

உலகப் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் பாப்லோ பிக்காசோ. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். ‘வயோதிக கிடார் கலைஞன்’, ‘அவினானின் இளம்பெண்கள்’ உள்ளிட்ட இவரது ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை. இவரது ‘குவர்னிகா’ ஓவியம், ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரத்தின் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சிதைத்ததைப் பதிவுசெய்தது. பிக்காசோ டிசம்பர் 16இல் வரைந்த ஓவியம்தான் ‘சிவப்பு கைப்பிடி நாற்காலி’ (Red arm chair). இது பிக்காசோவின் பெண் உறவுகள் குறித்த ஒரு ஓவியம். ‘பெண்ணின் தலை’, ‘சிவப்புப் பின்புலத்தில் தலை’, ‘முத்தம்’ ஆகிய ஓவியங்களின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய ஓவியம். ஒரு சிவப்புக் கைப்பிடி நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண் இதுதான் இந்த ஓவியம். இந்த ஓவியத்தின் பெண் சரிவரக் காணமுடியாதபடி அரூபியாக இருக்கிறார். இது அவர் திட்டமிட்டதாக இருக்கலாம். அவரைப் பிரிந்து சென்ற அவரது முதல் மனைவி ஓல்கா கோக்லோவாவின் முகத்தை இந்த ஓவியப் பெண்ணின் முகம் ஒத்திருப்பதாகவும் சொல்வதுண்டு.