Last Updated : 05 Jan, 2018 09:28 AM

Published : 05 Jan 2018 09:28 AM
Last Updated : 05 Jan 2018 09:28 AM

ஓங்கும் கை!

சி

ல மாதங்களுக்கு முன்னால் வரை, இனி ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ உருவாகும் என்று பேசினால், அதை நம்பவும் பலர் இருந்திருப்பார்கள். குஜராத் சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அத்தகைய எண்ணமே விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு பெருக நான்கு காரணங்கள் இருந்தன. இவையே தேசிய அளவிலும் அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டும்.

முதலாவதாக, கட்சியின் தலைமைப் பதவியை ராகுல் காந்தி வெகு இலகுவாகக் கையாண்டார். குஜராத்தின் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்ததுடன் 30-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசினார். யாரோ எழுதிக் கொடுத்துப் பேசிய காலம் போய்விட்டது. அந்தந்த ஊர்களுக்கேற்ப அவரே அரசியல் செய்திகளைப் பேசினார். பரம்பரையாக வந்த அரசியல் தலைவர் என்ற தலைக்கனம் இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்வுடன் பேசுவதுடன், மற்றவர்கள் சொல்வதை ஆர்வமுடன் கேட்பவராகவும் இருக்கிறார் என்று மக்கள் மகிழ்ந்தனர்.

இரண்டாவதாக, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் பின்னாலிருந்து செயல்படும் தன்மையால் வெவ்வேறு அரசியல் நோக்கங்களுடன் இருந்த ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கோர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை ஒரே மேடையில் கொண்டுவர அவரால் முடிந்தது. காங்கிரஸ் தலைமையில் அவர்கள் திரளக் காரணமாக இருந்தது, ராகுல் மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கைதான். ‘குறிப்பிடத்தக்க’ இந்த சமூகக் கூட்டணியை ராகுலைத் தவிர, வேறு எந்த காங்கிரஸ் தலைவராலும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ‘குறிப்பிடத்தக்கது’ என்று இக்கூட்டணியைக் குறிப்பிடக் காரணம், வெறும் சாதி எண்ணிக்கை அடிப்படையில் அல்லாமல் வேலைவாய்ப்பின்மை, நில உரிமைகள், வேளாண் துறைத் துயரங்கள் போன்றவற்றைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்பதால்தான்.

வியப்பில் ஆழ்த்திய ராகுல்

மூன்றாவது, கட்சியின் கள அமைப்புகளைப் பயன்படுத்துவது பற்றியது. குஜராத் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்திய படேல்களின் அணி திரளலை காங்கிரஸ் அப்படியே பயன்படுத்திக் கொண்டது. ஆனால், சூரத் நகரில் அதற்குத் தோல்வி ஏற்பட்டது.

ஜவுளி நகரமான சூரத்தில் பாஜக மீது கோபம் கொப்பளித்தது என்றாலும், வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸ் வலுவாக இல்லாததால் மொத்தமிருந்த 16 தொகுதிகளில் 15-ல் பாஜகவே வென்றது. காங்கிரஸின் இடைநிலைப் பகுதியிலும் கடைநிலைப் பகுதியிலும் அமைப்பு சீர்குலைந்திருக்கிறது. அவற்றைச் சீர்திருத்தி வலுப்படுத்தினால்தான் கட்சியின் அமைப்புச் சக்கரத்தில் அது வலுவான ஆரக்காலாகத் திகழும்.

தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு மிகவும் அவசியமானது என்னவென்றால், மக்களால் நம்பக்கூடிய, ஏற்கக்கூடிய, தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய மாற்று அரசியல் திட்டங்களை முன்வைப்பதுதான். இந்த இடத்தில்தான் ராகுல் காந்தி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்றவுடன் அவர் நிகழ்த்திய சிறு சொற்பொழிவில் அரசியல் பற்றிய தன்னுடைய தொலைநோக்குப் பார்வையைச் சிறப்பாகத் தொட்டுக்காட்டினார். அது விரிவான பேச்சு அல்ல என்றாலும் மக்களைத் திரட்டவும், மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தவும் தான் செய்யப்போவது என்ன என்று தெரிவித்துவிட்டார்.

டேவிட் x கோலியாத்

ராகுல் காந்திக்கும் மோடிக்கும் உள்ள வேறுபாடுகள் அனைவருக்கும் தெரியும். அரசியல் அந்தஸ்து, செல்வாக்கு, கவர்ச்சி, வெற்றிகள் என்று ஒப்பிட்டால் பைபிள் கதையில் வரும் டேவிட்டைப் போல ராகுலும், கோலியாத்தைப் போல மோடியும் இருக்கின்றனர். இந்த வேறுபாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழியை ‘டேவிட்’தான் கண்டுபிடிக்க வேண்டும். மோடி செல்வாக்கிலும் அதிகாரத்திலும் மிதக்கிறார் என்றால், ராகுல் அமரிக்கையாகச் செயல்படுகிறார்; அன்பை விதைப்பவராகத் தெரிகிறார். மோடியின் கோபாவேசமான அரசியலுக்கு மாற்றாக அன்புமயமான அரசியலை முன்னெடுக்கிறார் ராகுல். வெறுப்புணர்வுக்கு எதிராக சகோதரத்துவத்தை வளர்க்கிறார்; ஆணவத்துக்கு எதிராக அடக்கத்தைக் கையாள்கிறார். ஒற்றைத்தன்மைக்கு எதிராகப் பன்மைத்தன்மையை வலியுறுத்துகிறார். அச்சத்தை ஊட்டும் அரசியலுக்கு எதிராக அன்பை வளர்க்கும் அரசியலுக்கு ஆதரவு காட்டுகிறார்.

