பேரிடர் காலத்துப் பெருந்துணை

பேரிடர் காலத்துப் பெருந்துணை
Updated on
1 min read

ஒவ்வொரு பேரிடர் காலத்தின்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பட்டியல் ஒன்றை அரசு வெளியிடும். ஆனால், மிக்ஜாம் புயல் தொடர்பான எச்சரிக்கைப் பட்டியலில், ‘வானொலிப் பெட்டி’ இடம்பெறவில்லை. வானொலியின் அவசியத்தை மக்களும் மறந்துவிட்டனர். வானொலியின் முக்கியத்துவம்: வானொலிப் பெட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்போது, கேலிசெய்பவர்களே இன்று அதிகம். ஆனால், வானொலிப் பெட்டிதான் பேரிடர்க் காலங்களில் மக்களுக்குக் கைகொடுக்கும். இந்த முறை வெள்ள பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றபோது நகரில் என்ன நடக்கிறது, மரம் விழுந்தால் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், எங்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்களை வானொலி மூலம் பலர் பெற்றனர்.

இதில் இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அகில இந்திய வானொலி, இந்தி மொழிக்குக் கொடுத்துவரும் முக்கியத்துவம் காரணமாக, சென்னை மழை வெள்ளம் தொடர்பாக உடனுக்குடன் களநிலவரங்களைக் கொடுக்க முடியாமல் போனது. பண்பலை மற்றும் மத்திய அலை சேவைகள் அனைத்தும் வெள்ள விவரங்களை மட்டுமே கூறிவர வேண்டும். ஆனால், டெல்லி அஞ்சல் அதிகரித்ததன் காரணமாக, மணிக்கு ஒருமுறை மட்டுமே களநிலவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. தனியார் பண்பலை வானொலிகள் சில மிகச் சிறப்பாகக் களநிலவரத்தை வழங்கின. ஒரு சில வானொலிகளின் அறிவிப்பாளர்கள் களத்துக்கே சென்று, மக்களிடம் நேரடியாகப் பேசி அவர்களின் இடர்களைத் தீர்த்துவைத்தனர்.

நவீன வானொலிகளின் வசதிகள்: எல்லாம் சரி, மின்சாரமே இல்லாதபோது வானொலிப் பெட்டி மட்டும் எப்படி இயங்கும் என்று கேள்வி எழலாம். இன்று விற்பனையில் உள்ள பெரும்பாலான வானொலிப் பெட்டிகளில், இன்றைய யுகத்துக்குத் தேவையான பல வசதிகள் உள்ளன. பல வானொலிகள் மின்னேற்றம்(சார்ஜ்) செய்துகொள்ளும் வசதியுடனே வருகின்றன. ஒருமுறை ‘சார்ஜ்’ செய்தால், ஒரு வாரம் முழுக்கக் கேட்க முடியும். சில வானொலிப் பெட்டிகளில், பண்பலை மட்டுமல்லாது, மத்தியலை, சிற்றலை ஒலிபரப்புகளையும் கேட்க முடியும். இதில் ‘டார்ச் லைட்’டும் உள்ளதால், பேரிடர்க் காலங்களில் மின்சாரம்துண்டிக்கப்பட்டாலும் இதன் மூலம் வெளிச்சம் பெற முடியும். சில வானொலிப்பெட்டிகள், சூரிய சக்தியிலும் இயங்கும் தன்மை கொண்டது.

மேலும், இதில் உள்ள டைனமோவைக் கையால் சுத்தி பேட்டரியைச் சார்ஜ் செய்துகொள்ளலாம். ஐந்து நிமிடங்கள் கையால் சுற்றினால் ஒரு மணி நேரம் தடையின்றி வானொலியைக் கேட்கலாம். எல்லாவற்றையும்விட, வானொலிப் பெட்டிகளில் நம் கைப்பேசிகளையும் சார்ஜ் செய்வதற்கான வசதியையும் கொடுத்துள்ளனர். எனவே, அனைவர் வீட்டிலும் ஒரு சாதாரண வானொலிப் பெட்டி இருப்பது, இக்கட்டான பேரிடர்க் காலத்தில் பெரிதும் கைகொடுக்கும். சில தொடக்கநிலைக் கைப்பேசிகளில் எஃப்.எம் வானொலியைக் கேட்க முடியும் என்பதால், அதில் ஒன்றைக்கூட வைத்துக்கொள்ளலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in