

எப்போதும் என்னைச் சுற்றி எது நடந்தாலும் அது எனக்கே நடந்ததுபோல உணர்வேன். ஒரு நல்ல மழை பெய்து பயிர்களெல்லாம் தளிர்த்தால் சந்தோஷப்படுவேன். எனக்குத்தான் நடக்க வேண்டும் இந்தச் சந்தோஷம் என்றில்லாமல், யாருக்கு நடந்தாலும் நான் சந்தோஷப்படுவேன். அதுபோல் துக்கம் யாருக்கு நடந்தாலும் நானும் கலங்குவேன். நாம் இன்னொருவராக மாறி உணர்ந்து பார்க்கும் இந்தக் குணம்தான் எழுதுவதற்கு அடிப்படையான காரணமாக இருக்கலாம்.
இப்படி ஒருநாள், ஒரு சம்பவம் என்னைப் பாதித்தது. நான் உட்கார்ந்து என்னையும் அறியாமல் எழுதத் தொடங்கிவிட்டேன். 1968 எனது 26ஆவது வயதில் ஒரு மத்தியான நேரம் என நினைவில் இருக்கிறது. மனதில் தோன்றியதை வேகமாக எழுத ஆரம்பித்தேன். எனக்கு எழுத வருமென்றுகூட அப்போது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், நான் படித்தது சம்ஸ்கிருதம். தமிழ் நான் முறையாகப் படிக்கவில்லை. வீட்டில் தமிழில்தான் பேசுவோம். அப்படித்தான் தமிழில் எழுதினேன். ஒரு ஒண்ணரை மணி நேரத்துக்குப் பிறகு பார்த்தால் நான் சிறுகதையை எழுதி முடித்திருந்தேன். அதற்கு ‘அவர்கள் பேசட்டும்’ என்று தலைப்பு வைத்தேன். அதைக் ‘கல்கி’ இதழுக்கு அனுப்பிவைத்தேன். கல்கி ராஜேந்திரன் ‘நீ உணர்வுகளை ரொம்ப நல்லா வெளிப்படுத்துற. உன்னோட ஸ்ட்ராங் பாயின்ட்டா அத வெச்சுக்கோ’ என்று பாராட்டினார்.
அந்தக் கதைதான் தொடக்கம். பிறகு கடகடவென எழுதத் தொடங்கிவிட்டேன். பிறகு, திரும்பிப் பார்க்கவே நேரமில்லாமல் மக்கள் என் எழுத்தை வரவேற்றனர். பத்திரிகைகள் என் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டன. மனதுக்குத் திருப்தியான கருக்களை எல்லாம் என்னால் எழுத முடிந்தது. போக முடியாத இடத்துக்கெல்லாம் சென்று ஆய்வு செய்து, பல ஆண்டுகள் எடுத்து முழுமையாக எழுதியது எல்லாம் எனக்கு நிறைவாக இருக்கிறது. எழுத்து என்பது என்னைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்வதுதான். எனக்கு உண்டான ஓர் உணர்வை வாசகர்களிடம் நான் பகிர்ந்துகொள்கிறேன். எழுத்தின் மூலம் அறிவுரை சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு உள்ளுக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய ஓர் உணர்வை என் எழுத்தின் வழி வாசகர்களும் உணர்ந்துவிட்டால், அது எனது வெற்றி என நான் எண்ணுவேன். அதற்கான தீர்வை அவர்கள்தான் எடுக்க வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சினையை நான் எழுத்தின் வழி அவர்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன். இப்படித்தான் 1968இல் தொடங்கி இப்போது வரைக்கும் எழுதிவருகிறேன்.
- சிவசங்கரி, எழுத்தாளர்