

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய படங்களை வரிசையிட்டால், சிறந்த 10 படங்களுக்குள் ‘ரோப்’ (Rope) கண்டிப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஹிட்ச்காக் படங்களில் இப்படம் இன்னும் கூடுதலாகக் கவனம் பெற்றிருக்க வேண்டும் என்று உலக சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஏக்கம் உண்டு. அதற்கேற்ப செவ்வியல் படத்துக்கான அத்தனை நியாயங்களும் இப்படத்தில் இயல்பாய்ப் பொருந்தி இருக்கின்றன.
ஒளிக்கப்பட்ட சடலம்: ஒரு விருந்துக்கு முன்பு நண்பர்கள் பிலிப், பிராண்டன் இருவராலும் டேவிட் ஒரு கயிற்றால் இறுக்கிக் கொல்லப்படுவதில் இருந்து படம் தொடங்குகிறது. கொல்லப்பட்ட டேவிட்டின் சடலத்தை அங்கேயே மறைத்து வைத்துவிட்டு அவர்கள் விருந்தை ஆரம்பிக்கின்றனர். கொலையான டேவிட்டின் வருங்கால மனைவி, தந்தை, அத்தை, பேராசிரியர் ஆகியோர் விருந்துக்கு அழைக்கப்படுகிறார்கள். பேராசிரியர் மிகுந்த புத்திசாலி. அவர் உள்ளிட்ட அனைவரது கவனத்தில் இருந்தும் கொலை செய்தவர்கள் எப்படித் தப்பிக்க முயல்கிறார்கள் என்பதுதான் படம்.
‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்ற அடையாளம் உடைய ஹிட்ச்காக்குக்கு இப்படம் ஒரு பரிசோதனை முயற்சி என்று கூறுவார்கள். ஏற்கெனவே மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு, உளவியல் த்ரில்லர் வகையில் வெளிவந்த இப்படம் அப்போது பெரும் பேசுபொருளாக இருந்தது. நாடகத்தைவிடப் படமாக வந்தபோது அதில் இருந்த உருவாக்க நேர்த்திக்காகக் கூடுதல் வரவேற்புபெற்றது. படத்தில் வைக்கப்பட்டுள்ள நீளமான காட்சிகள் குறித்துப் பல மாறுபட்ட கருத்துகள் வெளிவந்துள்ளன.
படத்தில் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனமான உரையாடல்கள் நிறைந்திருக்கும். ஒருவரை ஒருவர் உரையாடலில் வீழ்த்த எண்ணுவார்கள். பதில்கூற முடியாத இடங்களில் இசை, உற்சாகப் பானம் என எதையோ பற்றிக் கொண்டு மற்றவரின் கவனத்தைத் திசை மாற்றித் தப்பிக்க முயல்வார்கள். உயர்வு, தாழ்வு என்ற குணச்சிக்கல்கள் உளவியல் பார்வையில் இப்படத்தில் பேசப்பட்டு இருக்கும்.
வசனங்களால் உயிர்பெறும் காட்சிகள்: ஒரே தளத்துக்குள் நடைபெறும் கதையில் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனங்களால் உயிர்பெற்று நிலைத்துநிற்கும் காட்சிகள் பார்வையாளர்களுக்குப் பரவசத்தைத் தருகின்றன. கதை நிகழும் வீடு, கலைநேர்த்தி மிக்கப் பொருள்கள், கதாபாத்திரங்களின் உடைத் தேர்வு, கேமரா நகரும் கோணங்கள் என ஒவ்வொன்றும் கச்சிதமாக வரையப்பட்ட ஓவியம்போல அமைந்துள்ளன. இதன் திரைக்கதை உலகம் முழுவதும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ‘தி வால்’, ‘பேனிக் ரூம்’, ‘விக்டோரியா’ என அப்பட்டியல் நீள்கிறது. இந்தியிலும் தமிழிலும் இதன் பாதிப்பு வெளிப்பட்டுள்ளது.