குஜராத் பிரச்சாரத்தில் இந்த அடிப்படையிலேயே பேசிய ராகுல், இடையிடையே குஜராத் பாணி, முன்னேற்றம், ரஃபேல் விமான பேரம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை குறித்து சுருக்கென்று தைக்கும் விதத்தில் விமர்சித்தார். “காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக கூறினாலும், பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கமாட்டோம், பாஜகவும் ஒரு பகுதி மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கட்சியே என்று பேசியதுதான்” அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மனிதனை மனிதன் சாப்பிடும் இந்தக் காலத்தில் ராகுலின் இந்தப் பண்பு அதிர்ச்சியாகக்கூட இருந்தது. நேரு காலத்து சுதந்திரச் சிந்தனையாளர்கள்கூட குழப்பமும் வியப்பும் அடைந்தார்கள்.

புதிய மாற்றம்

இதைவிட வியப்பு குறைவாகவும், சற்றே ஜீரணிக்க முடியாததாகவும் இருந்தது, குஜராத்தில் அவர் சில கோயில்களுக்குச் சென்றது. பிரச்சாரத்தின்போது தன்னுடைய ‘இந்து’ அடையாளத்தைக் காட்டியதன் மூலம் இந்துத்துவ சக்திகளின் வலையில் அவர் விழுந்துவிட்டார் என்று சிலர் பேசினர். இது ‘மிதமான இந்துத்துவா’ என்று சிலர் வர்ணித்தனர். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு, சிறுபான்மைச் சமூக மக்களுடைய நிலை பற்றி பிரச்சாரத்தில் ஏதும் பேசாததை அவர்கள் இப்படியாகத்தான் பார்த்தனர். இது எதிர்பாராதது அல்ல; அதே சமயம் வடிவத்துக்கும் - சாரத்துக்கும் பேதம் புரியாத குழப்பம் இது. 2009-ஐ விட 2017 மதரீதியாக அணி சேர்ந்திருக்கிறது. அதிலும் குஜராத் முன்னிலையில் இருக்கிறது. வாக்களிக்கும்போது ஒருவருடைய மத அடையாளம்தான் முக்கியமாகிவிடுகிறது. குஜராத்துக்காகப் போட்ட இந்த வேஷத்தை காங்கிரஸ் களையாவிட்டால், அதற்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு குறையத் தொடங்கும்.

அரசியல் களத்திலிருந்து மதவாத நச்சுகளை அகற்றுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். இதை சமூக இயக்கமாகக் கடைப்பிடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. ராகுல் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார். கோயில்களுக்குச் செல்வது ‘மிதவாத இந்துத்துவா’ அல்ல, ‘புத்திசாலித்தனமான மதச்சார்பின்மை’ என்று தன்னுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறார் ராகுல்; பெரும்பான்மைச் சமூக மதத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், பேரினவாதத்துக்கு இரையாகிவிடாமலும், சிறுபான்மையினரின் அரசியல் சட்ட உரிமைகளை விட்டுத் தராமலும் இருக்கும் நிலையே தங்களுடையது என்று நிலைநாட்ட விரும்புகிறார். கத்தி மேல் நடப்பதைப் போன்ற சாகசம் இது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் காங்கிரஸுக்குக் கூடுதலாக எத்தனை வாக்குகள் கிடைத்தன என்று பார்க்க வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கையால் மிகவும் அரண்டது பாஜகதான்.

சோதனைக் களம்

கட்சித் தலைவராக வழிநடத்திச் செல்ல ராகுலுக்குத் திறமை இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் களமாக அமைந்துவிட்டது குஜராத் தேர்தல். வாரிசு என்ற வகையில் கிடைத்த கட்சித் தலைவர் பதவிக்கு ராகுல் தகுதியானவர்தானா என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. பாஜகவை நேருக்கு நேர் சந்திக்க காங்கிரஸால் முடியும் என்பதையும் இத்தேர்தல் காட்டியிருக்கிறது. அச்சத்தை ஊட்டும் கட்சிக்கு எதிராக, அன்பை விதைக்கும் மாற்று வழிமுறையை ராகுல் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். அச்சத்துக்கும் அன்புக்கும் இடையிலான கடும் மோதல்களின் வழியாக இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். இனி அந்த மோதல்கள் வாக்காளர்களின் மனங்களில்தான் நடைபெறும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x