக்கைகள், கொள்கைகள் மூலமாக ‘இந்தியா-இஸ்ரேல்’ கூட்டணியைப் பற்றியும் பாலஸ்தீனம் குறித்து இந்தியாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்பதைக் குறித்தும் ஆஸாத் எஸ்ஸா எழுதிய ‘கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்’ என்கிற நூல், இ.பா.சிந்தன் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.

பாலஸ்தீனம்-இஸ்ரேல் குறித்து எந்தவிதப் பாகுபாடுகளும் இல்லாமல், பக்கச்சார்பு இல்லாமல் ‘பாலஸ்தீனம்-இஸ்ரேல் ஓர் அறிமுகம்’ நூலை எழுதியிருக்கிறார்கள் கிரிகோரி ஹார்ம்ஸ், டாட்.எம்.ஃபெரி; தருமி இந்நூலை மொழிபெயர்த்திருக்கிறார்.

பாலஸ்தீன அரசியல் வரலாறு பற்றிய நன்மாறன் திருநாவுக்கரசின் ‘சிதிலங்களின் தேசம்’, கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 2023இல் நடைபெற்ற இஸ்ரேல்-பாலஸ்தீனத் தாக்குதல்கள், பின்விளைவுகளை மையமாக வைத்து, ‘மெட்ராஸ் பேப்பர்’ இணைய இதழில் கோகிலா எழுதிய ‘உலரா உதிரம்’ தொடர், எழுத்துப் பிரசுரம் மூலம் புத்தகமாக வந்திருக்கிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள், யாசர் அராஃபத்தின் ஆயுதப் போராட்டம், அமைதிக்கான முயற்சிகள், அவற்றின் விளைவுகள், இஸ்ரேலின் கண்ணோட்டம் ஆகியவற்றை 15 ஆண்டுகளுக்கு முன்பு ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்கிற பெயரில் விரிவாக எழுதிய பா.ராகவன், அதன் இரண்டாம் பாகத்தை, ‘இந்து தமிழ் திசை’யில் ‘கணை ஏவு காலம்’ என்கிற பெயரில் தொடராக எழுதினார், அந்தத் தொடர் அதே தலைப்பில் நூலாக்கப்பட்டு ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வந்திருக்கிறது. - ஸ்நேகா

முத்துகள் 5

மார்க்சியத்திற்கும் அஃதே துணை
வெ.மு.பொதியவெற்பவன்
Dravidian Stock வெளியீடு
விலை: ரூ.250

யூமா வாசுகி நேர்காணல்கள்
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.250

பூனா ஒப்பந்தம்
அம்பேத்கர்
தமிழில்: ஜெய்சன்
அலைகள் வெளியீட்டகம்
விலை: ரூ.140

நான் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்;
ஆனால் அங்கு யாரும் இல்லை
(சிறுகதைகள்)
அப்பணசாமி
தமிழ்வெளி வெளியீடு
விலை: ரூ.120

கலைஞர் ஓர் சகாப்தம்:
சகாப்தங்களுக்கு முடிவில்லை
பி.டி.பாண்டிச்செல்வம்
நேசம் பதிப்பகம்
விலை: ரூ.250

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x