க்ரைம் த்ரில்லர் கதைகளில் கொலை, தொடக்கத்தில் அல்லது நடுவில் நடக்கும். கொலையை மறைக்கத் திட்டமிடுபவர்கள் ஒரு பக்கம், மறுபக்கம் கொலையைக் கண்டுபிடிக்க முயல்பவர்கள் இருப்பார்கள். கொலையைக் கண்டுபிடிப்பவர்களின் பார்வையில் இருந்து நகரும் படம் ‘ரோப்’. மறைக்க நினைப்பவர்கள் பெரிதாக மெனக்கெட மாட்டார்கள். சடலத்தை அங்கேயே வைத்துக்கொண்டு ஒரு நாடகத்தை அவர்கள் உற்சாகமாக அரங்கேற்றுகின்றனர். கொலை செய்த இருவரில் ஒருவர் சகஜமாக இருக்கிறார். இன்னொருவர் மிகுந்த பதற்றத்துடன் இருக்கிறார். இருவரில் பிலிப் மட்டும் குற்ற உணர்வுக்கு ஆள்படுகிறார். பிராண்டனோ கொலை செய்ததை ஒரு கலை என்று கூறி மகிழ்கிறார். கொலை செய்து முடித்தவுடன் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்ற எண்ணுகிறார். கொலைக்கான காரணமாகப் பேராசிரியருடனான உரையாடலின்போது அவர் கூறிய வரிகளையே கூறுவார். ‘வலியது வாழும்’ என்ற தத்துவத்தை முன்னுதாரணமாகக் காட்ட முயல்வார். அதைப் பேராசிரியர் ரூபர்ட் கண்டிப்பார். ரூபர்ட் அவர்களின் ஒவ்வோர் அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்பார்.
இரண்டு பாகங்களாக மலையாளத்தில் வெளிவந்த ‘த்ருஷ்யம்’ படத்தில் கொலை, கதையின் நடுவில் நடக்கும். கொலையைப் படத்தின் பிரதான கதாபாத்திரம் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு நாடகம் இட்டு மறைக்க முயலும். கொலைக்கு முன்பாக அந்த குடும்பச் சூழல் நம் முன்வைக்கப்பட்டிருக்கும். எனவே கொலை நடந்த பிறகு அந்தக் குடும்பம் அந்தக் கொலையை மறைப்பதற்கு நம்மிடமும் ஒரு நியாயம் இருக்கும். எனவே படம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு சாய்வு இருக்கும். அச்சாய்வு கொலையைச் செய்தவர்கள் தப்பிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டே இருக்கும். எலி, பூனை ஆட்டத்தில் நாம் எலியின் பக்கமே இருப்போம்.
‘ரோப்’பில் தொடக்கத்திலேயே கொலை நடந்துவிடுகிறது. அதன் பிறகு சடலத்தைச் சாமர்த்தியமாக அவர்கள் மறைத்தார்களா, மாட்டிக் கொள்கிறார்களா, என்பதைச் சொல்்லும் திரைக்கதையின் சுவாரசியங்களே நம்மை இழுத்துச் செல்கின்றன. ஒரு நாடகத்தை நாமும் பார்க்கிறோம். அந்தக் கொலையிலோ கண்டுபிடிப்பதிலோ நமக்கு எந்த பங்களிப்பும் இருப்பதில்லை. நாம் பார்வையாளர்கள் மட்டுமே.
அற்புதத்தின் அருகில்... கதாபாத்திரங்களின் உரையாடல் வழியே கொலையான டேவிட்டுக்கு ஒரு அழகிய எதிர்காலம் இருந்திருக்கிறது, அதனை நண்பர்கள் சதி செய்து கெடுத்துவிட்டனர் என்பது தெரியவருகிறது. டேவிட்டுக்கு ஒரு அன்புமிக்க காதலி, குடும்பம் இருக்கிறது. அவர்கள் டேவிட்டைத் தொலைத்துப் பதற்றப்படுகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் மேலோட்டமாக உணர முடிகிறது.
பிராண்டன், ரூபர்ட் இடையே கடைசியில் நடைபெறும் உரையாடல் காட்சியில் ரூபர்ட், பிராண்டன் இடத்தில் தன்னை வைத்து யோசித்துக் கூறும் இடம் அற்புதத்தின் அருகில் நம்மை கொண்டு செல்லும். கொலையான டேவிட் அருந்திய கடைசிக் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு ‘இதை மியூசியத்தில் வைக்க வேண்டும்’ என்று படத்தின் தொடக்கக் காட்சியில் பிராண்டன் சிரிப்பார். கடைசிக் காட்சியில் பிராண்டன் கையில் அதே கோப்பை வந்து சேரும். நம் ஒவ்வொருவருக்கான கடைசி கோப்பை கட்டாயம் வந்துசேராமல் இருப்பதில்லை.
‘ரோப்’பில் தொடக்கத்திலேயே கொலை நடந்துவிடுகிறது. அதன் பிறகு சடலத்தைச் சாமர்த்தியமாக அவர்கள் மறைத்தார்களா, மாட்டிக் கொள்கிறார்களா, என்பதைச் சொல்்லும் திரைக்கதையின் சுவாரசியங்களே நம்மை இழுத்துச் செல்கின்றன.
- ஸ்டாலின் சரவணன், கவிஞர்